கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஷீரடி சாய்பாபா! #SaibabaSponsoredகலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக எங்கெங்கும் வியாபித்திருந்து, அருள்மழை பொழிந்து வருகின்றார். அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. அவருடைய தோற்றம்தான் புதிராக இருந்தது என்றால், அவருடைய மொழிகளும், நடவடிக்கைகளும்கூட பல நேரங்களில் புதிராகவே இருந்திருப்பதை அவருடைய சத்சரிதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர்தாம் மகாசமாதி அடையப்போகும் நாளைகூட இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே 1916-ம் ஆண்டு மற்றவர்களுக்கு உணர்த்தவே செய்தார். ஆனால், மற்றவர்கள் அதை உணரவில்லை. 1918-ம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் சாய்பாபா மகா சமாதி அடைந்தார். அவர் மகா சமாதி அடைந்த 100-வது ஆண்டு இன்று விஜயதசமியன்று தொடங்குகிறது. 

தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அவர் தம்முடைய ஜீவித காலத்தில் நடத்திய சில அருளாடல்களை இங்கே பார்ப்போம்.

Sponsored


தண்ணீரில் விளக்கேற்றிய தயாபரன்!

Sponsored


ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மசூதியில் தீபம் ஏற்றுவது பாபாவின் வழக்கம். அதற்காக தினமும் கடைத்தெருவிற்குச்  சென்று வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி தீபம் ஏற்றுவார். சிலநாள்கள் இப்படியே சென்றன. ஒருநாள் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவு செய்தனர். அதன்படி இனி யாரும் பாபாவுக்கு எண்ணெய் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தனர். பாபாவுக்குக் கொடுக்கும் எண்ணெய்க்குக் காசு வராது என்பதால்தான் அந்த முடிவுக்கு வந்தனர். 

இதை அறிந்த மகான் அவர்களுக்கு ஞானம் வழங்க விரும்பினார். எனவே, அவர் அந்த எண்ணெய் வியாபாரிகளிடம் சென்று எண்ணெய் கேட்டார். ஆனால், அவர்கள் யாரும் எண்ணெய் தர முன்வரவில்லை.

அனைத்தும் அறிந்த சாயிநாதர் எதுவும் பேசாமல் தன் மசூதிக்குச் சென்றார். அவர் என்ன செய்கிறார் என்பதைக் காண எண்ணெய் வியாபாரிகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். பாபா எண்ணெய் டப்பாவை கையில் எடுத்து, அதில் சிறிது நீர் ஊற்றினார். அதைத் தன் வாயில் ஊற்றி பின்னர் அந்த நீரை மறுபடியும் எண்ணெய் டப்பாவில் நிரப்பி, அதைத் தீபங்களில் ஊற்றினார். அவரைச் சாதாரண மானிடர் என்று அதுவரை எண்ணியிருந்த வியாபாரிகள் அதிசயிக்கும் வகையில் தீபங்கள் எரியத் தொடங்கின. 

இதைக் கண்ட வியாபாரிகள் அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். இவ்வாறு பாபா அவருக்கு ஞானம் வழங்கி ஆசி கூறினார். மேலும் என்றும், எவரிடத்தும் பொய் கூறக் கூடாது என்றும், எப்போதும் பொருளாசை இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

மன அமைதி அருளும் மகான்!

ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.

வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள். 

சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர், த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய்? என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால், தான் எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.

நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால், பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும் எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.

அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம், ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால், ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.

ஆனால், நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார். 

பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.

ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலி ருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.

காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்னைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட  மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி, அவரது மனமானது அமைதியடைந்தது. 

பாபாவின் உத்தரவே தாரகமந்திரம்!

 ஷீரடிக்கு யார் வர வேண்டும் என்றாலும், இல்லை யார் ஷீரடியிலிருந்து கிளம்ப வேண்டும் என்றாலும் சரி பாபாவின் அனுமதி இருந்தாலே அது நிகழும். அவ்வாறு இமாம்பாய் என்ற ஒரு பாபாவின் அடியவர், தன் ஊருக்குக் கிளம்புவதற்கு ஆயத்தமாகி பாபாவிடம் விடை பெறச் சென்றார். ஆனால், பாபா அவரை அப்போது ஊருக்குப் போக வேண்டாம் என்றும், நிலைமை சரியில்லை என்றும் கூறினார். இமாம்பாய் தன் வீட்டிற்கு போகும் அவசரத்திலும் ஆர்வத்திலும் பாபாவின் வார்த்தையை மீறிப் புறப்பட்டார். மேலும் அவர் கால்நடையாக செல்லலாம் என்றும் தீர்மானித்தார்.

ஷீரடியில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவு வரை எந்தவோர் இடைஞ்சலுமின்றி அவர் கடந்தார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர் சுராலா என்ற நதிக்கரையில் நடந்து சென்றார். அப்போது வானிலை மோசமாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் அதிகாரி அவரை மேலும் பயணத்தைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார். இன்னும் நான்கு மைல் மட்டுமே எஞ்சியிருப்பதால், அவர்தான் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் மூன்று மைல் தொலைவு சென்றதும், பலத்த காற்று வீசத் தொடங்கியது. இடியுடன் பெரும்மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கலக்கமுற்ற இமாம்பாய் சாயிநாதரை அழைத்தார். அப்போது வானில் ஒரு மின்னல் கீற்று வந்தது. அந்த ஒளியில் சாயிநாதரை தரிசித்தவர், சாயியைப் பணிந்து வணங்கியபடிஅந்த நதியைக் கடந்து சென்றார். அவர் நதியைக் கடக்கும் வரையில் தண்ணீர் அவரின் முழங்கால் அளவே இருந்தது. மறு கரைக்குச் சென்றதும் அவர் திரும்பி ஆற்றினை நோக்கும்போது அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டார். பாபாவின் அருளால்தான்  தன்னால் ஆற்றினைக்  கடக்க முடிந்தது என்பதை அறிந்து அங்கேயே பாபாவுக்கு மனதார நன்றி கூறினார்.

சாயிநாதர் அன்னைக்கு நிகரானவர் ஆவார். ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்த கணத்தில் ஒடிச்சென்று காக்கின்றாளோ, அவ்வாறே சாய்நாதர் தன் பக்தர்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் ஓடிச்சென்று அவர்களைக் காப்பார்.

எனவே ஶ்ரீசாயிநாதரை வணங்கி இந்த நாளில் அவரின் அருளைப் பெறுவோம்.Trending Articles

Sponsored