செந்தில் பாலாஜி மூலம் ஆட்சிக்கு செக்- திட்டத்தில் தி.மு.க!



அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு, ஒரு புறம் முயற்சிகள் நடைபெற்றுவரும் நேரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து அ.தி.மு.க தரப்புக்கு அடுத்த ஷாக்  கொடுக்க, தி.மு.க திட்டமிட்டுவருகிறது. 

Sponsored


இரும்புக் கோட்டையாக சித்தரிக்கப்பட்ட கட்சி, அ.தி.மு.க. ஆனால், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அந்தக் கட்சியின் அடித்தளமே ஆட்டம் காணத் துவங்கிவிட்டது. அ.தி.மு.க-வில் இருந்த கட்டுக்கோப்பு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைய ஆரம்பித்தது. சசிகலா குடும்பத்தைப் பார்த்து பவ்வியம் காட்டியவர்கள், அந்தக் குடும்பத்துக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் மத்திய அரசு, ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.கவைத் தங்களது கைப்பாவையாக மாற்றுவதற்குத் திட்டமிட்டது. அ.தி.மு.க இரண்டு அணிகளாக உடைந்து, ஆட்சிக்கே ஆபத்தும் வந்தது. ஒரு வழியாக எம்எல்ஏ-க்களைச் சரிகட்டி, ஆட்சியை தற்காலிகமாகக் காப்பாற்றினார்கள் சசிகலா தரப்பினர். 

Sponsored


கரணம் தப்பினால் மரணம் என்பது போல 122 எம்எல்ஏ-க்களோடு ஆட்சியைக் காப்பாற்றியது சசிகலா தரப்பு. முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். ஆட்சியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும் என்று நினைத்த தி.மு.க-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ஆட்சியிலோ, முதல்வருக்கு கட்டுப்படாத அமைச்சர்களும் அமைச்சர்களை உதாசினப்படுத்தும் எம்எல்ஏ-க்களும் என, கட்சியும் ஆட்சியும் திண்டாடிவந்தன. ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே அரசு அதிகாரிகளின் செயல்பாட்டைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த விவகாரம் முடிந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அடுத்த அதிரடியைக் கிளம்பியுள்ளார். இதைத் தங்களுக்குச் சாதகமாக்கி வளைக்க, தி.மு.க திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Sponsored


அ.தி.மு.க - வின் இரண்டு அணிகளும் இணைவதிலே பல்வேறு கருத்து வேறுபாடுகள் தொடர்ச்சியாக இருந்துவரும் நிலையில், ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் கைவசம் எம்எல்ஏ-க்களை வைத்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராகப் பவனிவந்த நேரத்திலேயே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி இருந்தார். ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களில், ஐந்து பேர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களாம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும், தம்பிதுரை மீதும் மீடியாவில் குற்றச்சாட்டு கூறுவதற்கு முன்பே, முதல்வரிடம் செந்தில் பாலாஜி சொல்லியுள்ளார். ஆனால், முதல்வர் தரப்பில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதனால், இப்போது இரண்டு அணியிலும் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி என்கிறார்கள்.

செந்தில் பாலாஜியின் மன வருத்தத்தை தி.மு.க தரப்பு மோப்பம் பிடித்துள்ளது. அதன்பிறகுதான் செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் இழுக்க முடியுமா என்ற ஆலோசனைக்கு வந்துள்ளது தி.மு.க தமைமை. யாரைவைத்து இந்தப் பேச்சுவார்தை நடத்துவது என்று ஆரம்பத்தில் யோசித்த தி.மு.க தலைமை, இறுதியாக தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரிடம் இந்த அசைன்மென்ட்டைக் கொடுத்துள்ளது. இவரும், செந்தில் பாலாஜியும் நண்பர்கள் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும் என்பதால், அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவரும், செந்தில் பாலாஜியிடம் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. 'ஐந்து எம்எல்ஏ-க்களை மட்டும் இப்போது அழைத்துவாருங்கள்' என்று தி.மு.க தரப்பில் கேட்டுள்ளனர். 122 எம்எல்ஏ-க்களில், ஐந்து எம்எல்ஏ-க்கள் வந்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று தி.மு.க திட்டமிடுகிறது. 

தினகரனுக்கு ஆதரவான சில எம்எல்ஏ-க்கள், தினகரனை ஒதுக்கிவைத்த மன வருத்தத்தில் இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, தி.மு.க திட்டமிடுகிறது. இந்த நேரத்தில், செந்தில் பாலாஜியைவைத்து போர்க்கொடி தூக்கினால், தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் வெளியே வந்துவிடுவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள் தி.மு.க-வினர். செந்தில் பாலாஜி போர்க்கொடி தூக்கி அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறினால், அவரை தி.மு.க அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறதாம். கரூர் மாவட்டத்தில் கே.சி.பழனிச்சாமியைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி தி.மு.க-வுக்கு ஆட்கள் இல்லை என்பதால், செந்தில் பாலாஜி வந்தால் ஏற்றுக்கொள்ள நினைக்கிறது. செந்தில் பாலாஜியிடம் இந்த டீலிங் குறித்துப் பேசப்பட்டுள்ளதாம். ஆனால், முடிவு சொல்லாமல் செந்தில் பாலாஜி இழுக்கிறார் என்கிறார்கள் தி.மு.க-வினர். அ.தி.மு.க-வின் தலைமை மீதான வருத்தத்தை வெளியே காட்டிவிட்டதால், செந்தில் பாலாஜி எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடுவார் என்று பலமாக நம்புகிறது தி.மு.க. 

இன்னும் சில தினங்களில் மீடியாவில் அதிகமாக அடிபடும் நபராக செந்தில் பாலாஜி இருக்கப்போகிறார் என்பதுதான் கடைசிக் கட்டத் தகவல் 

- அ.சையது அபுதாஹிர்



Trending Articles

Sponsored