எல்லோருக்கும் நெருக்கமானவர் பாபா-ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்Sponsoredசில மகான்களின் சரிதமும், அவர்கள் நிகழ்த்திய அற்புதச் சம்பவங்களும் எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் அலுப்பை ஏற்படுத்தாதவை. அந்த வகையில் ஷீரடி சாயி பாபாவின் சரித்திரத்துக்குத் தனித்துவமான இடம் உண்டு. பல சுவாரஸ்ய சம்பவங்கள், சாய் பாபாவின் கருணை, அவர் நிகழ்த்திய அதிசயங்கள்... எனப் படித்து மகிழவும் பரவசப்படவும் ஏராளமான செய்திகள் அவர் சரிதத்தில் இருக்கின்றன. எத்தனையோ பேர் ஷீரடி சாய் பாபாவின் சரித்திரத்தை எழுதியிருக்கிறார்கள். தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சமீபத்தில் வெளிவந்திருக்கும் `ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்’ மிக முக்கியமான நூல் என்கிறார்கள் சாயி பக்தர்கள். இதன் மூலப் பிரதி மராத்தி மொழியில் எழுதப்பட்டது. எழுதியவர், ஷீரடியில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் மோஹன் ஜகந்நாத் யாதவ். அதை இன்னொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, எழுத்தாளர் சிவசங்கரி தமிழில் அதை உருமாற்றம் (Transcreation) செய்திருக்கிறார். சாய் பாபா வரலாறு பக்கத்துக்குப் பக்கம் அழகு தமிழில் விரிகிறது. `ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்’ சாய் பாபா பக்தர்கள் மட்டுமல்ல, அனைவருமே படிக்கவேண்டிய நூல். நூலிலிருந்து சில சுவாரஸ்யமான பகுதிகள் இங்கே...

* ஒரு சமயம் மசூதியில் பாபா கோதுமை அரைத்துக்கொண்டிருந்தார். அந்தச் செய்தி உடனே கிராமம் முழுவதும் பரவி, கிராமவாசிகள் அங்கு திரண்டுவிட்டனர். அவர்களுள் நான்கு பெண்மணிகள், பாபாவின் கையிலிருந்த இயந்திரக் கட்டையைப் உரிமையுடன் பறித்து, சாயியின் லீலைகளைப் பாடல்களாகப் பாடியவாறு அரைக்க ஆரம்பித்தார்கள். நான்கு சேர் அளவுள்ள கோதுமையை அரைத்த பின், கோதுமை மாவை தங்கள் நால்வருக்கும் பகிர்ந்தளிப்பார் கருணையுள்ள பாபா என்ற எதிர்பார்ப்புடன், மாவை நான்கு பகுதிகளாகப் பிரித்து, கூடைகளில் அள்ளிவைக்க அவர்கள் தொடங்கியபோது, ``உங்களுக்கென்ன பைத்தியமா? மாவை எங்கே எடுத்துப்போகப் பார்க்கிறீர்கள்?’’ என்று பாபா உரக்கக் கேட்டார். பிறகு ஊர் எல்லைக்குச் சென்று ஊர் எல்லையில் கொட்டிவிடும்படி பணித்தார். அப்படிச் செய்ததனால், கொள்ளைநோய் பரவுவதைத் தடுத்து, அதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினார். அவர் இயந்திரத்தில் அரைத்தது கோதுமையை அல்ல... காலரா என்ற கொடிய நோயைத்தான். அதன் மூலம், ஆபத்தான அந்த நோயின் தாக்குதலிலிருந்து கிராமத்தையே காப்பாற்றினார். நோயின் பாதிப்பு மெள்ள மெள்ளக் குறைந்து, கிராமத்தின் வேதனையான காலம் முடிவுக்கு வந்தது.

Sponsored


* விடியற்காலையில் காணும் கனவுகள்தாம் உண்மையில் நனவாகும், இதர கனவுகளுக்குப் பலனேதும் இருக்காது என்று கூறுவதுண்டு. ஆனால், பாபா தோன்றும் கனவுகள் எந்த நேரத்தில் ஏற்பட்டாலும், அவை நனவாவது நிச்சயம். இதை அவரது பக்தர்கள் பலரும் அனுபவித்திருக்கிறார்கள். ஒரு நாள் மதியம் தீக்ஷித் என்பவரை அழைத்தார் பாபா. ``நீ டோங்காவில் ரஹாத்தாவுக்குப் போய் குஷால்சந்தை அழைத்து வா... அவரைப் பார்த்து நாளாயிற்று. `உங்களைப் பார்க்க பாபா விரும்புகிறார்’ என்று சொல்’’ என்று கூறினார் பாபா. தீக்ஷித்தும் அவரது கட்டளையை ஏற்று ரஹாத்தாவுக்குச் சென்று, குஷால்சந்தைச் சந்தித்தார். பாபாவின் விருப்பத்தை அறிந்த குஷால்சந்த், ``மதிய உணவுக்குப் பின் சற்றே கண்ணயர்ந்தபோது, என் கனவில் தோன்றிய பாபா, `இப்போதே ஷீரடிக்கு வா’ என்று சொன்னார். ஷீரடிக்குப் போக வேண்டுமென்று ஆசையிருந்தாலும், என் குதிரை இங்கில்லாததால் முடியவில்லை. அதனால், பாபாவிடம் விஷயத்தைத் தெரிவிக்கும்படி என் மகனை அனுப்பியிருக்கிறேன்... அவன் கிராம எல்லையைக்கூடத் தாண்டியிருக்க மாட்டான், அதற்குள் நீங்கள் இங்கே டோங்கா வண்டியுடன் வந்து நிற்கிறீர்கள்!’’ என்று ஆச்சர்யப்பட்டார். ``அதனால்தான் பாபா என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்... நீங்கள் ஷீரடிக்குச் செல்ல வாசலில் என் வண்டி தயாராக இருக்கிறது!’’ என்று தீக்ஷித் கூறியதைத் தொடர்ந்து, ஷீரடிக்குச் சென்ற குஷால்சந்தின் விருப்பம் நிறைவேறியது... பாபாவின் லீலையினால் அவர் மனமும் நெகிழ்ந்தது.

