வானவில் கோயில், தெக்கிஷி அம்மன், 3 மாதத்துக்கு ஒரு பூசாரி! - அசரவைக்கும் தோடர்கள் வழிபாட்டு முறைSponsoredயற்கை வளங்கள் ஒரு சில பகுதிகளில் ஓரளவுக்கேனும் பாதுகாப்பாக இருக்கிறது என்று சொன்னால், அந்தப் பகுதிகளில் இருக்கும் பழங்குடியின மக்களையே சாரும். அந்த வகையில் ஊட்டி மலைப் பகுதிகளில், கால அளவு சொல்லமுடியாதபடி ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் தோடர் இன மக்களின் வாழ்க்கையும் சரி, அவர்களின் வழிபாட்டு முறைகளும் சரி மிகவும் சுவாரஸ்யம் உள்ளதாகவும், கட்டுப்பாடு கொண்டதாகவும் அமைந்திருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

மலை மற்றும் வனப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தோடர் இன மக்கள், நாகரிகம் மலிந்துவிட்ட இந்தக் காலத்திலும் தங்களின் வாழ்க்கை முறையில் இருந்து சற்றும் மாறாமல் இருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் உதகையில் இன்றும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் தோடர்களின் வாழ்க்கை முறைகளுடன் அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும் தெரிந்துகொள்வதற்காகச் சென்றிருந்தோம்.

Sponsored


உதகையில் மட்டும் தோடரின மக்களின் பூர்வீக இடங்கள் என்று சொல்லப்படும் மந்துகள் 64 இருக்கின்றன. இன்றைய கணக்கின்படி 1400 தோடரின மக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையே இவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.

Sponsored


பழங்குடியினத்தவராக இருந்தாலும், மலையும் வனமும் சூழ்ந்த பகுதிகளில் இவர்கள் வசித்தாலும், சைவ உணவையே உண்கிறார்கள். தோடா மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள், தங்களுடைய உடைகளையும் தாங்களே வடிவமைத்துக்கொள்கின்றனர். இவர்களுடைய உடைகள் பெரும்பாலும் வெள்ளை நிறத் துணியில் பல டிசைன்களோடு இருக்கும். எந்த விசேஷமாக இருந்தாலும், இதுபோன்ற ஆடைதான் அணிகிறார்கள்.

தோடர்களின் கோயில்...

தோடர்களின் கோயில்களைப் பற்றி வெளியுலகத்தினருக்கு அவ்வளவாகத் தெரியாது. தலைகுந்தாவில் உள்ள முத்தநாடு என்னும் தோடரின மந்துக்குச் சென்ற நாம், அங்கிருந்த ஊர்ப் பெரியவரான மோகன் என்பவரிடம் தோடரினத்தவர்களின் கோயில்களைப் பற்றிக் கேட்டோம்.

முதலில் அவர் ஒரு கோயிலை நமக்குக் காட்டினார். கோபுரத்தைப் போன்ற கோயில் முழுவதும் பிரம்பினால் சுற்றப்பட்டு, மிருதுவான ஒரு வகை புல்லினால் மூடப்படுகிறது. அதற்குள் இரண்டு அறைகள் இருக்கின்றன.  மிருகங்கள் எதுவும் உள்ளே நுழையாமல் இருக்க சிறிய கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் கருங்கல்லினால் வேலி போன்ற அமைப்பும் கோயிலுக்கு உண்டு. ஒவ்வொரு மந்திலும் கிராமக் கோயில்கள் இருப்பதாகத் தெரிவித்த மோகன், நம்மிடம் அந்தக் கோயிலின் அமைப்பை விவரித்தார்.

''இந்தக் கோயில் வானவில்லை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில். இங்கே சிலை வழிபாடு இல்லை. சூரியன், சந்திரன், தாமரை, எருமை மாடு போன்ற சின்னங்கள்தான் வரையப்பட்டிருக்கும். 

நாங்கள் வழிபடும் தெய்வத்துக்கு தெக்கிஷி அம்மன் என்று பெயர். ஆனால், உருவம் கிடையாது. நாங்கள் வளர்க்கும் எருமை மாடுகளின் பாலை மட்டும்தான் பூஜைக்குப் பயன்படுத்துவோம். மேலும், கோயிலின் எல்லைக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் தொலைவில் இருந்துதான் வழிபடவேண்டும்'' என்றார்.

