அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!" - தெய்வத்தின் குர'லில் காஞ்சி மகா பெரியவர்Sponsoredகிழப் பாட்டி ஒருத்தி. பாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டிருந்த இடத்திலேயே கிடப்பவள். ஆனால், இந்தப் பாட்டி அப்படி இல்லை. இவள் நின்ற இடத்தில் நிற்காமல் இந்தத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக்கொண்டே இருந்தாள். ஒரு குக்கிராமம் பாக்கியில்லாமல் ஊர் ஊராக, தெருத் தெருவாக ஓடிக்கொண்டேயிருந்தாள். அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு உற்சாக சக்தி இருந்தது. பாட்டி விஷயம் இப்படி இருக்கட்டும். குழந்தை ஒன்று. ‘கஷுக் முஷுக்’ என்று நல்ல ஆரோக்கியமாக இருக்கிற குழந்தை அது. குழந்தை என்றால் பொதுவாக என்ன பண்ணும்? துள்ளி விளையாடும். ஒரு க்ஷணம்கூட இருந்த இடத்தில் இருக்காமல் ‘துரு துரு’ என்று ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் இந்தக் குழந்தை இதற்கு நேர்மாறுதல். உட்கார்ந்த இடத்தைவிட்டு அது அசைவதில்லை.

படம்: N. அருணகிரி

Sponsored


வேடிக்கையான பாட்டி. வேடிக்கையான குழந்தை! குழந்தை மாதிரி பாட்டி ஓடிக் கொண்டிருக்கிறாள். பாட்டி மாதிரி குழந்தை இருந்த இடத்தைவிட்டு நகராமல் உட்கார்ந்திருக்கிற‌து. ஆனால், அந்த‌ப் பாட்டி த‌ள்ளாத‌ வய‌சிலும் அத்த‌னை உற்சாகத்தோடு ஓடி ஆடிக் கொண்டிருந்ததற்கு இந்தக் குழந்தைதான் கார‌ண‌ம். இந்த‌க் குழந்தை கொடுத்த‌ ச‌க்தியினால்தான் அவ‌ள் அவ்வ‌ள‌வு காரிய‌ம் செய்தாள்.

Sponsored


இந்த‌ப் பிள்ளை யார்?

“பிள்ளை” என்றாலே அவ‌ர்தான். ம‌ரியாதையாக‌ப் “பிள்ளையார்” என்கிறோமே, அவ‌ர்தான் அந்த‌க் குழ‌ந்தை. யாராவ‌து ஒருத்த‌ர் இட‌த்தைவிட்டு ந‌க‌ராம‌ல் இருந்தால் ‘க‌ல்லுப் பிள்ளையார் மாதிரி” என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌ம்! ச‌க‌ல‌ உல‌கங்க‌ளுக்கும் தாய் த‌ந்தையான‌ பார்வ‌தி ப‌ர‌மேச்வ‌ர‌ரின் மூத்த‌ பிள்ளை பிள்ளையார். அத‌னால்தான் த‌மிழ் நாட்டில் அவ‌ரைப் “பிள்ளையார்” என்று சொல்கிறோம்.

ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் இவ‌ரை க‌ணேஷ் (க‌ணேச‌ர்), க‌ண‌ப‌தி என்பார்க‌ள். சிவ‌பெருமானின் ப‌டைக‌ளுக்கு, பூதகணங்களுக்கெல்லாம் பிள்ளையார்தான் தலைவர், அதனால் க‌ணேச‌ர், க‌ண‌ப‌தி என்று பெய‌ர். இவ‌ருக்கு மேலே த‌லைவ‌ர் யாரும் கிடையாது. எல்லாவ‌ற்றுக்கும் முந்திய‌வ‌ராக‌, முத‌ல்வ‌ராக‌, மேலாக‌ இருப்ப‌வ‌ர் அவர். அவ‌ருக்கு மேலே இன்னொரு த‌லைவ‌ர்  இல்லை. அத‌னால் ‘விநாய‌க‌ர்’ என்றும் பெய‌ர். ‘வி’ என்ப‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒன்றை உய‌ர்த்திக் காட்டுவ‌த‌ற்கும் சில‌ சம‌ய‌ங்க‌ளில் ஒன்றுக்கு எதிர்ம‌றையான‌தைக் (opposite) குறிப்பிட‌வும் வார்த்தைக்கு முத‌லில் வ‌ரும். இங்கே “நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர்” என்று எதிர்ம‌றையாக‌ வ‌ருகிற‌து. த‌ம‌க்குமேல் ஒரு நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர் என்று அர்த்த‌ம்.

