ஸ்ரீஐயப்பனை தரிசிக்க சபரிமலை பெரிய பாதை, சிறிய பாதை... எது சிறந்தது? #Sabarimala



கானக வாசன், காந்தமலை ஜோதி, பாவ விநாசன், பாயஸன்னப் பிரியன், ஸ்ரீசபரிமலை சாஸ்தா ஐயப்பனை நோக்கிச் செல்லும் புனிதப் பயணம் முடிவில்லாத ஒரு பேரின்பத்தைத் தரும். கடுமையான விரதமிருந்து காடு, மலை தாண்டிச் செல்லும் சபரிமலை யாத்திரை என்பது மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குப் பலத்தையும் அளிக்கக்கூடிய அற்புத அனுபவம். இங்குள்ள பல அரிய வகை மூலிகைகளும், அதன் சத்துகள் நிரம்பிய ஓடைகளும் பலருக்குப் பல நோய்களை தீர்த்திருக்கின்றன. இனிய காற்று, இதமான சுவாசம் யாவும் அளிக்கும் சபரிமலை யாத்திரை ஒரு மருத்துவச் சுற்றுலாவாகவும் இருக்கிறது.

Sponsored


சப்த சிரஞ்சீவிகளில் ஒருவரான பரசுராமரால் உருவாக்கப்பட்டதே சபரிமலை ஐயப்பன் கோயில். கேரள மாநிலத்தின் மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்திருக்கிறது. அடர்ந்த மரங்களும், அற்புத மூலிகைகளும், துள்ளிச்செல்லும் ஓடைகளும், நழுவிச்செல்லும் நதிகளும், மிரளச்செய்யும் வன விலங்குகளும், தலைக்கு மேலே இரையெடுக்க விரையும் பறவைகளின் கானங்களும் என இயற்கையின் எழிலார்ந்த சூழலில்தான் சபரிமலைப் பாதைகள் அமைந்திருக்கின்றன. ஐயப்பனைத் தரிசிக்க உலகெங்கும் இருந்து பக்தர்கள் பல வழிகளில் வந்தாலும், அவர்கள் சபரிமலைக்குச் செல்வது பெரிய பாதை, சிறிய பாதை என்ற இருவழிகளில்தான். உடலில் பலமும், போதுமான நேரமும் இருப்பவர்கள் பெரிய பாதையைத் தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் சிறிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரை உள்ள 48 மைல் தூரம், `பெருவழிப்பாதை’ எனப்படுகிறது. பம்பையிலிருந்து ஆரம்பித்து சபரிமலை வரையில் உள்ள 7 கி.மீ தூரம் சிறிய பாதை எனப்படுகிறது.

Sponsored


Sponsored


பெருவழிப்பாதை - 

அடர்ந்த வனப்பகுதியாக அழகுற அமைந்த பாதை. `இதுவே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி’ என்கிறார்கள். `பெருவழிப்பாதையில் சென்றால்தான் ஐயப்ப யாத்திரையே பூர்த்தியாகும்’ என்று மூத்த ஐயப்ப பக்தர்களால் கூறப்படுகிறது. ஆண்டாண்டுகாலமாக இந்தப் பாதையே இருப்பதால், சிறிய பாதையில் பயணிப்பது ஐயப்பனை தரிசிக்க வேண்டுமானால் உதவும். ஆனால், நிஜமான ஆத்ம திருப்தி கிடைக்க பெரிய பாதையே சிறந்தது என்கிறார்கள். இதனால் ஆபத்துகள் பல நிறைந்திருந்தபோதும் பெரும்பாலான பக்தர்களால் இந்தப் பாதை விரும்பப்படுகிறது.

எருமேலி அடைந்த பக்தர்கள் அங்கு தர்மசாஸ்தா ஆலயத்துக்கு முன்பு பேட்டை துள்ளி வணங்குவார்கள். அப்போது வாவர் ஸ்வாமியை வணங்கி, மலைமீது ஏறிச்செல்ல அனுமதி பெறுவார்கள். அங்கிருந்து தொடங்கும் சபரிமலை யாத்திரை பேரூர் தோடு, காளைகட்டி, அழுதாநதி, அழுதாமலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறைக் கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் போன்றவற்றைக் கடந்து பம்பையின் அடிவாரத்தைச் சென்றடையும். காளைகட்டியில் வெடி வழிபாடுசெய்து பக்தர்கள் வணங்குவார்கள். அழுதாநதி நீராடி கல்லெடுப்பார்கள். பின்னர் அழவைக்கும் அழுதா மலையில் செங்குத்தாக ஏறுவார்கள். அழுதாநதியில் எடுத்த கற்களை கல்லிடும் குன்றில் வீசி வணங்குவார்கள். இஞ்சிப்பாறைக் கோட்டை, அழுதா மலை இறக்கம் கடந்து, முக்குழி தாவளத்தில் உள்ள மாரியம்மனை வழிபடுவார்கள். கரிவலந்தோடு தாண்டி கதறவைக்கும் கரிமலை ஏற்றம்... இறக்கம் கடந்தால் வருவது பெரியானை வட்டம், சிறியானை வட்டம். இவற்றைக் கடந்தால் பம்பை நதி குறுக்கிடும். இங்கு நீராடி, பூஜைகள் செய்த பின்னரே யாத்திரையைத் தொடங்குவார்கள். இங்கிருந்து தொடங்குவதுதான் சிறிய பாதைப் பயணம்.

