குழப்பத்தில் தினகரன்... வழிமொழிந்த எடப்பாடி- பி.ஜே.பி-யின் மாஸ்டர் பிளான்!Sponsored“அ.தி.மு.க மூன்று அணிகளாக இருந்தாலும், மூன்று அணிகளையும் கட்டுப்படுத்தும் சூத்திரம் பி.ஜே.பி-க்குத் தெரிந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க அணிகள் ஒருசேர பி.ஜே.பி-யை ஆதரிப்பதன் பின்னணிக் காரணம் இதுதான். 

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கடந்த மாதம் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் கொடுத்த உறுதி மொழியே ’ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு’ என்பதுதான். பன்னீர்செல்வம்  போர்க்கொடி துாக்கிய நேரம்முதலே பி்.ஜே.பி. ஆதரவு என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துவருவதும்தான் பி.ஜே.பி தரப்பு அ.தி.மு.க. மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அ.தி.மு.க என்ற இயக்கம் இனி பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது என்பதற்கு மீண்டும் ஒரு அத்தாட்சிதான் ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அணிகளின் ஆதரவும், அதைத் தொடர்ந்து டெல்லிக்கே சென்று வேட்பாளரை வழிமொழிந்ததும். 

Sponsored


ஒரு மாநிலத்தின் கட்சியாக இருந்துகொண்டு தேசிய கட்சிகளையே மிரட்டியவர் ஜெயலலிதா. அதே கட்சியின் நிலை இன்று தேசிய கட்சியின் நீரோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடத்தியபோது அதில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் மட்டுமல்ல. மேலும் சில எம்எல்ஏ-க்களும் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் ’மத்திய அரசோடு இணக்கமாகப் போனால்தான் நமக்கு நல்லது’ என்று பேசியுள்ளார்கள். ஆனால், அந்தக் கூட்டம் நடத்துவதற்கு முன்பே டெல்லியிலிருந்து எடப்பாடி தரப்புக்கு ’ஆதரவு அறிவிப்பை விரைவில் வெளியிடுங்கள்’ என்று அழுத்தம் வந்துள்ளது. அதனால்தான் இஸ்லாமியர்களின் இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டு சமூக நீதி பேசிய முதல்வர், அடுத்த ஒரு மணிநேரத்தில் பி.ஜே.பி ஆதரவு அறிவிப்பை வெளியிட்டு, தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.  

Sponsored


எடப்பாடியின் அறிவிப்புக்கு பின்னணியில் பெங்களுரு சிறையிலிருந்து வந்த உத்தரவும் ஒரு காரணம் என்கிறார்கள்.பெங்களுரு சிறையில் இருக்கும் சசிகலாவை  தினகரனும் தம்பிதுறையும் ஒரே நாளில் சந்தித்தனர். முதலில் சந்தித்த தம்பிதுரை “ மத்திய அரசு ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற தகவலை உங்களிடம் சொல்ல சொன்னார்கள்” என்று பி.ஜே.பி-யின் துாதுவராகவே தம்பிதுரை அப்போது சசிகலாவிடம் பேசியுள்ளார். இப்போதுள்ள நெருக்கடி நிலையில் இதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் அப்போது சசிகலாவிடம் விளக்கியுள்ளார். அன்று மாலை சசிகலாவை  சந்தித்த தினகரனிடம் சசிகலா இதுகுறித்து பேசியுள்ளார். ஆனால், தினகரன் எதுவும் பதில் சொல்லாமல் இருந்துள்ளார். அதன்பிறகுதான் எடப்பாடி அறிவிப்பு வெளியானது. எடப்பாடி அறிவிப்பு வெளியாகும் முன்பே பன்னீர் அணியிலும் பி.ஜே.பி. ஆதரவு என்று முடிவாகியது. இரண்டு அணிகள் ஆதரவு என்றாலும், தினகரன் தரப்பின் நிலை குறித்து பி.ஜே.பி தரப்பு அறிந்துகொள்ள முடிவுசெய்தது.


நேற்று காலை, எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் டெல்லி அமித்ஷா அலுவலகத்திலிருந்து தொடர்புகொண்டார்கள். அமித்ஷாவே இரண்டு பேரிடமும் பேசியுள்ளார். “வேட்புமனு தாக்கல் நாளை (இன்று) நடைபெற உள்ளது. நீங்கள் டெல்லிக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார். அதன்பிறகுதான் இருவரின் டெல்லி பயணத்திட்டமும் உறுதியானது. இந்தத் தகவல் தினகரன் தரப்புக்கு தெரிந்தும் அமைதியாகத்தான் இருந்துள்ளார். டெல்லிக்கு சென்ற பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரையும் பி.ஜே.பி.முக்கிய பிரமுகர் ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகுதான் தினகரன் நிலை குறித்து பேச்சு எழுந்துள்ளது. தினகரன் தரப்பு எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கிறது என்ற தகவல் அங்குள்ளவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் மூலம் தினகரன் தரப்பை தொடர்புகொண்டு சில விவகாரங்களை அப்போது எடுத்து சொல்லியுள்ளார்கள். 

தினகரன் தரப்பு அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது. இன்று வேட்புமனு தாக்கல் துவங்கும் முன்பு பி.ஜே.பி.க்கு ஆதரவு என்று அறிக்கை வர காரணம் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற அந்த ஆலோசனையின் விளைவுதான்  என்கிறார்கள். டெல்லியில் வைத்தே பன்னீருக்கும் பழனிசாமிக்கும் சமாதான நடவடிக்கையும் பி.ஜே.பி. தரப்பிலிருந்து செய்துள்ளார்கள். ஆட்சியும் கட்சியும் எங்கள் கட்டுப்பாட்டில் என்பதை சொல்லாமல் சொல்லவே ஜனாதிபதி வேட்புமனுவுக்கு இருவரையும் டெல்லிக்கு அழைத்து வழிமொழிய வைத்தன் பின்னணியாம். Trending Articles

Sponsored