இனி பக்தர்கள் அறைகளில் அடைந்துகிடக்க அவசியமில்லை - திருப்பதி பெருமாளை தரிசிக்க டோக்கன் சிஸ்டம்! #Tirupati



கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்பெறுபவரும், ஏழு மலைகள் சூழ்ந்த ரம்யமான தலத்தில் கோயில் கொண்டிருப்பவரும், தம்மை தரிசிப்பவர்களின் அனைத்து நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுபவருமான அருளாளப் பெருமாள் திருப்பதி திருமலையில் அருளும் வேங்கடேசபெருமாள். 

'நெடியானே, நின் கோயில் வாசல் படியாய் கிடப்பேனோ?' என்று குலசேகர ஆழ்வார் மனம் கனியக் கனியப் பாடிய வேங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேங்கடேச பெருமாளை தரிசிப்பதில் கட்டண தரிசனம், சர்வ தரிசனம், சேவா தரிசனம் என்று பல தரிசன முறைகள் இருக்கின்றன. தினசரி சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 60 முதல் 80 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கும் தேவஸ்தானம், புரட்டாசி மாதத்தில் லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் சர்வ தரிசனம் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது.

Sponsored


இந்த தரிசனத்தின் நேரம் வாரநாள்களைப் பொறுத்து அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் இதனால் சர்வதரிசனத்துக்காக குவிந்துள்ள பக்தர்கள் எல்லோரும் வைகுண்ட வளாகத்தில் உள்ள தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்போது உணவு, பால், டீ, காபி போன்றவை 3 மணிநேரத்துக்கு ஒருமுறை வழங்கப்படும். சுகாதாரமான குடிநீர், மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பொழுதுபோக்குக்கு திருப்பதி தேவஸ்தான சேனல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


திருப்பதி ஏழுமலையானின் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகி வருவதால், நிலைமையைச் சமாளிக்க, சில அறிவிப்புகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் தரிசனம் தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் வரும் செவ்வாய்க்கிழமையில் (வரும் டிசம்பர் 26-ம் தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் ஆலய தூய்மைப்பணிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் உலா செல்வார். திருக்கோயிலின் புனிதத்துக்காக கோயிலைத் தூய்மை செய்ய உள்ளதால் டிசம்பர் 26-ம் நாள் காலை 6 மணி முதல் 11 மணி வரை வேங்கடேச பெருமாளை சேவிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அப்போது எந்த வழிபாடும் செய்யப்படுவது இல்லை.

தூய்மைப்பணிகள் முடிக்கப்பட்டு வேங்கடாசலபதிக்குச் சிறப்பு பூஜைகள் முடித்தபின்னரே காலை 11.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பெருமாளுக்கு வழக்கமாக நடக்கும் அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையும் அன்று நடைபெறாது என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டு தின பெருமாள் தரிசனத்துக்கான முன்பதிவுகள் இணையதளத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. முன்பதிவு செய்தவர்கள் விரைவாக தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேங்கடேச பெருமாளை கட்டணமில்லாமல் தரிசிக்கும் சர்வ தரிசனம் முறை பரீட்சார்த்தமாக மாற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசேஷ நாள்கள் மட்டுமின்றி எல்லா நாள்களிலுமே இந்த சர்வ தரிசனம் பார்க்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் பல மணிநேரங்கள் பக்தர்கள் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு பெரும் சிரமங்கள் உண்டாகின்றன. பக்தர்களின் சிரமங்களைக் களைய சர்வ தரிசனம் முறையை திருப்பதி தேவஸ்தானம் பரீட்சார்த்தமாக மாற்றியமைக்க உள்ளது.

வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 'நேரம் ஒதுக்குவது' (டைம் ஸ்லாட்) என்ற சோதனை முறை நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது ஒவ்வொரு பக்தருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற முறை ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக திருப்பதி கோயிலைச்சுற்றி பதினான்கு இடங்களில் 117 டோக்கன்கள் அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் இலவச தரிசனம் பெற விரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் வரிசைப்படி நேரம் ஒதுக்கப்படும். ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்கள் திவ்ய தரிசன வரிசையில் சென்று பெருமாளை தரிசிக்கலாம்.

ஆதார் அட்டை கொண்டு வராதவர்கள் வழக்கப்படி சர்வ தரிசன கூட்டத்தின் வழியாகச் சென்று சேவிக்கலாம். வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் ஒருவாரம் இந்த டோக்கன் முறை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முறை விரைவான தரிசனத்தைக் கொண்டு வருகிறது என்றால் அது நிரந்தரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து இந்த முறையில் உள்ள குறைகளும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 17-ம் தேதிக்குப் பிறகு செல்லும் பக்தர்கள் கட்டாயம் ஆதார் அட்டையைக் கொண்டு செல்லுங்கள். புதிய டோக்கன் முறையில் சென்று ஏழுமலையானை விரைவாக தரிசித்து வாருங்கள்.



Trending Articles

Sponsored