சிறிய பாதை -

பம்பையில் நீராடி, பள்ளிக்கட்டுகள் ஏந்தித் தொடங்கும் இந்தச் சிறிய வழிப்பாதையில் ஆபத்துகள் அதிகம்தான். பெருவழிப்பாதையில் செல்வதுதான் சிறந்தது என்றாலும், பல மைல்களைக் கடந்து செல்லும் அளவுக்கு தற்போது பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதனால், இப்போது பம்பையில் இருந்து தொடங்கும் சிறிய வழிப்பாதையும் பலரால் விரும்பப்படுகிறது. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கும் இந்தப் பாதையே எளிதாகவும் இருக்கிறது. கன்னிமூல கணபதியை வணங்கிவிட்டுத் தொடரும் இந்தப் பயணத்தில் முதலில் வருவது நீலிமலை ஏற்றம். கருங்கல் படிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பயணம் மிகுந்த சிரமம் கொடுக்கக்கூடியதே. இதனால் பக்தர்கள் இங்கு வந்ததும் தங்களது களைப்பைப் போக்கிக்கொள்ள, சரண கோஷங்களை அதிகம் எழுப்புவார்கள். நீலிமலையின் நடுவே வலதுபுறமாக சுப்பிரமணியர் பாதை ஒன்று வரும். இந்தப் பாதையில்தான் ஐயப்பன் கோயிலுக்குத் தேவையான பூஜைப் பொருள்கள் கழுதைகள் மூலமாகக் கொண்டு செல்லப்படும். இப்போது கழுதைகள் குறைந்து டிராக்டர் வழியாகச் செல்கின்றன. நீலிமலைப் பாதையில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழிப் பகுதிகளைக் கடக்க வேண்டும்.

அப்பாச்சிமேடு வளைவில் மாவால் செய்த உருண்டைகள் விற்கப்படும். அதை வாங்கி, மலையின் கீழே வீசுவார்கள். இது அங்குள்ள வனதேவதைகளை திருப்திசெய்ய என்று கூறப்படுகிறது. நீலிமலை கடந்தால் வருவது சபரி பீடம். இங்குதான் ஐயப்பனை ஆராதித்த அன்னை சபரி வசித்துவந்தார். அவரது நினைவாகவே இங்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. சபரி பீடம் கடந்ததும், இரண்டு பாதைகள் பிரியும். ஒன்று, யானைப்பாதை என்றும் மற்றொன்று, சரங்குத்திப் பாதை என்றும் சொல்லப்படுகிறது. சரங்குத்திப் பாதையில் நடந்து சரங்குத்தி என்னும் புனித இடத்தை அடையலாம். எரிமேலியில் பேட்டைத் துள்ளிய கன்னிசாமிகள் தாங்கள் கொண்டுவரும் மரத்தாலான வில், வேல், சரம் போன்றவற்றை இங்கு குத்திவைத்து வணங்குகிறார்கள். சரங்குத்தி கடந்தால் வருவது சபரிமலை ஸ்ரீசாஸ்தாவின் பதினெட்டுப்படிகள். படிகளைக் கடந்து பரவசநிலையில் ஐயன் ஸ்ரீஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள், தாங்கள் கடந்துவந்த வலிகள், துயரங்களை எல்லாம் மறந்து எழுப்பும் சரணகோஷத்தில் மலையே அதிரும். மனமோ நிறையும். ஒருமுறை வந்தவர்கள் எல்லோரும் திரும்ப, திரும்ப இந்த சந்நிதானத்துக்கு வருவது எல்லாம் இந்த அற்புதப் பயண அனுபவத்தால்தான் என்று சொல்லலாம்.



Trending Articles

Sponsored