சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறதுSponsoredபுகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த ஆண்டு மண்டல கால பூஜை, வரும் 16-ம் தேதி  தொடங்குகிறது. அதை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில், தற்போதைய மேல்சாந்தி டி.எம் உன்னிகிருஷ்ணன் நடை திறந்து  தீபாராதனை நடத்தினார். அதைத் தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் புதிதாக ஏ.வி உன்னிகிருஷ்ணனும் மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கு அனீஷ் நம்பூதிரியும் புதிய மேல்சாந்திகளாக ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். சன்னிதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தந்திரி கண்டரர் மோகனர் புனித நீர் தெளித்து ஐயப்பனின் மூல மந்திரங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. நாளை, புதிய மேல்சாந்திகள் மண்டல கால பூஜை நடத்த இருக்கின்றனர். தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பின், 3.30 மணி முதல் 11.30  மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. பகல் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு சாத்தப்படுகிறது. 41 நாள்கள் பூஜைக்குப் பின் ,வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல கால பூஜைகள் நிறைவுபெறுகின்றன. அன்று நடை சாத்தப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored