ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது பற்றி நல்லகண்ணு என்ன சொல்கிறார்?Sponsoredதிருச்சி பால்பண்ணை - துவாக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்கான சர்வீஸ் சாலை இல்லாததால், இங்கு அதிகப்படியான விபத்துகள் நடக்கின்றன. இதனால், இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் விபத்தில் சிக்கியுள்ளனர் என்பதாலும் அந்தப் பகுதி மக்கள் சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய - மாநில அரசுகள் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கியதுடன், சாலைகள் நிலம் கையகப்படுத்த அறிவிக்கையையும் வெளியிட்டது. ஆனாலும் இந்தத் திட்டம் ஏனோ கிடப்பில்போனது.

இதனைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு, ஆர்.டி.ஓ தலைமையிலான குழு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி... விரைவில் சர்வீஸ் சாலை போடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், அதன் பிறகும், பணிகள் நடக்கவில்லை. இந்தநிலையில் அந்தப் பகுதி மக்கள், அதே சர்வீஸ் ரோடு கோரிக்கைக்காகக் கடந்த 9-ம் தேதிமுதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அ.தி.மு.க எம்.பி குமார், திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்தநிலையில், 11-வது நாளான நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.

Sponsored


அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "இதுவரை இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள 4,000-க்கும் மேற்பட்ட விபத்துகளால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, சர்வீஸ் ரோடு உடனடியாக அமைக்க அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கவேண்டும். மக்களின் உயிரைக் காக்க நடைபெறும் இந்தப் போராட்டத்தில் நான் எப்போதும் பங்கேற்பேன். அரசு உடனடியாகத் திருச்சி - துவாக்குடி சாலையில் சர்வீஸ் ரோடு அமைத்து உயிர்ப்பலிகளைக் காப்பாற்ற வேண்டும். அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உள்ளது. ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாணவி வளர்மதி முன்பு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து அவரைக் குறிவைத்து வழக்குகள் போடுவதும், தற்போது வளர்மதி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வழக்கைத் திரும்ப பெறப்பட வேண்டும். ஆட்சிக்கு உரிமை இல்லாதவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிச் சர்வாதிகாரம் நடத்திவருகிறார்கள்" என்றார்.

Sponsored


ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவார்கள் எனப் பரபரப்பான பேச்சுகள் உலாவரும் இந்தச் சமயத்தில், அவர்கள் அரசியலுக்கு வரலாம் என தமிழகத்தின் மூத்த தலைவர் பச்சைக்கொடிக் காட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Trending Articles

Sponsored