மழைவேண்டி மகாமாரியம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் அலங்காரம்! 

போதிய மழை பொழியவைக்கவும், அதனால் விவசாயம் செழிக்கவும் லாலாப்பேட்டை அருகில் இருக்கும் சிந்தலவாடியில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் அலங்காரம்செய்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Sponsored


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, சிந்தலவாடி. இந்தக் கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன்தான் சக்திவாய்ந்த தெய்வமாகவும், வேண்டிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியாகவும் சுற்றுவட்டார மக்களால் பூஜிக்கப்படுகிறாள். அந்த வகையில், மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் மகாமாரியம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் அலங்காரம்செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Sponsored


அதுபற்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், "லாலாப்பேட்டை பக்கமுள்ள சிந்தலவாடியில் இருக்கும் அருள்மிகு மகாமாரியம்மன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். வேண்டிய காரியங்களை உடனே நிறைவேற்றும் சக்தி படைத்தவள். இவளை வணங்க, தமிழகத்தில் மட்டுமல்ல, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் திரண்டுவந்து வணங்கிச் செல்கிறார்கள். அவர்களின் குறைகளை உடனே நிறைவேற்றிவைக்கிறாள். ஆனால், அவள் அமைந்திருக்கிற சிந்தலவாடியில், கடந்த இரண்டு வருடங்களாகக் கடும் வறட்சி. காவிரி கூப்பிடு தொலைவில் ஓடினாலும், கடந்த இரண்டு வருடங்களாக காவிரில் தண்ணீர் ஓடவில்லை. மழையும் பெய்யவில்லை. இதனால், இங்கு விவசாயம் நொடிஞ்சு போயிடுச்சு. இந்த வருஷம் மற்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்தாலும், கரூர் மாவட்டத்தில் மட்டும் சொல்லிக்கொள்ளும்படி மழை பெய்யவில்லை. லாலாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள சிந்தலவாடி, பிள்ளாபாளையம், கள்ளப்பள்ளி உள்ளிட்ட 15 கிராமங்களில் வாழையும் வெற்றிலையும் நாங்க பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வோம். கடந்த இரண்டு வருடங்களாக மழை சரியாகப் பெய்யாமலும், காவிரியில் சரியாக தண்ணீர் வராததாலும் நாங்க விவசாயம் செய்ய முடியாம அல்லாடி வந்தோம். வறுமை பீடிக்க, கஞ்சி குடிக்கவே சிரமப்பட்டோம். இந்த வருடம் காவிரியிலும் தண்ணீர் வருது. மழையும் ஓரளவு பெய்யுது. இந்த நிலை தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் போதிய அளவு வரவும், இங்குள்ள விவசாயிகளுக்குத் தேவையான அளவு மழை பெய்யவும், அதனால் வீழ்ந்து கிடக்கும் இந்தப் பகுதி விவசாயம் பழையபடி ஜாம்ஜாம் என்று நடக்கவும் வேண்டிக்கொண்டுதான் சிந்தலவாடி அருள்மிகு மகாமாரியம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் அலங்காரம்செய்து சிறப்பு பூஜை நடத்தினோம். எங்க வேண்டுதலை மகாமாரியம்மன் கட்டாயம் நிறைவேத்துவா" என்றார்கள் நெக்குருக.

Sponsored
Trending Articles

Sponsored