பத்துக்கு பத்து அறையில் ‘கவச வேலை’ என்கிற கடவுள் சேவை!



Sponsored



இறைவன் உறையும் கோயிலின் திருப்பணிகள் கணக்கிலடங்காதவை. சிற்பம் செதுக்குதல், விக்கிரகம் வடித்தல், சுவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், இறை உருவங்களை ஓவியங்களாக வரைதல்... என நீள்கிற கோயில் திருப்பணிகளில் உழவாரப் பணிகூட உண்டு. கோயிலுக்குச் செல்கிறோம்... இறைவனை வழிபடுகிறோம்... அப்போதெல்லாம் நம் உள்ளம் முழுக்க நிறைந்திருப்பது இறைவன் திருவுருவே..! இந்தக் கலை வேலைப்பாடுகளில், இறைத் திருப்பணிகளில் நம்மில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. தெய்வம் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், அதில் தவறேதும் இல்லை. அதே நேரத்தில் ஒரு கோயிலின் உருவாக்கத்தில், இறைவனின் நித்திய கைங்கர்யங்களில் எண்ணற்ற கலைஞர்களின் பங்கும் உண்டு என்பதை நினைவில் கொள்வது அந்தக் கலைஞர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை, நன்றி. அப்படிப்பட்ட கலைகளில் ஒன்றுதான் கவச வேலை. 

கோயில் வாசலில் தெருவையே அடைத்த மாதிரி கோலம் போட்டிருக்கும். `இது எத்தனைப் புள்ளிக் கோலம்?’ என ஆராயும் பெண்களுக்கேகூட, ‘இந்த அற்புத ஓவியத்தை வரைந்த பெண்மணி யார்... அவருக்கு ஒரு பாராட்டு சொல்வோமே’ என்கிற எண்ணம் தோன்றுவதில்லை. தரிசனம் முடிந்து வெளி வருகையில் பிரசாத விநியோகம் நடக்கும். மணக்க மணக்கப் புளியோதரை கொடுப்பார்கள். ‘அடடா... என்ன ருசி! இதை எப்படிச் செய்தார்கள்?’ என்று யோசிப்பவர்களுக்குக்கூட, அதைச் செய்தவர்கள் யார் எனக் கேட்டறிந்து, செல்போனில் அவருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லத் தோன்றாது. சதா சாணமும் கோமியமுமாகக் கிடக்கும் பசு மடத்தை அவ்வப்போது படு சுத்தமாக வழித்தெடுத்து, பசுக்களுக்கு தண்ணீர் காட்டும் கைகளை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இவையெல்லாம் சாதாரணக் கைங்கர்யங்கள். கோயில் நிர்மாணத்திலும், அதன் அத்தியாவசியச்  சேவைக்கும் உறுதுணையாக இருப்பது கலைஞர்களின் கரங்கள். அந்தக் கரங்களில், `கவச வேலை’க் கலைஞர்களின் பங்கு முக்கியமானது. 

Sponsored


சரி... கவச வேலை என்றால் என்ன? விநாயகர், முருகன், அம்பாள்... என எந்தத் தெய்வமாகவும் இருக்கட்டும்... அபிஷேக, ஆராதனைக்குப் பின்னர் அந்தத் தெய்வத் திருச்சிலைக்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, வெண்கலத்திலோ ஒரு கவசம் அணிவிப்பார்கள் இல்லையா? அதுகூட இந்தக் கலைஞர்களின் கைவண்ணம்தான். அது மட்டுமல்ல... கோயில் திருக்கதவுகளில் வெள்ளி, வெண்கலம், தங்கத்தில் நகாசு வேலை செய்வது, கோயில் கோபுரங்களில் வெள்ளி, தங்கத்தில் கூரை வேய்வது, ஏன்... பெருமாள் கோயில் `சடாரி’ தயாரிப்பதுகூட இவர்கள்தான். ஒரு நகை வடிவமைப்பாளரின் வேலைக்கு ஒப்பானதுதான் இவர்களின் பணி என்றாலும்கூட, ஆத்மார்த்தமாக, இறைவன் சேவையில் இவர்களின் பணி தனித்துவமானது. சென்னை, அதன் சுற்றுப்புறத்தில் மட்டும் இப்படியான கலைஞர்கள் 2,000-க்கும் மேல் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அவர்களில் ஒருவர், சுரேஷ் பாலாஜி! 

Sponsored


சென்னை, சூளைமேட்டில் ஒரு பத்துக்குப் பத்து அறையில் ‘கவச வேலை’ திருப்பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பாலாஜியை சந்தித்தோம். “எந்த வயசுல இருந்து இந்த வேலையை செய்றீங்க?’’ என்று பேச்சை ஆரம்பித்தோம்... 

