குருப்பெயர்ச்சி பரிகாரம் யாருக்குச் செய்ய வேண்டும்-குருவுக்கா? தட்சிணாமூர்த்திக்கா?- ஒரு ஜோதிடப் பார்வை #AstrologySponsoredராஜ கிரகங்களில் ஒன்றான குருபகவான் கடந்த 2-ம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். 2.10.18 வரை துலாம் ராசியில் இருந்துகொண்டு, பன்னிரண்டு ராசிகளுக்குமான பலாபலன்களைத் தருவார்.பூரண சுபகிரகமான குருபகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்போது, குருபகவானின் துலாம் ராசி சஞ்சாரத்தால் அசுப பலன்கள் ஏற்படக்கூடிய ராசிகளைச் சேர்ந்த அன்பர்கள் பலரும் பரிகாரங்கள் செய்து வருகின்றனர். ஆதி குருவான சிவபெருமானை  தட்சிணமூர்த்தியாகவும், அவரது அம்சமாக குருபகவானையும் பார்க்கும் வழக்கம் காலகாலமாக இருந்து வருகின்றது. அதன் காரணமாக குருப்பெயர்ச்சிக்கு  பலரும் தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்கின்றனர். இப்படிச் செய்வது சரிதானா என்பது பற்றி ஜோதிட நிபுணர் எஸ்.கோமதியிடம் கேட்டோம்.

''தட்சிணாமூர்த்தி வேறு; குருபகவான் வேறு. தட்சிணாமூர்த்தி சிவாம்சமான மூர்த்தி. குருபகவான் நவகிரகங்களில் ஒருவர். எனவே, குருப்பெயர்ச்சியின்போது நவகிரகங்களில் ஒருவரான குருபகவானுக்குத்தான் பரிகார பூஜைகள் செய்யவேண்டும். ஆனால், சமீபகாலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இப்படி வருபவர்களில் 99  சதவிகிதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருகிறார்கள். ஆனால், நவகிரகங்களில் ஒருவரான குருபகவானை வழிபடுபவர்களின்  எண்ணிக்கை மிகவும் குறைவு. 

Sponsored


Sponsored


குருவுக்குச் செய்யவேண்டிய பரிகாரங்களை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரியா? என்று பார்க்க வேண்டும். தட்சிணாமூர்த்தி எல்லா ஆலயங்களிலும் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். அதனால் அவரை தென்முகக்கடவுள் என்றே அழைப்பார்கள். நவகிரகங்களில் ஒருவரான குருபகவானின் திசை வடக்கு. இரண்டு பேரும் வீற்றிருக்கும்  திசைகளே வேறாக இருக்கின்றது. வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக்கடலை. தட்சிணாமூர்த்தி வெள்ளை உடை அணிபவர். 'ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்' என வேதம் உரைக்கிறது.'ஸ்வேதம்' என்றால், வெள்ளை நிறம் என்பது பொருள் ஆகும்.

உண்மை இப்படி இருக்க, குருவுக்கு பரிகாரம் செய்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்குத் தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.

ஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குரு. ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. 

கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் 'ஆதி குரு' அல்லது 'ஞான குரு' என்று போற்றப்படுகிறார். தேவர்களின் சபையில்  தேவர்களுக்கு ஆச்சார்யராகத் திகழ்பவர் வியாழன்  என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி. ஆசிரியர் பணி புரிவதால் அவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். குரு பகவானுக்கு உரிய அதிதேவதை 'மருத்வந்தன்'  என்றும், ப்ரத்யதி  தேவதை 'பிரம்மா' என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்தவிதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. 

குரு பகவானுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்குச் செய்யவேண்டிய  அவசியம் என்ன? இந்தக் குழப்பத்துக்கு என்ன காரணம்?
ஞான குருவாம் தட்சிணாமூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்த ஸ்லோகத்தை எளிதாகச் சொல்லித் தருகிறார்கள்.

''குரு பிரம்மா: குருவிஷ்ணு 
குரு தேவோ மஹேஸ்வர
குரு சாட்சாத் பரபிரம்ம தஸ்மைஶ்ரீ
குருவே நம:

இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையைக் கொண்டு குருபகவானும் இவரும் ஒன்று என எண்ணும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

இறைவன் இட்ட பணியைச்  செய்பவர்களே நவகிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான்.
மனம் சஞ்சலமடைந்திருக்கும்போது தட்சிணாமூர்த்தியின் சந்நிதியில் அவருக்கு  முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டால், மனம் ஒருநிலைப்படும்; நினைத்த காரியம் வெற்றி பெறும்.

பேராசிரியர் அறிவொளி  அய்யா சொல்வார், ரிஷபம் காளையா என்று கேட்டால், ரிஷபம் காளைதான். ஆனால், காளை எல்லாம் ரிஷபம் கிடையாது என்பார். அதுபோல் தட்சிணாமூர்த்தி குருவா என்றால் அவர் குருதான். ஞானகுரு. ஆனால், குருபகவான் தட்சிணாமூர்த்தியா என்றால், அவர் தட்சிணாமூர்த்தி இல்லை என்பதே உண்மை. 
ஞானத்தை அருள்பவர் தட்சிணாமூர்த்தி; இக வாழ்க்கையில் சகல சுகங்களையும் அருள்பவர் குருபகவான். ஆன்மிக ஞானத்துக்கு தட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும்; மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு குருபகவானை வழிபடவேண்டும் என்பதுதான் சரி!'' என்றார்.Trending Articles

Sponsored