“கண்படும் இடமெல்லாம் பசுமையை வளர்க்கணும்!” - ஈசன்மலை சரவணன்வேலூர் மாவட்டத்தில், பள்ளிக்கூடங்களிலோ, மலைகளிலோ, கோயில்களிலோ மரங்கள் நட வேண்டும் என்று விரும்புபவர்கள் தேடிச் செல்வது சரவணனைத்தான். அவரிடம் சொல்லிவிட்டால் அடுத்த நாளே அவரின் அகத்தியர் பசுமை உலகம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக வேலையைத் தொடங்கிவிடுவார்கள். 

Sponsored


மலையில் கிடைக்கும் அனைத்து மூலிகைகளும் சரவணனுக்கு அத்துப்படி, எந்த மூலிகை எங்கே கிடைக்கும் என்பதில் ஆரம்பித்து, மலையில் உள்ள ஒவ்வொரு மரமும் எப்போது வைக்கப்பட்டது என்பது வரை சர்வ சாதாரணமாகச் சொல்கிறார். முழுமையான சமயப் பணியும், சமூக சேவைகளையும் செய்துவரும் சரவணன் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். தனியார் நிறுவனம் ஒன்றில் ராணிப்பேட்டை மண்டல அதிகாரியாகப் பணியாற்றியவர். மலை, கோயில், பள்ளிக்கூடம் என்று மரங்கள் நடுவதிலேயே ஆர்வமாக இருந்த சரவணன் ஒரு கட்டத்தில் வேலையை உதறிவிட்டு முழுநேரமாக இந்தப் பணியைக் கைகொண்டு விட்டார். 

Sponsored


 தற்போது பகுதிநேரமாக சிறு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சரவணன், பெரும்பாலான நேரங்களில் மர வளர்ப்பையே பணியாகச் செய்துவருகிறார். காவேரிப்பாக்கம் அருகில் உள்ள ஞானமலையில் சரவணனைச் சந்தித்தோம்.

Sponsored


“இந்த வருஷம் எங்க இலக்கு இந்த ஞானமலை. முழுமையா வேலை போயிட்டு இருக்கு. முருகன், வள்ளியைத் திருமணம் செஞ்ச உடனே இங்கதான் வந்திருக்காரு, இந்த மலை மேல முருகன், மயில் கால்தடமெல்லாம் கூட இருக்கு" 

உற்சாகமாகப் பேசுகிறார் சரவணன். 

“என்னோட சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர். படிப்பு, கல்லூரின்னு திரிஞ்ச சராசரி பையன்தான் நானும். ஏதோ ஓர் உந்துதல்ல, இன்ஜினீயரிங் படிக்கும்போதே, சைவ சித்தாந்தமும் படிச்சேன். அதுக்குப்பிறகுதான் உண்மையான இறைத்தொண்டு எதுன்னு புரிஞ்சுச்சு.

நாம செய்யுற வேலை, மனிதர்களுக்கு மட்டுமல்லாம சகல உயினங்களுக்கும் பயனளிக்கணும். 'சிவ, சிவ'-ன்னு சொல்றோம் பாருங்க... அதுல ‘சி',  நம்ம எல்லோரையும் குறிக்கும். 'வ' தாவரங்களை, பசுமையைக் குறிக்கும். தாவரங்கள் இல்லாம நாம் இல்லை. 'கண்படும் இடமெல்லாம் பசுமையை வளர்க்கணும். அதுதான் இந்த ஜென்மத்துல நமக்கு விதிக்கப்பட்ட வேலை' -ன்னு முடிவு செஞ்சிட்டேன். 

படிப்பு முடிஞ்சதும் ராணிப்பேட்டையில வேலை... தமிழ்நாட்டுல காற்று மாசுபாடு அதிகமா உள்ள ஊர் ராணிப்பேட்டை. அதனால, இங்கே இருந்தே வேலையை ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு. இங்குள்ள நண்பர்களைச் சேர்த்து, 2000-ல 'அகத்தியர் பசுமை உலகம்' னு ஓர் அமைப்பு ஆரம்பிச்சோம். சாதி, சமய வேறுபாடில்லாம நிறைய பேர் அதில இணைஞ்சாங்க. 

