திருப்பதி அன்னதானக்கூடத்துக்கு, ‘தரிகொண்ட வெங்கமாம்பாள்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா? #TirupatiSponsoredதிருப்பதி செல்பவர்கள் தவறாமல் சென்று வரும் இடம், வராகசாமி கெஸ்ட் அவுஸ் அருகில் அமைந்திருக்கும் 'தரிகொண்ட வெங்கமாம்பாள் அன்னப்பிரசாதக்கூடம்'. சுவாமி தரிசனம் செய்து வருபவர்கள் சிரமமில்லாமல் உணவருந்தச் செல்வதற்கு வசதியாகக்  கோயிலிலிருந்து அவர்கள் வெளியே வரும் இடத்துக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. 

திருப்பதியில் லட்டு எப்படி பிரசித்திபெற்று விளங்குகின்றதோ, அதுபோல் இங்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதம். பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், பாமரர்கள் என எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இந்த அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்டுச் செல்வார்கள். பெரும் செல்வம் படைத்த கோடீஸ்வரர்கள்கூட, ஆயிரக்கணக்கானோர்  நிற்கும் க்யூவில் நின்று பொறுமையுடன் சாப்பிட்டு வருவார்கள்.

Sponsored


Sponsored


நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரை இங்கு உணவு சாப்பிட்டுச் செல்கிறார்கள். இத்தனை பேருக்கும் சமைக்கும் விதமாக ராட்சத உணவுப் பாத்திரங்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகவே இரவு பகல் பாராது ஒரு குழுவே இயங்கி வருகின்றது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த அன்னதானக்கூடத்துக்கு ‘வெங்கமாம்பாள்’ என்னும் பெயர் எதற்கு? அவர் யாரென்று அறிந்துகொள்வோம் வாருங்கள். 

திருப்பதி வெங்கடாசலபதியின் மிகப் பிரசித்திபெற்ற பக்தர்களில் முக்கியமான பெண் பக்தை தரிகொண்டா வெங்கமாம்பாள். ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் தரிகொண்டா என்னும் கிராமத்தில் 1730 -ம் ஆண்டு பிறந்தவர். 

சிறு வயதிலிருந்தே சீனிவாசப்பெருமாள்மீது மிகுந்த பக்தியும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்தார். லௌகீக விஷயங்களில் பெரிதாக ஆர்வமில்லாமல் இருந்தார். அவரது இந்தப் போக்கு அவரது பெற்றோர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் பயத்தையும் தந்தது. அதனால், அவர்கள் அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். திருமணமும் நடந்தேறியது. ஆனால், அவரது கணவர் சில ஆண்டுகளிலேயே மறைந்தார். கணவனை இழந்தாலும் சற்றும் மனம் தளராது தனது வாழ்க்கையை சுவாமி வெங்கடாசலபதிக்கு அர்ப்பணித்தார். 

காலையில் எழுந்தால், வீட்டு வேலைகள் போட்டதுபோட்டபடி கிடக்க சதாசர்வகாலமும் பகவத் சிந்தனையிலேயே இருந்தார். திருப்பதி வெங்கடாஜலபதியின் அன்பில் தன்னைத் தொலைத்த அவர், தனக்கு 20 வயது பூர்த்தியாவதற்குள் சுவாமி வெங்கடாஜலபதியின் புகழ் பாடும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியிருந்தார்.

அவர் பாடிய பாடல்களைக் கேட்ட செல்வந்தர்களும் மிராசுகளும் அவருக்கு ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கினர்.

இப்படியாக அவருக்குப் பெரும் நிதி சேரத்தொடங்கியது. தானத்தில் சிறந்தது அன்னதானம். பசித்த வயிற்றின் பசிப்பிணி போக்குவதே பகவானுக்குச் செய்யும் அரிய சேவை என வெங்கமாம்பாள் உணர்ந்தார். சேர்த்த செல்வங்களை எல்லாம் தன்னை நாடிவரும் ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கினார். குறைவற்ற அன்னமும் நிறைவான நீரும் பக்தர்களுக்கு வழங்கினார். 

பத்மாவதி தாயாரின் சமிக்ஞையினால், அப்போது திருமலையை நிர்வகித்து வந்த ஹாதிராம் பாவாஜி மடத்தினர் வழங்கிய இடத்தில் 'குடில்' ஒன்று அமைத்து, புளிய மர நிழலில் அன்னதானம் செய்தார். குறிப்பாக, மே மாதம் வரும் 'நரசிம்ம ஜெயந்தி'யின் போது 10 நாள்களும் தடபுடலான விருந்து உபசாரம் பக்தர்களுக்கு நடைபெற்றது. இதைப் பார்த்த பலரும் நன்கொடைகளை இவருக்கு ஏராளமாக அளித்தனர்.  

1785 -ம் ஆண்டு  தொடங்கி, 1812-ம் ஆண்டு வரை வெகுவிமரிசையாக இவரது இறுதி மூச்சு வரை நடைபெற்றது. இதனால் இவரை மாத்ருஶ்ரீ என்றே அழைத்தனர். 

 மிகச்சரியாக 200 ஆண்டுகளுக்குப் பிறகு, மேல்திருப்பதியில் 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி அப்போதைய முதல்வர் என்.டி.ராமராவ் 'நித்தியானந்தம்' என்னும் இலவச அன்னப்பிரசாதக்கூடத்தைத் தொடங்கிவைத்தார். 

எல்லா நாள்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகின்ற இந்தத் திட்டம், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகளால் இப்போதும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை என்றென்றைக்குமாகத்

தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நன்கொடையாகக் கிடைக்கும் பணம் முழுவதையும் தேவஸ்தானம் தேசிய வங்கிகளில் முதலீடு செய்கிறது. அதிலிருந்து கிடைக்கின்ற வட்டித்தொகை இத்திட்டம் செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, என்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்கொடை வழங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச நன்கொடை 1,000 ரூபாய். ஒரு லட்ச ரூபாயிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் வரை நன்கொடையாக அளிப்பவர்களுக்குச் சிறப்பு தரிசனம், தங்கும் இடம் போன்ற சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பத்து லட்ச ரூபாய் நன்கொடை கொடுப்பவர்களின் பெயர்கள், வளாகத்தில் உணவுப் பரிமாறப்படும் இடத்தில் எழுதப்படுகிறது. ஆண்டுதோறும் 70 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.

33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட அன்னதானக்கூடம் 2011 -ம் ஆண்டு  ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டிலால் திருமலையில் திறந்துவைக்கப்பட்டது. வெங்கமாம்பாள் குடிலும் பக்தர்கள் உணவருந்திய உணவுக்கூடமும் இந்த இடத்தில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.Trending Articles

Sponsored