'இரட்டை இலை' கிளைமாக்ஸ்...லாரிகளில் பிரமாணப் பத்திரங்கள் !



Sponsored



தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க., இரு அணிகளாக மாதக் கணக்கில் பிரிந்து நிற்கிறது. அ.தி.மு.க-வின் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது.  சசிகலா- ஓ.பி.எஸ். அணிகளுக்கு இந்தியth தேர்தல் ஆணையம் ஜூன் 16 ஆம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுத்துள்ளது. இந்நிலையில் சசிகலா தரப்பு, கூடுதலாக 70 ஆயிரம் பக்கங்கள்கொண்ட பிரமாணப் பத்திரங்களை நேற்று (புதன்)  தேர்தல் ஆணையத்திடம் தாக்கல்செய்துள்ளது.

சசிகலா அணியின் சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் ஆணையத்தில் அப்போது கூடுதலாக ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்கள் (பிரமாணப் பத்திரங்கள்), இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம்  ஒப்படைக்கப்பட்டன. பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னர் மைத்ரேயனும், இப்போது மனோஜ் பாண்டியனும் ஆவணங்களை மாறி மாறி தாக்கல்செய்துவருகின்றனர். நேற்றுமுன் தினம், இவர்களும் ஒரு மினி லாரியில் ஆவணங்களை அள்ளிக்கொண்டுவந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றனர்.

Sponsored


இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றுவதில், சசிகலா - பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி தொடர்ந்து இருந்துவருகிறது. இந்தப் போட்டி, அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து, தற்போது பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்வதில் வந்து நிற்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையம், 'உண்மையான, அ.தி.மு.க., யார் என்பதை நிரூபிக்கும் விதமாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்யுங்கள்' என்று  இரு தரப்பையும் அழைத்துச் சொல்லவே, ஓ.பன்னீர்செல்வம் அணியும் சசிகலா அணியும்  தங்களின் பலத்தை நிரூபிக்கும்  வகையில் ஆவணங்களைத் தாக்கல்செய்துவருகின்றனர்.

Sponsored


ஜூன் 16ஆம் தேதி வரை, ஆவணங்களைத் தாக்கல்செய்ய இரு அணிகளுக்கும்  கால அவகாசம் தரப்பட்டுள்ளதால், அதற்குள் எத்தனை முறை இரு அணியினரும் தேர்தல் கமிஷனுக்கு லாரி பிடித்து வரப்போகிறார்களோ தெரியவில்லை.  சசிகலா - ஓ.பி.எஸ். அணியினர் குவியல் குவியலாக ஆவணங்களைத் தாக்கல்செய்வதால், தேர்தல் கமிஷன்  கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. 

அ.தி.மு.க-வின் (சசிகலா அணி) மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பித்துரை, "இரண்டு அணிகளும் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்று பேட்டியளிக்கிறார். இன்னொரு பக்கம், அவரவர் அணி பாதுகாப்புக்கு ஆவணச் சேகரிப்பு நடக்கிறது.

'சின்னத்தைக் கைப்பற்றிக்கொள்வதில் காட்டும் வேகம், அணிகள் இணைப்பில் காட்டப்படுவதாகத் தெரியவில்லை' என்கின்றனர் அடிமட்டத் தொண்டர்கள்.
இருதரப்பும் கொண்டுவந்து கொட்டும் ஆவணங்களைப்  படித்து சரிபார்த்து, யாருக்கு சின்னம் வழங்குவது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வருவதற்குள், அடுத்தடுத்து ஆவணங்களுடன் அணிகளின் லாரிகள் வராமலிருக்க வேண்டுமே!
 



Trending Articles

Sponsored