மனிதர்களுக்காகத் தேவன் காத்திருக்கிறார்! #BiblestoriesSponsoredஸ்ரவேல் மக்களிடையே இயேசு கிறிஸ்து நிகழ்த்திய பிரசங்கங்கள், உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை. உவமைகளாகவும் போதனைகளாகவும் அவர் கூறிய 'குட்டிக் கதைகள்' மிகவும் வலிமையான கருத்துகளை தன்னகத்தே கொண்டவை. அவற்றிலிருந்து ஒரு குட்டிக் கதை... மனம் திரும்பும் மனிதர்களுக்காக தேவன் காத்திருக்கின்றார்!  இதோ உங்களுக்காக...


ஒரு கிராமத்தில் பெருஞ்செல்வந்தர் ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மைந்தன் தகப்பன் சொல்லை மீறாதப் பிள்ளையாக அவர் சொன்ன சொல்லையே கட்டளையாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். வயல்களில் பணியாளர்கள் மூலம் உழவு செய்து பயிரிடுவது, ஆட்டு மந்தைகளைப் பணியாளர்கள் மூலம் மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செல்வது, அறுவடையான தானியங்களைக் களஞ்சியத்தில் கொண்டு சேர்ப்பது, எஞ்சிய தானியங்களை சந்தைக்குக் கொண்டு செல்வது என தினம் ஒரு வேலை செய்து வந்தான்.  
 இளைய மைந்தனான அவனது தம்பியோ...சோம்பலும், கேளிக்கையுமாக தன் வாழ்நாள்களை வீணாக்கி வந்தான். சிறுவயதிலேயே அவனுக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. வாலிபப் பருவம் அடைந்ததும் கேட்கவா வேண்டும். திடீர் திடீரென தந்தையிடம் வந்து பெரும்தொகையைப் பெற்றுச்செல்வது, அவற்றைத் தம் நண்பர்களுடன் சேர்ந்து கேளிக்கைகளில் செலவிடுவதுமாக இருந்தான். இதனால், அவனது தகப்பன் பெரும் துயருற்றார். மகனுக்கு அறிவுரைகள் பல சொன்னதுடன் பணத்தின் அருமையையும் எடுத்துக்கூறினார். ஆனால், அவனோ அவையெல்லாவற்றையும் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை.

Sponsored


Sponsored


ஒருநாள் அவனது நண்பர்கள் கூறிய தீய ஆலோசனைகளைக் கேட்டு, தனியாகத் தொழில் தொடங்கப்போவதாகக் கூறி, தனக்கான பங்கைப் பிரித்துத் தரும்படி தந்தையிடம் கேட்டான். இதைக் கேட்டதும் அவனது தந்தைக்குக் பேரிடி விழுந்தது போலிருந்தது. ஆனாலும், மகன் விடுவதாக இல்லை; கொடுஞ்சொற்களால் அவனது தந்தையைத் திட்டித் தீர்த்தான். அன்பு மிக்க அந்தத் தகப்பனும் அவனது பங்கைப் பிரித்துக் கொடுத்தார். அந்த சொத்துகளைப் பெற்றுக்கொண்ட இளையமகன் அவற்றை விற்று காசாக்கி வேறு ஒரு தேசத்தில் புதிதாகத் தொழில் தொடங்கினான். தெரியாத தொழிலில் ஆழம் தெரியாமல் காலை விட்டதாலும், கூடா நட்புகளாலும் வெகுவிரைவிலேயே தனது செல்வங்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டான். 

காலம் செய்த கோலம் என்பார்களே... அதுபோல் பெரும் பஞ்சம் ஒன்று வந்தது. கையில் இருந்தவை எல்லாம் இழந்து வறிய நிலையில் இருந்த அவன் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டான். அவனால் சொந்த ஊருக்குத் திரும்பவும் முடியவில்லை. அந்த ஊரிலேயே இருந்த பெரிய விவசாயி ஒருவரிடம் பன்றிகளைப் பராமரிக்கும் வேலையில் சேர்ந்தான். அவற்றின் கொட்டிலுக்கு அருகிலேயே இருந்த குடிலில் தங்கிக் கொண்டான். ஆனால், அவனுக்கு வழங்கப்பட்ட உணவோ மிகவும் குறைவாகவே இருந்தது. பசியின் கொடுமையில் பன்றிகளுக்கு இருந்த தவிட்டைத் தின்றான். அப்போதுதான், தன் தந்தையைப்பற்றி நினைத்துப் பார்த்தான். 

'என் தந்தையாரின் அரண்மனை போன்ற மாளிகையில் அவரது ஏவலாளிகள் எங்கள் வீட்டின் அறுசுவையான உணவை உண்பார்களே... அவரது பேச்சைக் கேட்காமல் வந்ததன் கொடுமையை இப்போது நான் அனுபவிக்கிறேனே' என வருந்தினான். இரவு முழுவதும் கண்ணீருடன் தனது படுக்கையில் அழுது புரண்டு கொண்டிருந்தான். உறக்கம் இல்லாமலிருந்ததால் முகமெல்லாம் வீங்கிப் போயிருந்தது. காலையில் கண் விழித்ததும் அவனது புதிய எஜமானரிடம் தன் கதையைக் கூறி பணியிலிருந்து விலகி தனது ஊருக்குப் புறப்பட்டுப் போனான். 

பல நாள்கள் பல மைல்கள் நடந்து பசியும் தாகமுமாக அவனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தான்.  மாலைவேளையில் வழக்கம்போல் தனது வீட்டு மாடியிலிருந்த பால்கனியில் நின்றவாறே, 'தனது இளையமகன் என்றாவது வருவான்' என அன்றும் காத்திருந்தார் அவனது தந்தை. தூரத்தில் தன் மகன் வருவதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மகனை அன்போடு வரவேற்க இறங்கி ஓடோடி வந்தார். 
அப்போது, ``தகப்பனே! இறைவனுக்கு எதிராகவும் உங்களுக்கு முன்பாகவும் பாவங்கள் பல செய்தேன். இனி, நான் உங்களுடைய பிள்ளை அல்ல. அதற்குரிய எவ்விதத் தகுதியும் எனக்கில்லை, உங்கள் ஏவலாளிகளில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளுங்கள்...'' எனக் காலில் விழுந்து அழுது அரற்றினான் அந்த இளைய மகன்.

தன் மகனை ஆரத்தழுவிக்கொண்டு, ''வழிதவறிப் போன ஆட்டைப்போல் காணாமல்போன என் மகன் என்னிடத்தில் திரும்பி வந்துவிட்டான்'' எனச் சத்தமிட்டவாறு தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். என் மகனின் வருகையை சிறப்பிக்கும்விதமாக கொழுத்த கன்றுக்குட்டியை வெட்டி விருந்து தயாரியுங்கள். விலை உயர்ந்த ஆடைகளால் அவனை அலங்கரியுங்கள்" எனத் தன் ஏவலாளிகளுக்கு ஆணையிட்டார். 

இப்படித்தான் ஆண்டவரும்  நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் அவற்றை நாம் உணர்ந்து மனம் திருந்தினால் நம்மை அன்போடு ஏற்றுக்கொள்ள காத்திருக்கின்றார். ஆனால், செய்த தவற்றை எண்ணி மனம் வருந்தினால் மட்டும் போதாது. மீண்டும், எப்போதும் அந்தத் தவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்கிறார் இயேசு கிறிஸ்து.Trending Articles

Sponsored