நடப்பு அரசியலோடு பொருந்திப்போகும் மூன்று மகாபாரதக் கதைகள்! #HallOfShameADMK



Sponsored



மகாபாரதம் நடந்து முடிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அதில் உள்ள கதாபாத்திரங்கள் கால வெள்ளத்தில் அழியாமல் உயிர்ச்சித்திரங்களாக இன்றும் இருக்கின்றன. பெயர்கள்தான் வேறாக இருக்கும் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக அப்போது நடந்த மூன்று நிகழ்வுகள், இப்போதும் பொருந்துகின்றன. நடப்பு அரசியலோடு பொருந்திப்போகும் மூன்று மகாபாரதக் கதைகள்!

கதை:1

மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த நேரம். சுபத்ரையின் வளைகாப்பு பாண்டவர்கள் தங்கியிருந்த கானகத்தில் நடந்துகொண்டிருந்தது. அரண்மனையில் என்றால், ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். இதுவோ கானகம். பெரிதாக எவரும் இல்லை. அத்தனை தடபுடலாகவும் இல்லை. கண்ணீருடன் சிவ வழிபாட்டில் இருந்த சுபத்ரைக்கு குந்திதேவி ஆறுதல் சொன்னார். ''எனது பிள்ளைகளை மிஞ்சும் பராக்கிரமசாலிகள் இந்த உலகில் இல்லை. ஆனாலும், அவர்கள் விதியின் சூழ்ச்சியால் மரவுரி தரித்து பரதேசிகளைப்போல் இந்த வனத்தில் சுற்றித் திரிகிறார்கள்.  திறமை வாய்ந்த பிள்ளைகள் வேண்டுமென கேட்டேனே ஒழிய யோகமான பிள்ளைகள் வேண்டுமென நான் கேட்க மறந்துவிட்டேன். நான் வாங்கிய வரம் அப்படி. அதனால் கால் காசு யோகமுள்ள பிள்ளைகள் வேண்டுமெனக் கேள்!'' என்று கூறினார். அதுபோல் ஒருவருக்கு எத்தனை திறமைகள் இருந்தாலும், அவருக்கு யோகம் இருந்தால்தான் அது வெற்றியாக மாறும். 
 

Sponsored


Sponsored


கதை : 2

யுத்தம் முடிந்து, தர்மர் ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருந்த நேரம். அன்றைய தினம் அவருக்கு முன்பாக வழக்கு ஒன்று வந்திருந்தது. 
வழக்கின் சாராம்சம் இதுதான்...
பொம்மன், திம்மனிடம் தனது 10 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டான். அதை வாங்கிய திம்மன் ஏர் பூட்டி நிலத்தை உழுது கொண்டிருக்க தங்கக் காசுகள் நிறைந்த பானையொன்று கிடைத்தது. அதை எடுத்துச்சென்று பொம்மனிடம் கொடுத்து, 'இது நீங்கள் எனக்கு விற்ற நிலத்தில் கிடைத்தது. அதனால், இது உனக்கே சொந்தம் நீயே வைத்துக்கொள்' என்றான். 
ஆனால், பொம்மனோ, ''இது நான் உனக்கு விற்றுவிட்ட நிலம். அதில் என்ன கிடைத்தாலும் அது உனக்குதான் சொந்தம். எனவே நீயே வைத்துக்கொள்' என்றான். 

இருவருமே அதை எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தனர். 'சரி, நம் தர்ம மகாராஜாவையே கேட்போம்' எனப் புறப்பட்டு ஹஸ்தினாபுரம் வந்து தங்கள் வழக்கைக் கூறினர். 

இருவரிடமும் தர்மர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் இருவருமே புதையலை எடுத்துச் செல்ல மறுத்து விட்டனர். 
அதனால் தர்மர், ''சரி, நீங்கள் இருவரும் இன்று போய் நாளை வாருங்கள். உங்கள் வழக்கில் நல்லத் தீர்ப்பைச் சொல்கிறேன்''  என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

பொழுது புலர்ந்தது. மறுநாள் சபையும் கூடியது. வரும்போதே பொம்மனும் திம்மனும் தனித்தனியாகவே வந்தனர். இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் இல்லை. ரொம்பவும் மவுடிகமாகவே இருவரும் இருந்தனர். தர்மர் தனது பரிவாரங்களுடன் வந்து சபையில் அமர்ந்தார். 
பொம்மன், ''நேற்று நடந்ததை கெட்ட கனவாக மறந்திடுங்கள். நிலம் என் மூதாதையரின் சொத்து. எனவே, அந்த நிலத்தில் கிடைத்த புதையல் எனக்குத்தான் சொந்தம்'' என்றான்.
'' என்று ஒரு பொருளை அடுத்தவருக்கு விற்று விட்டோமோ? அப்போதே அதில் வரும் நல்ல பலன் தீய பலன் எல்லாமே வாங்கியவரையே சேரும். அதனால் புதையல் எனக்குத்தான்'' என்றான் திம்மன்.
தர்மருக்குத் தலைச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. ''இது என்ன மாயம்? நேற்றைக்கு அப்படிக் கூறியவர்கள், இன்றைக்கு இப்படி மாறிவிட்டார்களே'' என்ற ஆச்சர்யத்துடன் அமைச்சரை நோக்கித் திரும்பினார்.     
அமைச்சர் சொன்னார்... ''பெருமைமிகு தர்ம மகாராஜா அவர்களே... நீங்கள் காலக் கடிகாரத்தை காணவில்லையா? இன்றிலிருந்து கலியுகம் ஆரம்பிக்கிறது'' என்றார்.
கதை: 3

ஒருநாள் பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் மிகப்பெரிய சந்தை ஒன்றிற்குச் சென்றான்.  அங்கு பல தேசங்களில் இருந்தும் கால்நடைகளும், குதிரைகளும், பறவைகளும் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். விசித்திரமான சிகை அலங்காரத்துடன் கூடிய ஒருவன் அழகான குதிரையை விற்பனைக்காகக் கட்டிப் போட்டிருந்தான். சகாதேவனுக்கு அந்தக் குதிரையை ரொம்பவே பிடித்துப்போய் விட,  குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை?'' என விசாரித்தான்.