அவ‌ர் செய்யாத‌ அநுக்கிர‌ஹ‌ம் இல்லை. குறிப்பாக‌, ந‌மக்கு வ‌ருகிற‌ விக்கின‌ங்க‌ளை எல்லாம் அழிக்கிற‌வ‌ர் அவ‌ர்தான். ஆகையால் ‘விக்நேச்வ‌ர‌ர்’ என்றும் அவ‌ரைச் சொல்கிறோம். எந்த‌க் காரிய‌த்துக்கும் த‌டை வ‌ராம‌ல் இருப்ப‌த‌ற்காக‌வே முத‌லில் இவ‌ரைப் பிரார்த்திக்கிறோம். முத‌ல் பூஜை இவ‌ருக்குத்தான். க‌ஜ‌முக‌ன், க‌ஜ‌ராஜ‌ன் இப்ப‌டியெல்லாம் அவருக்குப் பெய‌ர் இருக்கிற‌து. யானை முக‌த்தோடு அவ‌ர் விள‌ங்குவ‌தால் இந்தப் பெய‌ர்க‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌.

யானைக்குத் தேக‌ப‌ல‌ம் மிக‌வும் அதிக‌ம். ஆனாலும் அது சிங்க‌ம், புலி போல் ம‌ற்ற‌ப் பிராணிக‌ளை ஹிம்சிப்ப‌தில்லை. ப‌ர்மா, ம‌லையாள‌ம் மாதிரி இட‌ங்க‌ளில் ஜ‌ன‌ங்க‌ளுக்காக‌ யானைக‌ள்தான் பெரிய‌ பெரிய‌ காரிய‌ங்க‌ளைச் செய்கின்ற‌ன‌. பிள்ளையாரும் இப்ப‌டித்தான் ரொம்ப‌ ச‌க்திவாய்ந்த‌வ‌ர்; ஆனாலும் அதைக் காட்டிக் கெடுத‌ல் செய்யாம‌ல் ந‌ம‌க்கெல்லாம் ந‌ன்மையே செய்துகொண்டிருப்பார். யானைக்கு புத்திகூர்மை, ஞாப‌க‌ச‌க்தி எல்லாம் மிக அதிக‌ம். பிள்ளையார் அறிவே வ‌டிவான‌வ‌ர்.

யானை என்ன‌ செய்தாலும் அழ‌காயிருக்கிற‌து. அது அசக்கி அச‌க்கி ந‌ட‌ப்ப‌து, சாப்பிடுவ‌து, காதை ஆட்டுவ‌து, தும்பிக்கையைத் தூக்குவ‌து – எல்லாமே பார்க்க‌ ஆன‌ந்த‌மாயிருக்கிற‌து. அத‌ன் முகத்தைப் பார்த்தாலே ப‌ர‌ம‌ சாந்தமாக இருக்கிற‌து. சின்ன‌க் க‌ண்க‌ளான‌லும், அமைதியாக‌, அன்பாக‌ இருக்கின்ற‌ன‌. மிருக‌ வ‌ர்க்கத்தில் நாம் பார்த்துக்கொண்டேயிருப்ப‌து யானையைத்தான்.

ம‌னித‌வ‌ர்க்க‌த்தில் குழ‌ந்தை என்றால் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க‌ வேண்டும் போல் தோன்றுகிற‌து. கெட்ட‌ எண்ண‌மே இல்லாதது குழ‌ந்தை. ஆன‌ந்த‌மாக‌ விளையாடிக்கொண்டு இருப்ப‌து குழ‌ந்தை. அதைப் பார்த்தாலே நம‌க்கும் ஸந்தோஷ‌மாக‌ இருக்கிற‌து. பிள்ளையார் யானைக்கு யானை; குழ‌ந்தைக்குக் குழ‌ந்தை. அதனால் அவ‌ரை எத்த‌னை பார்த்தாலும் போதும் என்ற‌ திருப்தி உண்டாவ‌தில்லை. க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ம் இல்லாத‌ குழ‌ந்தை ம‌னசு அவ‌ருக்கு. குழ‌ந்தை போல் ந‌ல்ல‌ உள்ள‌ம்; யானை மாதிரி தேக‌ பல‌ம், புத்தி கூர்மை; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ தெவிட்டாத‌ அழ‌கு; ஆன‌ந்த‌ம் பொங்கிக் கொண்டிருக்கிற‌ ரூபம். சேராத‌தெல்லாம் அவ‌ரிட‌ம் ஸ்வபாவமாக‌ச் சேருகிற‌து. க‌ழுத்துக்குக் கீழே குழ‌ந்தை; ம‌னித‌வ‌ர்க்க‌ம். மேலே முக‌ம் யானை; மிருக‌வ‌ர்க்க‌ம். ஆனால், அவ‌ர் வாஸ்த‌வ‌த்தில் தேவ‌வ‌ர்க்க‌ம். தேவ‌ர்க‌ளுக்குள் முத‌ல் பூஜை பெறும் தெய்வ‌மாக‌ இருக்கிறார் பிள்ளையார். 