“எங்களுக்குப் பூர்விகம் காரைக்குடி. எங்க தாத்தா தாலி செய்யுற வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. அப்பா அந்த வேலைக்குப் போகலை. அப்பாவோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லாம் ஆசிரியர்கள். அப்பா அக்கவுன்டன்ஸி படிச்சிருந்தாரு. வேலை கிடைக்கலை. என் அக்காவை கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்த இடத்துல இருந்தவங்க எல்லாம் இந்தத் துறையில... இப்பிடி சிலைக்கு அலங்காரம் செய்யிற வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்க மூலமா நானும் என் மாமாகூட சேர்ந்து இந்தத் துறைக்கு வந்துட்டேன். இதைக் ‘கவச வேலை’னு சொல்வாங்க. விஸ்வகர்மாக்களோட பணி இது. கோபுரம் கட்டுறதுலகூட எங்க பங்களிப்பு இருக்கு. 

ஒரு காலத்துல கோயில் அடித்தளம், கருவறை எல்லாம் கருங்கல்லதான் இருக்கணும். இப்போ அந்த நடைமுறை இல்லை. சிமென்ட்லதான் அதிகம் பண்றாங்க. நான் முதன்முதல்ல கோயில் வேலைக்குனு போனது, கருங்கல்ல கோயில் உருவாக்குற பணிக்குதான். கோயில் கட்டுறது, தூண்கள்ல சிற்பம் வடிக்கிறது மாதிரியான வேலைகள். இந்த வேலைகளைச் செய்யும்போது, கைகளில் கொப்புளம் வரும், கல்லை அடிக்கும்போது வரும் தூசியால நுரையீரல் பாதிக்கும். இந்த மாதிரி பாதிப்பால எங்க உறவினர்கள்லயே நிறைய பேரு இறந்திருக்காங்க. ஒரு கட்டத்துல அந்தப் பிரச்னையெல்லாம் வேணாம்னுதான் நான் இந்த வேலைக்கு வந்தேன். இது சுவாமி சிலைகளுக்கு அழகூட்டுற வேலைதான். 

கோயில் கூரை வேயுறது, கதவுகளை அழகுபடுத்துறது, அம்மன் சிலைகளுக்கு கவசம் செய்யறதுனு விதவிதமா நிறைய வேலைகள் செய்யறோம். இந்த வேலை இல்லாத நேரத்துலதான் காமாட்சி விளக்கு பண்றது, குங்குமச்சிமிழ் பண்றது, கொலுசு செய்யறதுனு வேற வேலை பார்ப்போம். கோயில் வேலைகளை ஆறு மாசம், மூணு மாசத்துக்கு முன்னாடியே வாங்கிடுவோம். ஆனா, இப்போல்லாம் ஆர்டர் நேரடியா எங்களுக்கு வர்றதில்லை. நகைக்கடைகளுக்கு நேராப் போயிடுறாங்க. நகைக்கடைகள் மூலமாத்தான் கோயில் வேலைகள் எங்களுக்கு வருது. நேரா நம்மகிட்ட கோயில் ஆர்டருக்கு வரும்போது, வெத்தலை பாக்கு, குங்குமம் எல்லாம் கொடுத்து செய்யச் சொல்வாங்க. குறிப்பிட்ட நாள்ல சாமிக்கு கவசம் சாத்தும்போது, நல்ல நேரம் பார்த்து, நாங்கதான் சுவாமிக்கு கண் திறப்போம். இதெல்லாம் இப்போ இல்லாமப் போயிடுச்சு.

வருமானம்னு பார்த்தா எதிர்பார்த்த அளவுக்கு இதுல இல்லை. ஆனா, ஒரு மன திருப்தி இருக்கு. நாம, நம்ம கையால செஞ்சதை சாமிக்கு சார்த்தியிருக்காங்கறதை நினைக்கிற பரவசம் போதுமானதா, நிறைவானதா இருக்கு. அதே நேரத்துல, தொடர்ந்து வேலை வந்துக்கிட்டே இருந்தா நமக்கு வருமானத்தைப் பத்தி கவலை இல்லை’’ என்கிற சுரேஷ் பாலாஜி இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டது ஓரிரு ஆண்டுகளில் அல்ல... 15 வருடங்களில்! 