முதல்ல குமாரசாமி மடம்ங்கிற இடத்துல குப்பை மண்டிக் கிடந்த காட்டைச் சுத்தப்படுத்தி, பலவகையான செடி கொடிகளை நட்டோம்.  அங்கேயே ரொம்பநாள் தங்கி பராமரிச்சு ஒரு நந்தவனமா அதை உருவாக்கினோம். 

அதைப் பாத்து, பள்ளிகள், கோயில்கள்ல இருந்து வந்து எங்ககிட்ட உதவி கேட்டாங்க. அங்கெல்லாம் நட நிறைய மரங்கள் தேவைப்பட்டுச்சு. என் நண்பர் தயாளன், நர்சரி வைக்கிறதுக்கு அவரோட 35 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார். அதுமட்டுமல்லாம, அவரும் எங்களோட சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சார். வீட்டுல ஏதாவது பழம் சாப்பிட்டா, அதோட விதையைக் கொண்டு போயி விதைப்போம். பக்கத்துல, ஜவ்வாது மலை இருக்கு. அங்க போயி காடுகள்ல கிடைக்குற விதைகளைக் கொண்டு வந்தோம். யார் வந்து கேட்டாலும் மரங்களை இலவசமாவே கொடுப்போம்.

ஆனா, பல இடங்கள்ல நாங்க கொடுத்த மரக்கன்றுகள் பராமரிப்பு இல்லாம செத்துப் போறத பார்த்தோம். 'மரங்களைக் கொடுத்தா மட்டும் பத்தாது... பக்கத்துலயே இருந்து பராமரிக்கணும்'ன்னு புரிஞ்சுச்சு. அப்புறம்தான் 2004 - ல ஈசன் மலைய தத்தெடுத்தோம். அங்கேயே மூணு வருஷம் தங்கி மரங்கள் நட்டோம். இப்போ அந்த மலை பச்சைப்பசேல்ன்னு இருக்கு..." 

ஈசன் மலையின் அடிவாரம் முதல் உச்சி வரை ஒவ்வொரு மரங்களைப் பற்றியும், எப்போது நடப்பட்டது, அந்த மரம் எதற்கெல்லாம் பயன்படும் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறார் சரவணன். 

“எங்க தாத்தா ஒரு மூலிகை வைத்தியர். எங்க அம்மாவுக்கும் மூலிகைகள் பற்றி நல்லாத் தெரியும். அம்மாக்கிட்டதான் நான் கத்துக்கிட்டேன். இந்த மலையில் ஏராளமான மூலிகைகள் இருக்கு. அதுபோக நாங்களும் மருத்துவக் குணமுள்ள நருவிழி, இலந்தை, ஈச்சை, பனம்பழம், சூரிப்பழம், பாலபழம்,  நாவல்பழம், அத்தி, அழிஞ்சில் போன்ற பலவகையான மரங்களை நட்டு வளர்க்கிறோம். மூலிகைகள் நம் நாட்டுல இருந்து வெளிநாட்டுக்குப் போய் திரும்பவும் மருந்தா இங்க வருது. ஆனா, நாம மூலிகைகளைக் கண்டுக்காம இருக்கோம். மூலிகைகள் பத்தி சித்தர்கள் நெறயா எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்க. அதைச் சரியா பின்பற்றினாலே எந்த நோயும் வராது. 

உடல்ல 16 இடங்கள்ல திருநீறு அணியனும்ன்னு சைவம் சொல்லுது. நெற்றியில மதன நீர் இருக்கும். இது பல சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும். நெற்றியில் திருநீறு பூசும்போது அது மதன நீரை உறிஞ்சிடும். இது ஒருவகை மருத்துவம். அதுமட்டுமல்லாம, திருநீறை   எரிச்சா திருநீறுதான் கிடைக்கும். மற்ற பொருள்களை எரிச்சாலும் திருநீறுதான் கிடைக்கும். சிவனும் அப்படித்தான்... மாறாத தன்மை கொண்டவர். 

எல்லா மனிதர்களையும் நேசிக்கணும், அனைவருக்கும் சேவை செய்யணும்ன்னு சைவம் போதிக்குது. அதை நான் பின்பற்றுகிறேன் " என்கிறார் சரவணன்.

அவர் நட்டு வளர்த்த அந்த நாவல் மரம், அவரின் பேச்சுக்கு இசைந்து காற்றில் இணைந்து தலையாட்டுகிறது!Trending Articles

Sponsored