Sponsored


* மும்பையிலிருந்த ஓர் ஐரோப்பியர், ஒருவித உள்நோக்கத்தோடு சாயியைத் தரிசிக்க வந்தார். கூடாரம் அமைத்து அங்கு சௌகர்யமாகத் தங்கினார். பாபாவின் விருப்பமின்றி எந்த பக்தராவது மசூதியின் படிகளில் ஏறி அவரது தரிசனத்தைப் பெற முடியுமா! அது சாத்தியமேயில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த ஐரோப்பியர், மசூதியின் படிகளில் ஏற மூன்று முறை முயன்றும், பலனில்லை. மனமுடைந்துபோனவர், ஊரைவிட்டுக் கிளம்ப நினைத்து, பாபாவிடம் விடைபெறுவதற்காக வந்தார். அவரிடம் பாபா, ``நாளைக்குப் போகலாம், என்ன அவசரம்?’’ என்றார். அவரது அனுமதியின்றிக் கிளம்புபவர் பிறகு வருத்தப்பட நேரிடுமென்று எல்லோரும் கூறினார்கள். ஆனால், ஐரோப்பியர் அதைக் காதில் வாங்காமல், அனுமதியின்றியே கிளம்பினார். முதலில் ஒழுங்காக ஓடிய அவரது டோங்கா வண்டி, பிறகு குதிரைகள் மிரண்டதால் ஆட்டம் கண்டு, நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அவரை கோபர்காவ்னிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்கள். அங்குதான், பாபாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதற்காக அவர் வருந்தினார்.

* ஷீரடியில் மாதவ்ராவ் என்பவரை ஒருமுறை பாம்பு கடித்துவிட்டது. அவரை விட்டோபா கோயிலுக்கு (விஷத்தை முறிக்க) அழைத்துச் செல்லும்படி பலர் கூறியும், ``சாயி மகராஜின் ஆணைப்படிதான் நடப்பேன்...’’ என்று மறுத்துவிட்டார். பாபாவைப் பார்க்க மசூதியின் படிகளில் ஏற அவர் முயன்றபோது, ``ஏறாதே!’’ என்று உரக்கக் கூறினார் பாபா. தன்னைத்தான் பாபா அப்படித் தடுக்கிறார் என்று மாதவ்ராவ் நினைத்தாலும், உண்மையில் பாபா தடுத்தது விஷத்தைத்தான். பாபாவின் அருளால் விஷம் மேலே பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு, மாதவ்ராவும் குணமானார்.

***

`உங்கள் கண்பார்வையில் நான் படாவிட்டாலும், கவலைப்படாதீர்கள். என் எலும்புகள் உங்களோடு பேசுவதையும், உங்கள் காதுகளில் முணுமுணுப்பதையும் உங்களால் கேட்க முடியும். என்னை மட்டுமே நினைவில்கொள்ளுங்கள்... மனதாலும் ஆன்மாவினாலும் என்னிடம் நம்பிக்கை வைத்து, சுயநலமற்று என்னைப் பிரார்த்தித்தால், உங்கள் வாழ்வு சிறப்படையும். எல்லோருக்கும் நெருக்கமானவன் நான். அனைவரின் மனமும் இதயமுமே எனது உறைவிடம். நான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளேன்.’ - இது பாபாவின் அருளுரை. இந்தக் கூற்று முழுக்க முழுக்க உண்மை என்பதை, இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் அழுத்தம் திருத்தமாக உணர முடிகிறது.

***

நூல்: ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்,

ஆசிரியர்: மோஹன் ஜகந்நாத் யாதவ்

தமிழில்: சிவசங்கரி.

வெளியீடு: ஷீரடி சாயி டிரஸ்ட்,

1, சாயி நகர், 108, கிருஷ்ணன்காரணை,

ஈ.சி.ஆர்.சாலை.

பின் - 603 104.

மேலும் ஷீரடி சாயி பாபாவின் முழுமையான வரலாறு, அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவற்றை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.Trending Articles

Sponsored