தமிழக அரசியலில் நீங்கள் எதற்கு தீபா?Sponsoredவணக்கம் தீபா

சமகால தமிழக அரசியலில் சொற்பமாக உள்ள பெண்களில் நீங்களும் சேர்ந்த சிறிது நாட்களிலேயே  பரபரப்பைக் கிளப்பியவர். தமிழக அரசியலில் உங்கள் இருப்பு பற்றியும், இது வரையிலான உங்கள் அரசியல் பயணத்தின் மதிப்பீடு பற்றியும்  பேசுவோமா?

Sponsored


அரசியலில் ஒரு பெண் தடம் பதிப்பது என்பது, இன்னும் 20 வருடங்கள் ஆனாலும் அரிய சாதனையாகத்தான் இருக்கும். அதையும் மீறி, தனக்கு எதிரான அத்தனை சூழல்களையும் தளராமல் எதிர்கொண்டு தமிழக அரசியலில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுமையாக இருந்தவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும், தனது அரசியல் பயணத்தில் செய்த தவறுகளின் காரணமாக பல சறுக்கல்களைச் சந்தித்தார். அவரது மரணம்கூட மர்மத்தில் முடிய அவரின் தவறான அரசியல் அணுகுமுறையும் காரணம். 

Sponsored


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என அனைவரின் மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை இழக்க, அதிமுக-வில் ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி மக்களின் மனதில் வலியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்படவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் அப்போலோ வாசலில், அவரது சாயலில் ஒரு பெண் அங்கும் இங்கும் தென்பட்டார். 'என் அத்தையைப் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள்' என்று மைக்கில் கோபம் கக்கினார். இப்படித்தான் தீபா நீங்கள் தமிழக மக்களுக்கு அறிமுகமானீர்கள். 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால், அவர் விசுவாசிகள் சிலர் உங்களை ஆறுதலோடு பார்த்தார்கள்.  சாயலிலும் நீங்கள் ஜெயலலிதாவை நினைவுபடுத்தியதால், நீங்கள் அவரது இடத்தை நிரப்பினால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். 'நான் அரசியலுக்கு வரப்போகிறேன்' என்ற உங்கள் அறிவிப்பு அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. 'அத்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வருவேன்' என்று நீங்கள் புயலைக் கிளப்பியபோது, உங்களைச் சுற்றி நின்ற ஆயிரத்தி சொச்சம் பேரைத் தாண்டி தமிழகமே உங்களை நிமிர்ந்து பார்த்ததுதான். 

அரசியலில் நீங்கள் ‘அ’ கூட போட்டதில்லை என்றாலும், ஒரு தரப்பினர் உங்களை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக ஏற்றுக்கொண்டனர். அடுத்தடுத்து மீடியாவின் பார்வையில் விழுந்து, அந்தக் குழப்பமான தமிழக அரசியல் களத்தில் நீங்களும் ஒரு புள்ளியாகச் சேர்ந்தீர்கள். ஜெயலலிதாவின் மர்ம மரணத்தால் தமிழகம் கொதித்திருந்த சூழலில் தனியார் தொலைக்காட்சியில் 'தீபாவின் பேட்டி' என்ற விளம்பரம் வந்து, பின்னர் அது திடீரென நிறுத்தப்பட்டபோது, உங்களின் முக்கியத்துவம் இன்னும் பலப்பட்டது. தொலைக்காட்சி நேர்காணலில் எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் அளித்த தெளிவான  பதில் உங்கள் மீதான நம்பிக்கையையும் சிலருக்குப் பலப்படுத்தியது. தமிழகம் முழுக்க உங்களது பேரவை துவக்க வேலைகளும் நடந்தன.

மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த பிப்.24ம் தேதி, 'என் அரசியல் அறிவிப்பை வெளியிடுவேன்' என்றீர்கள். அதைப் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கியத்துவத்தை மீடியா உங்களுக்குக் கொடுத்தது. ஆனால், அதற்கு நியாயம் செய்தீர்களா தீபா? 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை’ என்று நீங்கள் அறிவித்த உங்கள் கட்சிப் பெயரே, உங்கள் தெளிவின்மையையும் தீர்க்கமின்மையையும் சொன்னது. அதன் ஆங்கில சுருக்க வடிவம் 'MAD' என்று, 'பைத்தியம்' என்ற பொருள்படுவதைக்கூட கவனிக்காத அளவுக்குதான் இருந்தனவா உங்கள் கட்சி அறிவிப்பு கவனமும் கலந்துரையாடல்களும்? தொடர்ந்த உங்களின்  அரசியல் நகர்வுகள் அனைத்திலும் உங்களின் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்தினீர்கள். 

