சீனப் பொருள்களை விற்கும் சந்தையாக மாறுகிறதா வாஸ்து சாஸ்திரம்?Sponsoredவாஸ்து குறித்து ஏராளமான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஊருக்கு ஊர், வாஸ்து வல்லுநர்களும் அதிகரித்துவிட்டார்கள். மக்கள் மத்தியில் வாஸ்து குறித்த நம்பிக்கைள் அதிகரித்துவிட்டன. 

சுவருக்கு இந்த நிறத்தில் வண்ணம் பூச வேண்டும், இங்குதான் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த இந்தச் செடிகளை மட்டும்தான் வளர்க்க வேண்டும் என்று ஆரம்பித்து, சிரிக்கும் புத்தர் சிலை, ஓசையிடும் மணிகள், நீர்க்காட்சிகள், டிராகன், ஆமைச் சிலைகள் என வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் பலவற்றைத்  தலையில் கட்டிவிடுகிறார்கள். இணையதளங்களிலும் இதுமாதிரி பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கிறது.

Sponsored


இதை வாங்கி இந்த இடத்தில் வைத்தால்தான் உங்களுக்குத் தூக்கம் வரும். இந்தச் சிலையை வாங்கி, இந்த இடத்தில் வைத்தால்தான் உங்களுக்கு செல்வம் வரும். இந்த மணியை ஒலிக்கவிட்டால்தான் உங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு வரும் என்ற ரீதியில் பொதுமக்களை குழப்புகிறார்கள். 

Sponsored


இவை எல்லாம் உண்மைதானா? உலகம் சிந்திக்கத் தொடங்கும் முன்பே வானியலையும் மருத்துவத்தையும் ஆய்வு செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வழிகாட்டியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆனால், யாரும் இதுமாதிரி பொம்மைகளை வாங்கி வைக்கச் சொல்லவில்லை. இத்தனை வருடங்களாக இல்லாமல் இது போன்ற தகவல்கள் இப்போது பரவுவது ஏன்? குறிப்பாக சீனப்பொருள்களை விற்கும் சந்தையாகவே வாஸ்து மாறிவருகிறதே, ஏன்?  

வாஸ்து நிபுணர் காமாட்சி என்.கார்த்திகேயனை அணுகி நம் சந்தேகங்களை முன் வைத்தோம். 

"வாஸ்து என்பது ஜோதிடக்கலையைப்போல நம்பிக்கை சார்ந்த கலைதான். ஆனால், இதைப்பற்றி பெரிதும் பயமுறுத்தி, வணிகமாக்கி

லாபம் சம்பாதிக்கும் ஆள்கள் ஏராளமாகத் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அறிவியலை அடிப்படையாகக்கொண்ட 'லாஜிக்கல் டேட்டா'தான் வாஸ்து. வடக்கு, தெற்குக் காந்தப்புலத்தை அடிப்படையாகக்கொண்டு ஒரு நல்ல கட்டடம் அமைய வேண்டும் என்பதே வாஸ்துவின் ஆதாரம். மற்றபடி பச்சைக்கலர் அடியுங்கள் பணம் கொட்டும்; ஆடும் மணிகளை கோர்த்து விடுங்கள் பேய் பிசாசு அணுகாது என்பதெல்லாம் அவரவர் கொண்ட நம்பிக்கை சார்ந்தது. நீங்கள் வலிமை இல்லாமல் இருந்தால் எல்லாமே உங்களை பயமுறுத்தும் தான். 

வீடு என்பது, சதுரம் அல்லது செவ்வக வடிவில் அமைய வேண்டும். அப்போதுதான் அறைகள் ஒழுங்காக அமையும். வடக்கு, கிழக்கு பக்கங்களில் காலியிடம் இருக்க வேண்டும். அப்போதுதான்  வீட்டுக்குள் ஒளியும், காற்றும் வரும். காற்றோட்டமும் ஒளியும் இயற்கையாகக் கிடைத்தால் ஆரோக்கியமும், நல்ல சிந்தனையும் உருவாகும். வண்ணங்கள் சிந்தனையைப் பாதிக்கும் என்பது உண்மை. ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒவ்வோர் ஆற்றல் உள்ளது. அதனால் நீலநிற வண்ணம் படுக்கை அறையில் இருந்தால் நல்ல தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வராமல் தடுக்கும். மஞ்சள் வண்ணம் புத்துணர்ச்சியை அளிக்கும். பச்சை வண்ணம் குளுமையான சிந்தனையை கொடுக்கும். மற்றபடி வாஸ்துவின் பெயரில் ஆளை அடிக்கும் வகையில் வெளிப்புறத்தில் வண்ணம் பூசுவது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்த விஷயம். 

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் பூச்செடிகள் வைத்து வளர்ப்பது நல்லது. பூச்செடிகள் ஒரு வீட்டில் நன்கு வளர்கிறது என்றால் அந்த வீட்டில் சூரிய ஒளியும், காற்றும் நன்கு கிடைக்கிறது என்றே அர்த்தம். அதிலும் ஒரு வீட்டில் துளசி வளர்கிறது என்றால் அந்த வீடு சுத்தமாக இருக்கிறது. துர்நாற்றமோ, கிருமிகளின் ஆதிக்கமோ இருந்தால் அங்கு துளசி வளராது. இது அறிவியல் சார்ந்த விஷயம் தான்.

 

வாஸ்து என்பதே வாழ்க்கையை வளமாக்கும் ஒரு வழிகாட்டி முறைதான். நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றாலும் அளவுக்கு அதிகமான மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். வாஸ்து குறித்த வழிபாடுகள், விரதங்கள் கூட அவரவர் நம்பிக்கை சார்ந்தவைதான். நான் என்னிடம் வருபவர்களை, மலை மீது உள்ள கோயில்களுக்கு சென்று வரச் சொல்வேன். அவை கொடுக்கும் அதிர்வுகள் உங்கள் வீட்டைச் சுபிட்சமாக மாற்றும். கோயிலுக்கு சென்று வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது தான் முக்கிய விஷயம். கோயிலுக்குச் செல்வதால் கிடைக்கும் நல்ல மனோபாவமே வீட்டின் சூழலை மாற்றும். 

வாஸ்து பற்றி சமூக வலைத்தளங்கள், இணையதளங்களில் விளம்பரம் செய்யப்படும் அல்லது யாரேனும் பரிந்துரைக்கும் பொம்மைகள், பொருட்களை எல்லாம்  தகுதிவாய்ந்த வாஸ்து நிபுணரிடம் ஆலோசித்த பிறகு வாங்குவதே நல்லது. தேவையற்ற விஷயங்களில் பணத்தை இழக்க வேண்டாம் என்பதே என் கோரிக்கை..." என்றார் அவர்.Trending Articles

Sponsored