குழ‌ந்தையாக‌ இருந்துகொண்டே மஹா பெரிய‌ த‌த்வ‌ங்க‌ளுக்கு ரூப‌கமாக‌ (Personification) இருக்கிற‌ பிள்ளையாரிட‌ம் ப‌ல‌ தினுசான‌ மாறுபாடுக‌ள் (Contrasts). இதிலே ஓர் அழ‌கு. வித்தியாச‌மான‌தெல்லாம் அவ‌ரிட‌ம் சேர்ந்திருப்பதாலேயே அவ‌ரிட‌ம் எல்லாம் ஐக்கிய‌ம் என்றாகிற‌து. உதார‌ண‌மாக‌, ஒரு கையில் ஒடிந்த‌ த‌ந்த‌ம் என்றால், இன்னொரு கையிலே கொழுக்க‌ட்டை வைத்திருக்கிறார். அத‌ற்குள் தித்திப்பாக‌ இருக்கிற‌ வ‌ஸ்துவுக்குப் பெய‌ர் பூர்ண‌ம். பூர்ண‌ம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற‌ த‌ந்த‌ம் மூளி; இன்னொன்றிலோ முழுமை. எல்லாம் நிறைந்த‌ பூர‌ண‌ப் பொருள் பிள்ளையாரேதான். இதை அறிந்துகொள்வ‌துதான் பேரான‌ந்த‌ம். ஆன‌ந்த‌த்திற்கு இன்னொரு பேர் மோத‌க‌ம். கொழுக்க‌ட்டைக்கும் மோத‌க‌ம் என்றே பெய‌ர்.

இன்னொரு மாறுபாடு: விநாயகர் குழ‌ந்தை. அத‌னால் பிர‌ம்ம‌ச்சாரி. ஆனால், இவ‌ர் யானையாக‌ வ‌ந்து வ‌ள்ளியை விர‌ட்டிய‌தால்தான் அவ‌ள் ஸுப்ரம்ம‌ண்ய‌ ஸ்வாமியை க‌ல்யாண‌ம் செய்துகொண்டாள்! இன்றைக்கும் க‌ல்யாண‌ம் ஆக‌வேண்டுமானால் இந்த‌க் க‌ட்டைப் பிர‌ம்ம‌ச்சாரியை வேண்டிக்கொள்கிறார்க‌ள். இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்? அவ‌ர் இருக்கிற‌ நிலையில் அவ‌ருக்கு வேண்டாத‌தையெல்லாம் கூட‌, அவ‌ர் நிலைக்கு மாறாக‌ இருக்கிற‌ ந‌ம‌க்குப் ப‌ர‌ம‌ க‌ருணையோடு கொடுத்துக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌த் தூக்கிவிடுகிறார்.

‘க‌ல்லுப் பிள்ளையார்’ என்ப‌த‌ற்கேற்ப தாம் உட்கார்ந்த‌ இட‌த்தைவிட்டு அசையாம‌லே இருந்தாலும் ப‌க்த‌ர்க‌ளை ஒரே தூக்காக‌ தூக்கி உச்ச‌த்தில் சேர்த்து விடுவார். அவ்வையாரை இப்ப‌டித்தான் க‌டைசியில், தாம் இருக்கிற‌ இட‌த்திலிருந்தே தும்பிக்கையால் ஒரு தூக்குத் தூக்கி கைலாஸத்திலேயே கொண்டு சேர்த்து விட்டார்! பிள்ளையாரைப் பார்க்க‌ப் பார்க்க‌ ந‌ம‌க்கு மேலே மேலே இப்ப‌டிப் ப‌ல‌ த‌த்துவ‌ம் தோன்றுகிற‌து. இதுவும் ந‌ம் அறிவின் அள‌வுக்கு எவ்வ‌ள‌வு எட்டுகிற‌தோ அவ்வ‌ள‌வுதான். வாஸ்த‌வ‌த்தில் ந‌ம‌க்குத் தெரிவ‌த‌ற்கும் அதிக‌மாக‌, அவ‌ரிட‌ம் பெருமைக‌ள் அள‌விட‌ முடியாம‌ல் இருக்கின்ற‌ன‌.

‘குழ‌ந்தையும் தெய்வ‌மும் கொண்டாடும் இட‌த்திலே’ என்பார்க‌ள். தெய்வ‌மே குழ‌ந்தையாக‌ வ‌ந்துவிட்ட‌து பிள்ளையார் வடிவில். அத‌னால் குழ‌ந்தை ஸ்வாமியாக‌க் கொண்டாடுகின்ற‌ த‌மிழ்நாட்டில், ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாம‌ல் எங்கு பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டு அநுக்கிர‌ஹ‌ம் ப‌ண்ணிக் கொண்டிருக்கிறார். அவ‌ர் செய்த‌ அநுக்கிர‌ஹ‌த்தினால்தான் அந்த‌ப் பாட்டி தமிழ் நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாள்.

அந்த‌ப் பாட்டி யார் என்றால், அவ‌ள்தான் அவ்வையார்! Trending Articles

Sponsored