பசுமை தவழும் மேகமலையில் ஆங்கிலேயர் கட்டிக்கொடுத்த கௌமாரியம்மன் கோயில்!Sponsoredசுமை பரந்து விரிந்து  எழில் கொஞ்சும் அழகிய சூழலில், தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் வண்ணமயமாகக் காட்சி தருகிறது மேகமலை அருள்மிகு கௌமாரியம்மன் கோயில். கோயிலின் பிரதான தெய்வமே கௌமாரியம்மன்தான். இந்தக் கோயிலைக் கட்டியது  ஒரு ஆங்கிலேய அதிகாரி என்பதுதான் விஷேசம்.

உயர்ந்து நிற்கும் மலைச்சிகரங்களுக்கு நடுவில் உள்ள பெரும் பள்ளத்தாக்குப் பகுதியே மேகமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்தப் பள்ளத்தாக்குப் பகுதி. அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க மேகமலையைத் தேர்ந்தெடுத்தனர். தோட்டத்தில் வேலை செய்வதற்காக தேனி  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றனர். அந்த மக்கள் கடும் குளிரில், அட்டைப்பூச்சிகளுக்கு மத்தியில் காட்டைச் சீர்செய்து, தேயிலைச் செடிகளை நடவு செய்தார்கள். யானை, சிறுத்தை என்று காட்டு விலங்குகள் ஏற்படுத்திய அச்சத்தின் மத்தியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்த அந்த மக்கள் ஆங்கிலேயரிடம் வைத்த கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். "நாங்கள் வழிபட ஒரு கோயில் வேண்டும்"

Sponsored


கோரிக்கை உயர் அதிகாரிகளுக்குச் சென்றது. அப்போது மேகமலை தேயிலைத் தோட்டங்களை கண்காணிக்கும் உயர் அதிகாரி டைமண்ட் என்பவர், அம்மக்களுக்கு கோயில் கட்டிக்கொடுக்க சம்மதம் தெரிவித்தார். விரைவிலேயே அழகாக ஓர் கோயிலையும் எழுப்பிக் கொடுத்தார்.  

Sponsored


''அந்த காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் மக்களுக்கு இருந்த ஒரே ஆதரவு இந்தக் கோயில் மட்டும்தான். மலை ஏறி இங்கே வந்துவிட்டால் பல வருடங்கள் இங்கேயே தங்கி வேலை பார்த்துவிட்டு, வயதான பிறகுதான் கீழே இறங்குவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது எல்லாமே இங்கேதான் நடக்கும். இங்கே இருக்கும் மக்கள் பெரும்பாலும் சாதி வித்தியாசம் பார்க்கமாட்டார்கள். ஒருவரைப் பிடித்திருந்தால், குணம், குடும்பம் எல்லாம் நன்றாக இருந்தால் கல்யாணம் செய்துகொள்ளலாம். கல்யாணம்கூட கோயிலில்தான் நடக்கும். கோயிலுக்கு வந்து கௌமாரி அம்மனிடம் வேண்டிக்கொண்டால், அது அப்படியே நடக்கும். வருடம்தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடக்கும். அப்போது மேகமலையில் இருக்கும் எல்லோரும் கோயிலுக்கு வந்துவிடுவார்கள். திருவிழாவும் சிறப்பாக நடக்கும். பத்து வருடங்களுக்கு முன்புதான் மேகமலை மக்கள் எல்லோரும் சேர்ந்து கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்தோம். சுமார் 20,000 பக்தர்கள் கலந்துகொண்டார்கள்'' என்கிறார்கள் மேகமலை மக்கள்.

கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருவர். முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள். இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற பெயர்களும் உண்டு. எட்டு திசைகளுக்கும் அதிபதியான இவள் மயில் வாகனத்தில் வருபவள். கடலின் வயிறு கிழியுமாறு வேல்படையை செலுத்தியவள். இவளை வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும். என்றும் இளமையுடன் காட்சி தரலாம். வீரத்துக்கும் இவளே தெய்வமாகத் திகழ்கிறாள். தேவி அசுரர்களை வதம் செய்வதற்காகப் புறப்பட்டபோது முருகனின் சக்தியாக தேவியுடன் சென்றவளே கௌமாரி என்று புராணங்கள் சொல்கின்றன. 

சின்னமனூரில் இருந்து மலைப்பாதை வழியாக மேகமலை செல்லும்போது சுமார் இரண்டரை மணி நேர நீண்ட பயணத்தில் நம்மை முதலில் வரவேற்பது இந்த மேகமலை கெளமாரியம்மன் கோயில்தான். இந்த கோயிலை ஒருமுறை தரிசித்தால், மனம்  பரவசமாகும். மேகமலைக்குச் செல்பவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய கோயில் கௌமாரி அம்மன் கோயில்.Trending Articles

Sponsored