துலாம் ராசிக்காரர்களுக்கு தொடங்குகிறது நல்ல நேரம் - கார்த்திகை மாத ராசிபலன் சிம்மம் முதல் விருச்சிகம் வரை நான்கு ராசிகளுக்குமான ராசிபலன்



Sponsored



கார்த்திகை மாத ராசிபலன்
நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை
'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

சிம்மம்:
4-ல் சூரியன், புதன், சனி; 2,3-ல் செவ்வாய்; 3-ல் குரு; 3,4-ல் சுக்கிரன்; 12-ல் ராகு; 6-ல் கேது

Sponsored


சிம்ம ராசி அன்பர்களே!
புதன், கேது, சுக்கிரன் ஆகியோர் இந்த மாதம் முழுவதும் சாதகமான பலன்களைத்  தரவிருக்கின்றனர், மாதப் பிற்பகுதியில் இருந்து செவ்வாயும் சாதகமான இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.

Sponsored


அலுவலகத்தில் இது வரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். மாதப் பிற்பகுதியில் ராணுவம், காவல், தீயணைப்புத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 18,24,25,27; டிசம்பர் 3,4,5,6,10,14,15
சந்திராஷ்டம நாள்கள்: 28,29,30 - பொறுமை அவசியம்
அதிர்ஷ்ட எண்கள்:1,3,7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்

பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடவும்.

கன்னி:

3-ல் சூரியன், புதன், சனி; 1,2-ல் செவ்வாய்; 2-ல் குரு; 2,3-ல் சுக்கிரன்; 11-ல் ராகு; 5-ல் கேது

கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் மாதமாக அமையும். சூரியன், குரு, சனி, ராகு ஆகியோர் மிக உயர்வான பலன்களைத் தரவிருக்கிறார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும். 

மாணவ மாணவியர்க்கு, புதன் சாதகமாக இல்லாத காரணத்தால் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருபலம் இருப்பதால், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச்  செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

சாதகமான நாள்கள்: நவம்பர் 19,20,28,30; டிசம்பர் 5,6,7,11
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 1,2
அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், விநாயகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

துலாம்:

2-ல் சூரியன், புதன், சனி; 12,1-ல் செவ்வாய்; 1-ல் குரு; 1,2-ல் சுக்கிரன்; 10-ல் ராகு; 4-ல் கேது

துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் மட்டுமே அனுகூலமான பலன்களைத் தருவார். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனிப்பெயர்சிக்குப் பிறகு துலாம் ராசி அன்பர்களுக்கு நல்லநேரம்தான்.பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை முயற்சி செய்துதான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். குருபகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால், திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  ஆனால், ஜன்ம குரு என்பதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

சாதகமான நாள்கள்: நவம்பர் 18,21,22,23,29,30; டிசம்பர் 1,2,7,9,14,15
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 3,4 - எதிலும் எச்சரிக்கை தேவை
அதிர்ஷ்ட எண்கள்: 2,4,7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்

பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.

விருச்சிகம்:

1-ல் சூரியன், புதன், சனி; 11,12-ல் செவ்வாய்; 12-ல் குரு; 12,1-ல் சுக்கிரன்; 9-ல் ராகு; 3-ல் கேது

விருச்சிக ராசி அன்பர்களே!

ராசிநாதன் செவ்வாய் மாதப் பிற்பகுதியில் சாதகமற்ற இடத்துக்குச் சென்றாலும், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிக்கிறார். மற்ற கிரகங்களும் ஓரளவுக்கு நன்மை தரும் நிலையிலேயே சஞ்சாரம் செய்கின்றனர். கேதுவும் நற்பலன்களை அள்ளி வழங்கும் இடத்தில் இருக்கிறார். மாதத் தொடக்கத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும்.

பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் - மனைவிக்கு இடையில் சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு திடீர் யோகம் உண்டாகும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும். 

சாதகமான நாள்கள்: நவம்பர் 19,20,24; டிசம்பர் 1,2,3,4,10,11,12,13
சந்திராஷ்டம நாள்கள்:டிசம்பர் 5,6 - கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை
அதிர்ஷ்ட எண்கள்: 3,7

வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.



Trending Articles

Sponsored