''கோயில்களில் பூஜை செய்பவருக்கு ஏதேனும் பயிற்சிகள் உண்டா?'' என்று அவரிடம் கேட்டோம். 

''கோயில் பூசாரிகள்  கோயிலில் பூஜை செய்யத் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக காட்டுக்குள் சென்றுவிடவேண்டும். அப்படி அவர்கள் செல்வது தங்களை மனதாலும் உடலாலும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகத்தான். காட்டிலேயே தங்கியிருந்து, மூலிகைகள் கலந்த ஆறு, அருவி அல்லது குளத்தில் குளித்து, கறுப்பு உடையை அணிந்துகொள்ளவேண்டும். பட்டையின் சாறு பிழிந்து குடித்த பிறகே, அவர்களின் மனமும் உடலும் தூய்மை அடைவதாக நாங்கள் நம்புகிறோம். அந்த மூன்று மாதங்கள் அவர்கள் காட்டில்தான் இருக்கவேண்டும். கோயிலுக்குச் செல்லலாமே தவிர, குடும்பத்தில் யாருடனும் பேசக்கூடாது. ஆண்களில் கூட குறிப்பிட்ட சிலரிடம்தான் பேசமுடியும். இந்தக் காலத்தில் அவர்கள் பால் சாதம் மற்றும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடவேண்டும். காட்டுப் பகுதியில் பல விலங்குகள் இருந்தாலும், அவைகளால் இதுவரை யாருக்கும் எந்த ஆபத்தும் வந்ததில்லை. காட்டு விலங்குகளை நேரில் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். கோயிலில் ஒரு பூசாரி மூன்று மாதங்கள்தான் பூஜை செய்யமுடியும். அவர் கோயில் பூஜையைத் தொடங்கும்போதே, அடுத்த மூன்று மாதங்களில் பூஜை செய்யும் முறை உள்ளவர்கள் காட்டுக்குச் சென்றுவிடவேண்டும். இப்படித்தான் எங்கள் கோயில் வழிபாட்டு முறை அமைந்திருக்கிறது'' என்றார்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோயில் திருவிழா பிரமாண்டமாக நடைபெறுவதாகக் குறிப்பிட்ட மோகனிடம். வேறு ஏதேனும் விசேஷம் உண்டா என்று கேட்டோம்.

'உப்பூட்டும் திருவிழா' என்னும் விழா பற்றி அவர் நமக்குக் கூறினார்.

''எங்களுடன் வாழ்ந்து வரும் எருமைகளை நாங்கள் கால்நடைகளாக மட்டும் பார்க்கவில்லை. எங்களை வாழவைக்கும் தெய்வமாகவும் பார்க்கிறோம். எனவே, எருமைகளுக்கு உப்பூட்டும் திருவிழா நடத்துகிறோம். ஒரு பெரிய புல்வெளி மைதானத்தில் பள்ளம் தோண்டி, அதில் தண்ணீரை நிரப்பி, உப்பைக் கொட்டுவோம். ஒவ்வொருவரும் தங்களுடைய எருமைகளையும் கோயில் எருமைகளையும் அழைத்துவந்து உப்பு நீரைக் குடிக்க வைப்போம். பிறகு நாங்கள் அந்த நீரைப் புனித நீராக எண்ணிப் பருகி வழிபடுவோம்'' என்றார். தொடர்ந்து அங்குள்ள கோயிலைச் சுற்றிலும் பாரம்பர்ய உடை அணிந்துகொண்டு நடனமாடுவோம். இப்படிச் செய்வதால் கால்நடைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது எங்கள் நம்பிக்கை'' என்றார். நாம் சென்றபோது நமக்கும் அப்படி ஒரு விழாவைக் காணும் வாய்ப்பு கிட்டியது.

பழைமையான தங்கள் கலாசாரத்தில் இருந்து துளியும் தவறாமல், கட்டுப்பாட்டுடன் வாழும் அவர்களின் வாழ்க்கைதான் நாகரிக வாழ்க்கை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.Trending Articles

Sponsored