ஆண்மையின் கம்பீரம்... பெண்மையின் நளினம்... விநாயகரின் வடிவமே தத்துவம் தான்! #VinayagarChaturthi



Sponsored



தத்துவ மயமான கணபதி...கடவுளரின் திருவுருவங்கள் அனைத்துமே நமக்குப் பல தத்துவ உண்மைகளை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக நாம் முழுமுதற்கடவுளாகப் போற்றி வழிபடும் கணபதிக் கடவுள் தத்துவமே வடிவமானவர். விநாயகரின் வடிவமே தத்துவம் தான்!

விநாயகர் பிரணவத்தின் வடிவமாகத் திகழ்பவர். ஓம்காரம் என்னும் பிரணவம்தான் பிரபஞ்சத்தின் ஆதார ஒலி. இந்த ஒலியில் இருந்துதான் ஒளி என்னும் உயிர்ச் சக்தி உருவானதாக சொல்லப்படுகிறது. எனவேதான் பிரணவசொரூபியாகத் திகழும் கணபதிக் கடவுளை முழுமுதற் கடவுள் என்று போற்றுகிறோம்.

Sponsored


பிரபஞ்சத்தின் அனைத்து அம்சமாகவும் திகழ்கிறது விநாயகரின் திருவுருவம். இடுப்புக்குக் கீழே மனித உடலும், இடுப்புக்கு மேலே கழுத்து வரை தேவ உருவமும், அதற்கும் மேலாக யானையின் தலையும் கொண்டு காட்சி தருகிறார் விநாயகர். மேலும் பூத வடிவான பெருவயிறும் கொண்டு காட்சி தருகிறார். தந்தங்கள் ஆண்மையின் கம்பீரத்தையும், சிறிய கண்கள் பெண்மையின் நளினத்தையும், கனிவையும் உணர்த்துவதாகத் திகழ்கின்றன.

Sponsored


சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களைக் கொண்ட விநாயகப் பெருமானின் பெருத்த வயிறு அண்ட சராசரங்களையும் தன்னகத்தே அடக்கி ஆள்பவர் என்பதை உணர்த்துவதாகத் திகழ்கிறது.

பிள்ளையாரின் காதுகள் முறம் போல் பெரிதாக இருக்கிறது. பல நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காதுகள் பெரிதாக இருக்கின்றன. தும்பிக்கை என்பது கையாக இருப்பதுடன், வாயை மறைத்தபடியும் காணப்படுகிறது. பேச்சைக் குறைக்கவேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

தும்பிக்கையுடன் சேர்த்து பிள்ளையாருக்கு ஐந்து கரங்கள். அதனால்தான் திருமூலர், 'ஐந்து கரத்தனை' என்று போற்றுகிறார். பாசம் ஏந்திய கரம் படைத்தலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், மோதகம் ஏந்திய கரம் அருள் புரிவதையும், தும்பிக்கை என்பது மறைத்தலையும் குறிப்பிடுகிறது.

விநாயகருக்கு ஏகதந்தன் என்ற பெயரும் உண்டு. யானைக்கு அழகும் கம்பீரமும் சேர்ப்பது அதன் தந்தம்தான். அழகுக்கும் கம்பீரத்துக்கும் அடையாளமான தந்தங்களில் ஒன்றை முறித்து அசுரனை அழித்தார் விநாயகர் என்பது புராணம். மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றால், எதையும் தியாகம் செய்யத் துணியவேண்டும் என்பதை விநாயகரின் முறிந்த தந்தம் உணர்த்துகிறது. மகாபாரத இதிகாசத்தை எழுதுவதற்காகவும் விநாயகர் தன் தந்தத்தை உடைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுவது உண்டு. அழகு, கம்பீரம் அனைத்துக்கும் மேலானது அறிவுதான் என்பதை இது உணர்த்துகிறது.

விநாயகரின் வாகனத்தை எடுத்துக்கொண்டால், மிகச் சிறிய மூஞ்சூறுதான் வாகனமாக இருக்கிறது. புராணத்தில் அசுரன் ஒருவன் மூஞ்சூறாக மாறினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மூஞ்சூறு என்பது அறியாமையின் அடையாளம். அறியாமையை, அதன் விளைவான செருக்கை அடக்கி ஆள்பவர் விநாயகர் என்பதையே மூஞ்சூறு வாகனம் உணர்த்துகிறது. பெரிய வடிவமான விநாயகருக்கு மிகச் சிறிய மூஞ்சூறு வாகனமாக இருப்பது மற்றுமொரு தத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது. தூய்மையான பக்தியுடன் தம்மை வழிபடுபவர்களின் மனங்களில் தம்மை லேசாக்கிக் கொண்டு எழுந்தருளுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

விநாயகர் ஒரு கரத்தில் மோதகம் வைத்திருக்கிறார். மோதகம் என்றால் சந்தோஷம் என்று பொருள். தம்மை வழிபடும் பக்தர்களுக்கு சந்தோஷத்தைத் தருபவர் விநாயகர். மோதகத்துக்குள் இருப்பது பூரணம் என்னும் இனிப்பு. அதேபோல் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு பூரணத்துவத்தை அருள்கிறார் என்பதையே மோதகம் உணர்த்துகிறது.

வழிபடும் பக்தர்களுக்கு பூரண சந்தோஷத்தை அருளும் விநாயகப் பெருமானின் திருவடி பணிந்து வழிபட்டால், வாழ்வில் எந்த ஒரு விக்கினமும் இல்லாமல், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது உறுதி.



Trending Articles

Sponsored