ஆளுநர் வழிகாட்டியாக தான் இருக்க வேண்டும் - கிரண்பேடிக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை



Sponsored



மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தை செயல்படவிடாமல் முட்டுக்கட்டை போடும் ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகளை ஏற்க முடியாது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இடையில் மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் ஒருவரை இடமாற்றம் செய்ய புதுச்சேரி சபாநாயகர், தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து புதுச்சேரி தலைமைச் செயலாளரும் நகராட்சி ஆணையரை பணியிட மாற்றம் செய்தார். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்த கிரண்பேடி, அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தனக்குதான் அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். ஏற்கெனவே, ஆளும் தரப்பினருடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநர் கிரண்பேடி, தற்போது அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான விவகாரங்களிலும் தலையிடும் சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sponsored


இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் நிர்வாக ரீதியாக நெருக்கடியை உருவாக்குவது மரபை காப்பாற்றும் செயல் அல்ல. மற்ற மாநிலங்களைப் போல ஆளுநர் சிறந்த முறையில் வழிகாட்டுபவராக தான் இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் நிர்வாகம் செய்ய வேண்டுமே தவிர ஆளுநர் அல்ல. முதல்வரையும் அமைச்சரவையையும் புறக்கணிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சபாநாயகரின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தை செயல்படவிடாமல் முட்டுக்கட்டை போடும் ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகளை ஏற்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

Sponsored




Trending Articles

Sponsored