அந்தக் குதிரைக்குச் சொந்தக்காரனோ,  ''பெருமைமிகு அரசரே, இந்தக் குதிரையை விற்பதற்காக நான் கொண்டு வரவில்லை. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொன்னால் போதும். அதன் பிறகு குதிரை உங்கள் வசம்''என்றான்.
குதிரைக்காரன் அப்படி என்ன கேட்டு விடப்போகிறான் என எண்ணிய சகாதேவன், 

''உன் கேள்வியை முதலில் சொல். பிறகு நான் விடை சொல்கிறேன்'' '' அப்படியா, பதில் சொன்னால், இந்தக் குதிரை உங்களுக்கு. இல்லாவிட்டால், நீங்கள் எனக்கு அடிமை. சம்மதமா?'' எனக் கேட்டான். சகாதேவனும் சரி என்று சம்மதித்தான்.

குதிரைக்காரன் கேள்வியைக் கேட்டான். ''ஒரு பெரிய கிணற்றில் இருக்கும் நீரை ஏழு சிறிய கிணறுகளில் நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு சிறிய கிணறுகளில் இருக்கும் நீரை எடுத்து, மறுபடியும் அந்தப் பெரிய கிணற்றில் ஊற்றினால்,  அந்தப் பெரிய கிணறு நிரம்பவில்லை. இதற்குக் காரணம் என்ன?''

சகாதேவனால் இந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியவில்லை. சந்தையில் ஓர் ஓரமாக உட்கார்ந்துவிட்டான்.
சிறிது நேரத்தில் சகாதேவனைத் தேடி நகுலன் வந்து விட்டான். அவனுக்கும் அதே நிபந்தனைதான். ஆனால், கேட்கப்பட்ட கேள்விதான் வேறு... ''ஊசியின் வழியாக யானை நுழைந்து மறுபக்கம் போய் விட்டது. ஆனால், அதன் வால் போக முடியயில்லை ஏன்?''
பதிலற்றவனாக நகுலனும் உட்கார்ந்துவிட்டான்.

தம்பிகளைத் தேடி அர்ஜுனனும் வந்து விட, அதே நிபந்தனைதான். கேள்வி மட்டும் வேறு. 

''ஒரு வயல், அதில் பயிர்கள் தளதளவென வளர்ந்து அறுவடைக்குக் காத்திருந்தன. அவற்றைப் பாதுகாக்க வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. அறுவடை நாளில் வந்து பார்த்தபோது அதில் எந்தப் பயிரும் இல்லை. விளைந்த தானியங்களையும் காணவில்லை. வேலியும் அப்படியே இருக்கிறது. எங்கே போயின விளைந்த தானியங்கள்?''
உலகையே வெல்லும் வில்லாளியான அர்ஜுனன் அப்படியே அசந்து போய் உட்கார்ந்து விட்டான். சகோதரர்கள் மூவரையும் காணாத தர்மர், பீமனை அழைத்து பார்த்து வரச்சொன்னார்.

நல்லவேளையாக குதிரைக்காரன், பீமனைப் பார்த்ததும் அவர்கள் மூவரையும் விடுவித்து விட்டான். அரண்மனைக்கு வந்த சகோதரர்கள் மூவரும் தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளைத் தர்மரிடம் கூறி விடைகள் என்னவென்று கேட்டனர். கேள்விகளைக்கேட்டதும் தர்மர் நடுநடுங்கிப் போய்விட்டார்.

தர்மர்  சொன்ன பதில் இதுதான்... 

உங்களிடம் கேள்வி கேட்டவன் கலிபுருஷன்...

முதல் கேள்விக்கான பதில் 

பெரிய கிணறு பெற்றோர்கள்.

ஏழு சிறிய கிணறுகள் பிள்ளைகள்.

* பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செய்ததை நன்றிக்கடனாக ஏழு பிள்ளைகளும் சேர்ந்து செய்தாலும் அதற்கு ஈடாகாது. ஏழு சிறிய கிணறுகளின் தண்ணீர் பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்ற கேள்வி குறிப்பிடுவது இதைத்தான்.
இரண்டாவது கேள்விக்கு உரிய பதில்,  இனி அக்கிரமங்கள் மிக எளிதாகவும் நிறையவும் நடக்கும். ஆனால், நல்ல செயல்கள் அபூர்வமாகவே நடக்கும் என்பதைக் குறிக்கிறது. ஊசியின் துவாரத்தில் யானை நுழைந்து விடும். ஆனால், வால் நுழையாமல் போகும். நல்லவர்களின் சொல்லையும், செயலையும் எவரும் மதிக்க மாட்டார்கள் என்பதையே யானை நுழைந்த இடத்தில் வால் நுழையாததைக் காட்டுகிறது.

மூன்றாவது கேள்விக்கான பதில்...

வயலில் விளையும் பயிர்களை வேலிகளே தின்று தீர்த்து விடும். அதாவது அரசாங்கம் மக்களுக்குச் செய்வதாகச் சொல்லும் நன்மைகளை அரசு இயந்திரமும், அமைச்சர்களும் அதிகாரிகளுமே தின்று தீர்த்து விடுவார்கள். மக்கள் வறுமையில் வாடுவார்கள். அதிகாரிகள் செழுமையாக வாழ்வார்கள்.
 
 



Trending Articles

Sponsored