அதிமுக-வில் சசிகலாவின் பிரவேசத்தை மக்கள் வெறுத்ததற்குக் காரணம் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியின் பதவிகளையும், மாநில வளங்களைக் கொள்ளை அடிப்பதற்கான உரிமையையும் ஏகபோகமாக வழங்கும் வழக்கம்தான். மேலும், 'ஓ.பி.எஸ்ஸும் வேண்டாம்' என்று மக்கள் சோர்ந்திருந்த வேளையில், அந்த வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு நிச்சயமாக உங்களுக்கு இருந்தது தீபா. ஜெயலலிதாவின் ரத்த பந்தம், சாயல், பெண் என்ற அனுதாபம் என்று அனைத்தும் உங்களுக்குக் கைகொடுத்திருக்கும். மற்றவர்கள் மீதான வெறுப்பு எல்லாம் உங்களுக்கான மலர் மாலைகளாக மாறி தோளில் விழுந்திருக்கும். விஜயகாந்த் முதல் கெஜ்ரிவால் வரை, 'யாரைத் தேர்ந்தெடுப்பது?' என்று மக்களின் மனம் ஊசலாடிய ஒரு சூழலில் புதுவரவாகத் தோன்றி வெற்றி மாலை சூடிக்கொண்டவர்களே. அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கும் இருந்தது. ஆனால் அதை நீங்களே பாழாக்கிக்கொண்டீர்கள் தீபா. 

நீங்கள் துவங்கிய கட்சியில், அதே பழைய தவற்றைச் செய்தீர்கள்; குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் கொடுக்க முடிவெடுத்தீர்கள். ஆதரவாளர்கள் அதிருப்தியானார்கள். உடனே ஆதரவாளர்களுக்குப் பதவிகள் கொடுக்க,  குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்பட்டது. அதை சமாளிக்க முடியாமல் நீங்கள் திணறினீர்கள். உங்கள் கணவர் மாதவன் தனிக்கட்சி துவங்கியது, நகைச்சுவையின் உச்சம். இந்த இருதரப்புக்கும் இடையே உள்ள சிக்கல்களைக்கூட சமாளிக்க முடியாத நீங்கள், அரசியல் என்ற கடலில் எப்படிக் கரைசேர்வீர்கள்? 

'ஜெயலலிதா வாரிசு' என்ற போர்வையில் அதுவரை உங்களை  பார்த்துக்கொண்டிருந்த கூட்டம், உங்களின் குழறுபடிகள் சகிக்காமல், 'அரசியல்ல யாருங்க இந்த தீபா?' என்று வெகுண்டு கேட்க ஆரம்பித்தது. ஆம்... தீபா யார் நீங்கள்? மக்களுக்காக அரசியலுக்கு வந்தவரா? அத்தை சொத்தை மீட்கும் நடவடிக்கையாக அரசியலைப் பற்றியவரா? விடை கடினமானதல்ல.

இந்நிலையில், அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களைகட்டியுள்ளது. படகுச் சின்னத்தில் வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறீர்கள். அது தொடர்பான மீடியா நேர்காணல்களில் முக்கிய கேள்விகளுக்கு, 'நீங்களே சொல்லுங்களேன்' என்ற உங்கள் பதில், அற்புதம். 'தீபா ஒரு மாற்று' என்று நம்பியிருந்த சிலரின் எண்ணத்தையும் சிதைத்து, அரசியலின் கேலிப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகிவிட்டன உங்களைப் பற்றிய செய்திகள் என்பதே உண்மை. 

மூன்று மாதங்களுக்கு முன், 'தீபா என்ன சொல்லப்போகிறார், செய்யப்போகிறார்?' என்ற எதிர்பார்ப்பு இருந்ததுதான். ஆனால், அது கடந்தகாலமாகிவிட்டது. இன்று உங்களை சக போட்டியாளராக எந்த அரசியல்வாதியும் கொள்ளவில்லை. இன்றைய தமிழக அரசியல் சூழலில் நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதுவும் மாறிவிடப்போவதில்லை. 'நீங்கள் எதற்கு தீபா?' என்ற மக்களின் கேள்விக்கு, அர்த்தமுள்ள பதில் தருமா உங்கள் எதிர்காலம்?! 

- யாழ் ஸ்ரீதேவிTrending Articles

Sponsored