வெகு விமரிசையாகத் தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!Sponsoredநினைத்தாலே முக்தி தரும்  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா, இன்று வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன்  தொடங்கியது. 10 நாள்கள் கோலாகலமாக நடக்கும் இந்தத் திருவிழா, உலக அளவில் பிரசித்தி பெற்றது. 

 இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்,  உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து, உற்சவர்கள் கோயிலில் இருந்து கொடி மரம் அருகே எழுந்தருளி, காலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலாம் லக்கினத்தில், அண்ணாமலையார்  சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்கக் கொடிமரத்தின் முன்பு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத, தங்கக் கொடிமரத்தில் வெகு விமரிசையாகக் கொடியேற்றப்பட்டது. 

Sponsored


இந்த விழாவில், ஏராளமான அண்ணாமலையார் பக்தர்கள் கலந்துகொண்டு, 'அரோகரா, அரோகரா' என்று முழக்கத்துடன் அண்ணாமலையாரை வணங்கி சுவாமி தரிசனம்செய்தனர். அதற்கு முன்னதாக, 20-ம் தேதி துர்க்கையம்மன் உற்சவமும், 21-ம் தேதி பிடாரியம்மன் உற்சவமும், 22-ம் தேதி விக்னேஸ்வர பூஜையும், விநாயகர் உற்சவமும் நடந்தது. இதனையடுத்து, விழாவின் முக்கிய நாளான வரும் 29-ம் தேதி காலை 6 மணிக்கு மகா தேரோட்டமும், அதையடுத்து, டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 266 அடி அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்த விழாவில், 10 லட்சத்துக்கும் அதிகமானோர்  கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored
Trending Articles

Sponsored