''அமைச்சர்களே... எடுத்த உறுதிமொழி ஞாபகம் இருக்கிறதா?" குடிமக்களின் குரல்Sponsored''அமைச்சர்களே! உறுதிமொழி எடுத்தது ஞாபகம் இருக்கிறதா? பதவிப் பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை தமிழக அமைச்சர்கள் மறந்துவிட்டார்களே''' என்று சந்தேகம் கிளப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பதவி ஏற்பு விழாக்களில், ''இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன்” என பதவி ஏற்றுக்கொள்பவர்கள் உறுதிமொழி எடுப்பார்கள்.

Sponsored


இந்த உறுதிமொழியைத் தமிழக அமைச்சர்கள் மறந்துவிட்டார்களோ என கேள்விகள் எழுப்புகிறார்கள். தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகளின் மீது ஊழல், கிரிமினல் குற்றச்சாட்டுகள் எழுந்தால் அந்த நபர் தனது பதவியைத் தார்மிக முறையில் ராஜினாமா செய்துவிட்டு, அந்த வழக்கை நடத்தி, தான் அப்பழுக்கற்றவர் என நிரூபிக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அதிகாரத்தில் இருக்கும் அந்த நபர், முறையான விசாரணை நடக்கவிடமாட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

Sponsored


இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “இந்திய அரசியலில், குற்றச்சாட்டுகள் எழுந்ததும், தார்மிக ரீதியாகத் தனது பதவியை ராஜினாமா செய்தவர்கள் உண்டு. கடந்த 1956-ல் அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பேர் பலியானார்கள். இந்தியாவையே உலுக்கிய இந்த விபத்துக்கு, தார்மிக பொறுப்பேற்று, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியும், இணை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அழகேசனும், தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அடுத்து, மத்திய ராணுவ அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவே, அவரும் பதவியை ராஜினாமா செய்தார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததும், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா, முதலில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் உறவினருக்குச் சலுகை அளித்தது என குற்றச்சாட்டுகள் எழுந்ததும், சிலமாதங்களுக்கு முன், கேரளா போக்குவரத்துத் துறை அமைச்சர் சுசீந்திரன், தொழில் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

இதற்குமுன், திருச்சி துணைமேயராக இருந்த முன்னாள் அமைச்சரின் மகன் ஆசிக்மீரான், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, பதவிகள் பறிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய நிலை அப்படியே தலைகீழாக மாறிப்போனது. அமைச்சர் காமராஜ் மீது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கான்ட்ராக்டர் குமார் என்பவர் ரூபாய் முப்பது லட்சத்தை அமைச்சர் காமராஜ் ஏமாற்றியதாகக் கொடுத்த புகாரில், அதன்மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, கடந்த வருட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகே சிலதினங்களுக்கு முன், அமைச்சர் காமராஜ் மீது, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகே, அமைச்சர் காமராஜ் வழக்குப்பதிவு செய்த, நன்னிலம் டி.எஸ்.பி அறிவானந்தம் தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு பிரிவுத் துறைக்குத் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் காமராஜ் மீது என்ன வழக்கு என்றால், வீட்டை காலி பண்ணித் தருவதாக ரூபாய் முப்பது லட்சம் வாங்கிக்கொண்டு தரமறுக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. அவர் அமைச்சரா, இல்லை தாதாவா என்கிற கேள்வி எழலாம்.

அதேபோல், நின்றுபோன ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 'பணப் பரிமாற்றம்' தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. அப்போது அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேகர்  ரெட்டி, கரூர் அன்புநாதன் ஆகியோருடன்,முன்னாள் இன்னாள் அமைச்சர்களின் நெருக்கம் ஊரறிந்த ஒன்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் பணம் பதுக்கிய விவகாரத்தில் சிக்கினார்கள். ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்துக்குள் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது.

தற்போது, சேகர் ரெட்டியின் டைரியில் 12 அமைச்சர்கள்,அதிகாரிகள்,174 அ.தி.மு.க எம்.எல்.ஏ வேட்பாளர்களுக்குத் தலா 4 கோடி ரூபாய் என 400 கோடி ரூபாய் கைமாறி உள்ள ஆதாரங்களை வருமானவரித் துறை அரசுக்கு வழங்கி உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி ரம்யா, அப்பா சின்னதம்பி எனப் பலரும் தொடர் விசாரணைக்கு ஆளாகி உள்ளார்கள். ஆனாலும் இவர்கள் பொறுப்பில் நீடிக்கிறார்கள். தொடர்ந்து முன்னாள், இன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இவர்களுக்குத் தார்மிக பொறுப்புகளே இல்லை என்பதுபோல் நடக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டங்களைக் காப்பாற்ற வேண்டிய ஆளுநர், நடவடிக்கை எடுக்காத தமிழக அரசிடம் அறிக்கை கேட்க வேண்டும், இதுவரை ஆளுநர், அதைச் செய்யாமல் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனை” என்றார்கள்.

ஆள்பவர்கள் சரியாக இருந்தால்தான் சட்டம் தனது கடமையைச் செய்யும். Trending Articles

Sponsored