“இதுக்குன்னு தனியா படிப்பு இருக்கு. ஆனா, தொழில்முறையில இதை யாரும் கத்துக் கொடுக்க மாட்டாங்க. பார்த்து பார்த்துதான் கத்துக்கணும். வேலை பார்க்கிற இடத்துல, ஆளு இல்லாத நேரத்துல நாமளும் இறங்கி வேலை செஞ்சு கத்துக்கணும். அப்படித்தான் நான் இந்தக் கலையைக் கத்துக்கிட்டேன். இதை சுவாமிக்கு அலங்காரம் செய்யற வேலைன்னும் சொல்லலாம். அதாவது சுவாமி சிற்பத்துக்கு அலங்காரம் செய்யறது. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு அளவுல இருக்கும். ஒவ்வொரு சுவாமிக்கும் ஏத்த மாதிரி அளவு எடுத்துதான் பண்ணணும். கோபுரக் கலச வேலைகூட நாங்க செய்யறதுதான். கலசத்துல பாதரசம், நவதானியம் எல்லாம் போட்டு வைப்பாங்க. அந்தக் காலத்துல கலசம் எதுக்கு செஞ்சாங்கன்னா, திடீர்னு ஊர்ல வெள்ளம் வந்து... ஊரையே அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சுன்னா, அந்தக் கலசத்துல இருக்குற தானியத்தை எடுத்து, விதை நெல்லாப் பயன்படுத்திக்கலாம்னு வெச்சிருந்தாங்க. ஆனா, அது நாளடைவுல கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு. அதுனாலதான் உயரத்துல கலசத்தை வெச்சிருந்தாங்க. இப்போ என்னன்னா, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லிக்கிட்டு இருக்காங்க...’’ என்கிறார் சுரேஷ் பாலாஜி. 

(மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்)

“சரி... இந்த வேலை எப்படித் தொடர்ந்து கிடைக்கிறது?’’ 

“யாரோ ஒருத்தருக்கு, ஒரு கோயிலுக்கு வேலை செய்வோம்... அதை வெச்சு இன்னொருத்தர் வருவாரு... அவரை வெச்சு இன்னொருத்தர்... இப்படித்தான் வேலை கிடைக்கும். சில நகைக்கடைகள் மூலமாகவும் வேலை கிடைக்கும். நாங்க செஞ்ச வேலையை அங்கே போட்டோ எடுத்துவெச்சிருப்பாங்க. அதைப் பார்த்தும் ஆர்டர் கிடைக்கும். மாயவரத்துல ஒருபெரிய கடை இருக்கு. அவங்க மூலமா, சில டீலர்கள் மூலமா ஆர்டர் வரும். மாயவரம், கும்பகோணத்துல இருந்தெல்லாம் இங்கே வந்து தகடு செஞ்சுக்கிட்டு போறவங்க இருக்காங்க...’’ என்கிற சுரேஷ் பாலாஜி இன்னோர் அற்புதமான தகவலையும் சொல்கிறார். 

தினமும் அவர்பாட்டுக்கு கடைக்கு வந்து தன் வேலையை ஆரம்பித்துவிடுவதில்லை. இறைவனை வணங்கி, ‘வேலை செய்’ என்கிற உத்தரவு கிடைத்தால் மட்டுமே அன்றையப் பணியைத் தொடங்குகிறார். இல்லையென்றால், அன்றைக்கு விடுமுறைதான். “ ‘வேலை செய்!’ என்கிற அறிகுறி ஏதாவது பட்சி மூலமோ, பல்லி மூலமோ குரலாக, அசரீரியாக ஒலிக்கும். அது கிடைக்கவில்லையென்றால், லீவுதான். இந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்க சிறந்த நேரம் பிரம்ம முகூர்த்தம் என்கிற அதிகாலை நேரம். பெரும்பாலும் அந்த நேரத்தில்தான் இந்த வேலையை ஆரம்பிப்பேன். அப்போதான் வேலை ஈஸியா முடியும், ஒண்ணும் பிரச்னை இருக்காது.” 

சுரேஷ் பாலாஜி சென்னை காளிகாம்பாள் கோயில் கோபுரக் கலச வேலை, கந்தசாமி கோயிலில் வள்ளி-தெய்வயானை சந்நிதியில் கதவில் தகடு பதித்தது, திருத்தணி கோயில் பிராகார வேலைப்பாடு, பழநி முருகன் கோயில் கருவறையை அழகுபடுத்தியது, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கைங்கர்யம் செய்தது, கரூர் தான்தோன்றி மலைக் கோயிலில் அலங்காரம்... என ஏகப்பட்ட கோயில்களில் கைங்கர்யம் செய்திருக்கிறார். 

சரி... சுரேஷ் பாலாஜிக்கு அவருடைய திருப்பணியில் நெருக்கமாக உணரவைத்த கோயில் எது? இந்தக் கேள்வியைக் கேட்டால், சற்றும் யோசிக்காமல், ``சமயபுரம்’’ என்கிறார். 

“அது எங்க குலதெய்வம். அதுனாலயோ என்னவோ, ரொம்ப நெருக்கமா, அந்நியோன்யமா உணரவைக்குது. பரவசத்தையும் திருப்தியையும் அந்தக் கோயிலுக்கு சேவை செஞ்ச பின்னாடிதான் முழுமையா என்னால உணர முடியுது.’’  

கவச வேலை என்பதும் ஒருவகையில் இறைப்பணியே! ஆத்மார்த்தமாக இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் சுரேஷ் பாலாஜி போன்ற கலைஞர்களுக்கு மனதார நன்றி சொல்வோம்!



Trending Articles

Sponsored