இன்று மாலை சபரிமலை நடைதிறப்பு - அடுத்த மேல்சாந்தி யார்? #SabarimalaSponsoredஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின் கூட்டத்தால் திளைத்து வருகிறது சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில். இக்கோயிலின்  நடை இன்று (16.10.2017) மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரும் இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத மண்டல பூஜைகள், மகரஜோதி விழாக்கள் சிறப்பானவை. அதுமட்டுமன்றி மாதந்தோறும் இங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்கென இன்று மாலை 5 மணி அளவில் திருக்கோயிலின் நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறவுள்ளன. ஐந்து நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த விசேஷ பூஜைகளில் மேல் சாந்தி தேர்வு, மகாராஜா சித்திரை திருநாள் பிறந்த நாள் வழிபாடு  நடைபெறவுள்ளது. தற்போதைய மேல் சாந்தி உன்னிக்கிருஷ்ணன் நடையைத் திறந்து பூஜைகளை மேற்கொள்வார். பிறகு இரவு பத்து மணியளவில் நடை சாத்தப்படும். பின்னர் மீண்டும் நாளை அதிகாலை பூஜைகள் தொடங்கும். நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் மகாதந்திரிகளின் தலைமையில் நடைபெறும். உஷக்கால பூஜை, உச்சி கால பூஜை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசம் போன்ற சிறப்பான பூஜைகள் இந்த ஐந்து நாள்களும் நடைபெறும். ஐந்து நாள்களிலும் இரவில் படி பூஜையும் நடைபெறும். இந்த ஐந்து நாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மேல் சாந்தி தேர்வு முறைகள் குறித்து ஆரியங்காவு ஸ்ரீ ஐயப்பன் கோயிலின் ஓதுவார் மூர்த்தியாக இருந்து ஓய்வு பெற்ற முருகய்யாவிடம் கேட்டோம்..

Sponsored


Sponsored


"ஸ்ரீஐயப்பனின் சந்நிதியில் நடைபெறும் எல்லா வழிபாடுகளும் சபரிமலை தந்திரிகளின் மேற்பார்வையில்தான் நடைபெறும். நீண்டகாலமாக ஐயப்பனை ஆராதிக்கும் உரிமை தாழமண் குடும்பத்திடம் மட்டுமே இருந்து வருகிறது. கண்டரரு ராஜீவரரு, மகேஷ் மோகனரு தந்திரிகளின் ஆலோசனைப்படியே சபரிமலை சந்நிதானத்தின் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தந்திரிகளே முதன்மை குருவாக நின்று சபரிமலை நிர்வாகத்தை செய்துவருகிறார்கள். இவர்களே மேல் சாந்தி எனப்படும் சபரிமலை தலைமை அர்ச்சகரைத் தேர்வு செய்ய உதவுகிறார்கள்.

ஆண்டுதோறும் புதிய மேல் சாந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த ஆண்டு நாளை (17.10.2017) காலை எட்டு மணி அளவில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தந்திரிகள், தேவசம்போர்ட் உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தேர்வு நடைபெறும். தகுதியானவர்களைத் தேர்வு செய்ய, முன்னரே விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளார்கள். இந்தப் பொறுப்புக்கான முக்கியத் தகுதி, மேல் சாந்தியாக விண்ணப்பம் செய்தவர் நம்பூதிரியாக இருக்க வேண்டும். சகலவித பூஜை விதிகளையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்து இருக்க வேண்டும். எந்தவித சர்ச்சைகளிலும் ஆட்படாதவராக இருக்க வேண்டும்... எனப் பல விதிமுறைகள் உள்ளன.

நாளை காலை சபரிமலை ஐயப்பன், மஞ்சள் மாளிகை மாதா என இரு சந்நிதிகளுக்கும் சேர்த்து இரண்டு மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த முறை அறுபதுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களை தந்திரிகள் நேர்முகத்தேர்வு செய்து, அதிலிருந்து 23 பேர்களை இறுதியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் கேரளா, மைசூர், பெங்களூரு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களின் பெயர்கள் எழுதிய சீட்டுகளை சந்நிதானத்தில் வைத்து ஒரு குழந்தையை வைத்து எடுக்கச் சொல்வார்கள். இதில் தேர்வானவரே மேல் சாந்தியாகப் பொறுப்புக்கு வருவார். இரண்டு பாத்திரங்களில் சீட்டுகள் இருக்கும். ஒரு பாத்திரத்தில் மேல் சாந்திக்குத் தேர்வானவர்கள் பெயர் இருக்கும். மற்றொரு பாத்திரத்தில் ஒன்றுமே எழுதப்படாத துண்டுச் சீட்டுகளும், ஒரே ஒரு சீட்டில் மட்டும் 'மேல் சாந்தி' என்று எழுதப்பட்ட சீட்டும் இருக்கும். முதல் பாத்திரத்தில் ஒருவர் பெயர் எடுத்தால் அதே வேளையில், அடுத்த பாத்திரத்தில் மேல் சாந்தி என எழுதப்பட்ட சீட்டும் எடுக்க வேண்டும். இரண்டுமே ஒன்றாக வரும்வரை தொடர்ந்து சீட்டுகள் எடுக்கப்படும். இறுதியில் தேர்வாகும் இரு நபர்களே ஐயப்பன் சந்நிதி மற்றும் மஞ்சள் மாதா சந்நிதிக்கு மேல் சாந்திகளாகப் பணியாற்றுவார்கள். 

இன்று மாலை திறக்கப்படும் ஐயப்பன் கோயிலின் நடை 21-ம் தேதி வரை திறந்து இருக்கும். நாளை, கேரளா முதல்வர் பினராயி விஜயன் வருகை தந்து தேர்வு முறைகளைக் கவனிப்பார். தீபாவளி முடிந்த அடுத்த நாள் திருவாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பிறந்தநாள் வருவதால் அன்று ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

சாதாரணமாக மலையாள மாதத்தின் முதல் மூன்று நாள்கள் நடை திறக்கப்படும். பின்னர் தீபாவளிக்கு என தனியாக இரண்டு நாள்கள் வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டு இரண்டும் சேர்ந்து வருவதால் மன்னரின் பூஜையும் சேர்த்தே செய்யப்படுகிறது. அடுத்த மாதம் சபரி மலையில் வரவுள்ள கார்த்திகை வைபோகங்களை வரவேற்க ஆயத்தப்பணிகள் நாளைமுதல் நடைபெற உள்ளன. உலகம் எங்கும் ஐயப்பனின் திருக்கோயில் இருந்தாலும், சபரிமலை ஐயப்பனின் சந்நிதி சிறப்பானது. இங்குள்ள தியான நிலை ஐயப்பனை வேறு எங்குமே தரிசிக்க முடியாது. யோகப்பட்டாசனத்தில் சின்முத்ரா சங்கல்பமான வடிவில் ஐயப்பன் தத்வமஸி என்ற தத்துவத்தை வெளிக்காட்டி அருள் செய்கிறார். எனவேதான் இங்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, பக்தர்கள் வரும் இந்த ஐந்து நாள்களில் சென்று ஐயப்பனை தரிசித்து, ஐயப்பனின் பரிபூரண ஆசியைப் பெறலாம்' என்றார்.Trending Articles

Sponsored