பன்னீர் செல்வத்தின் போராட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அசைக்குமா?Sponsoredஎடப்பாடி அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் அணி வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. எடப்பாடிக்கு எதிராக எதிர், எதிர் துருவங்களிலிருந்து தாக்குதல் துவங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்கள் கடந்த பிறகு இப்போது அடுத்தடுத்த சோதனைகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது. ரத்தத்தின் ரத்தங்களாக இருந்தவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோஷ்டி மோதல் உச்சகட்டத்துக்கு வந்துள்ளது.  

''ஆட்சியை எடப்பாடி நடத்தினால் கட்சியை நம்மிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் ஆட்சியே இல்லாமல் செய்துவிட்டு கட்சியை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்” என்ற திட்டத்தில் தினகரன் தரப்பு உள்ளது. தினகரன் தரப்பின் வியூகங்களை உடைக்க  எடப்பாடி தரப்புக்கு ஒரே வாய்ப்பாக பிரிந்து சென்ற பன்னீர் செல்வத்தை சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தைக் குழு கலைக்கபட்ட நிலையில் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பன்னீர் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். ஆனால், பன்னீர் செல்வம் தரப்பு வைக்கும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை எடப்பாடி அணிக்கு இருந்துவந்தது. 

Sponsored


இரண்டுமாதங்கள் இணைவதற்கு நேரம் கொடுத்தேன். ஆனால், இரண்டு தரப்பிலும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் நான் இறங்கப்போகிறேன்” என்று சில தினங்களுக்கு முன் தினகரன் அறிவித்தார். கட்சி அலுவலகத்துக்கும் தினகரன் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கட்சியின் கட்டுப்பாடு தினகரன் கைக்கு போய்விடக் கூடாது என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறது.  தினகரன் தரப்பின் நெருக்கடியை சமாளிக்க “ பன்னீர் அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

Sponsored


அதாவது, இரண்டு அணிகளும் இணைந்துவிடுவோம், நீங்கள் கட்சிக்குள் வரவேண்டாம் என்று தினகரனுக்கு மெசேஜ் சொல்வதுபோல ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். ஜெயக்குமாரின் இந்த கருத்து பன்னீர் செல்வத்தின் அணியில் புகைச்சலை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறாத நேரத்தில் எதற்காக பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள நம்மை பகடைக் காயாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்று பன்னீரிடமே, அந்த அணியின் நிர்வாகிகள் புலம்பியுள்ளார்கள். 

அதனால் எடப்பாடிக்கு எதிராக நாம் கருத்துகளை தெரிவிக்காவிட்டால், இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என்ற முடிவுக்கு பன்னீர் அணியினர் வந்தபிறகே, மைத்ரேயன் எடப்பாடி ஆட்சியில் தவறுகள் நடப்பதாக அறிக்கை விட்டார். தீரன் சின்னமலை விழாவுக்குச் சென்றுவிட்டு வந்த பன்னீர் செல்வம் “எடப்பாடி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது” என்று நேரடியாகவே குற்றம்சாட்டினார். மக்களிடம் தங்கள் கருத்து எடுபட வேண்டும் என்ற முடிவில்தான் இறுதியாக வரும் 10-ம் தேதி அன்று எடப்பாடி ஆட்சியைக் கண்டித்து பன்னீர் அணி நடத்தும் போராட்டம் முடிவாகியது. 
பன்னீர் தரப்பு அறிவித்துள்ள இந்த போராட்டம் எடப்பாடி தரப்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சுற்றுப் பயணத் திட்டம், நிர்வாகிகள் அறிவிப்பு என்று அடுத்தடுத்து அஸ்திரங்களை எடப்பாடிக்கு எதிராக தினகரன் ஏவி வரும் நிலையில் இப்போது பன்னீர் செல்வமும் திரும்பியிருக்கிறார். 

அணிகள் இணைப்பு என்பதே சாத்தியமில்லை, சசிகலாவின் பதவி செல்லாது என்று அறிவிப்பு வந்தபிறகு விரைவில் கட்சி எங்கள் வசம் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பன்னீர் அணியினர். 'ஆட்சியை நாங்கள் கவிழ்க்கத் தேவையில்லை, தினகரனே அதற்கு போதும்' என்று  நக்கலாக சொல்கிறார்கள் பன்னீர் அணியினர்.
ஆறுமாத ஆட்சிக்கு ஆபத்து ஆரம்பித்துவிட்டதை கொஞ்ச கொஞ்சமாக உணர ஆரம்பித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.Trending Articles

Sponsored