சனி பகவானின் அம்சத்தைத் தன்னுள் தாங்கி அருள்பாலிக்கும் பெருங்குளம் ஸ்ரீவேங்கடவாண பெருமாள் #SaniPeyarchi2017Sponsored'நவகிரகங்களுக்கு சந்நிதி இல்லாத கோயில்கள் எப்படி நவகிரக பரிகாரத் தலமாகத் திகழுமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்' என்றே பதில் சொல்வதுபோல் அமைந்திருப்பவைதான், தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிதீரத்தில் அமைந்திருப்பதும் நவதிருப்பதிகள் என்ற சிறப்பினைப் பெற்றிருப்பதுமான ஒன்பது வைஷ்ணவத் தலங்கள். இந்தத் தலங்களில் பெருமாளே நவகிரகங்‌களாக அருள்புரிவதால், நவகிரகங்களுக்கு தனிச் சந்நிதி இல்லை. கிரகதோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்குவது வைணவர்களின் நம்பிக்கை. இந்த ஒன்பது நவகிரக ஆலயங்களில் சனி கிரக பரிகாரத் தலமாக இருப்பது பெருங்குளம் ஸ்ரீவேங்கடவாண பெருமாள் ஆலயம் என்னும் மாயக்கூத்தர் கோயில்.

பெருங்குளம் என மக்கள் வழக்கில் அழைக்கப்படும் இந்த ஊர் இரட்டைத் திருப்பதியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. பிருகஸ்பதிக்கு காட்சி தந்த பெருமாள் வீற்றிருக்கும் இந்தத் தலத்தின் பெயர் திருக்குளந்தை என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பெருமாளின் திருப்பெயர் ஸ்ரீவேங்கடவாண பெருமாள். ஆலய உற்சவரோ அழகிய ஸ்ரீமாயக்கூத்தர். தேவி ஸ்ரீகமலாவதி தாயார். அவர் ஸ்ரீகுழந்தைவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.

Sponsored


இந்த ஊரில், வேதவிற்பன்னராக சிறந்து விளங்கிய வேதசாரன் என்பவர், அவரது மனைவி குமுதவதியுடன் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் பெருங்குளத்து பெருமானை கார்வண்ண வேங்கட வணனை வணங்குவதையே முதன்மையான கடமையாகக் கருதி வாழ்ந்து வந்தார். இதனால் அந்த தம்பதிகளுக்கு அன்னை பத்மாவதியே மகளாக அவதரித்தார்.

Sponsored


கமலாவதி என்ற பெயரோடு அன்னை வளர்ந்து வந்தார். பெருமாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு, பித்தாகி, அந்த திருமாலையே திருமணம் செய்துகொள்ள விரும்பி தவம் புரிந்தாள். அவளின் தவத்துக்கு இரங்கிய மாயக்கூத்தர் தன் கெளஸ்துப மாலையுடன் கமலாவதியை ஆலிங்கனம் செய்துகொண்டு, தை மாதம் சுக்ல பட்ச துவாதசி பூச நட்சத்திர நாளில் கல்யாணம் செய்து கொண்டார்.

இமயமலையில் தீய குணங்களைக் கொண்ட முனிவன் ஒருவன், 1,000 அழகான பெண்களை திருமணம் செய்துகொண்டால் சாகாவரம் பெறலாம் என்ற நோக்கில் திரிந்துகொண்டு இருந்தான். இப்படி தேடித் தேடி ஒரே சமயத்தில் 998 பெண்களைக் கவர்ந்து சென்றான். அடுத்ததாக வேதசாரனின் மனைவி குமுதவதியை கவர்ந்துகொண்டு சென்றான். இதனால், மனம் நொந்த வேதசாரன் தன் மனைவியை மீட்டுத் தரும்படியாக திருமாலை மனமுருக வேண்டினான். தன் பக்தனின் இன்னலைத் தீர்க்க திருவுள்ளம் கொண்ட பெருமாள், இமயமலைக்குச் சென்றார். தன் துணை இன்றி திருமால் நகரவே முடியாது என்று கருடாழ்வார் ஆணவத்துடன் இருந்தார். அவரின் கர்வத்தை அடக்க நினைத்த திருமால், அவரை தமது கால்களின் இடையில் வைத்துக்கொண்டு, பறந்து சென்றார்.

தமது பக்தனின் மனைவி குமுதவதியை மீட்டுக்கொண்டு திரும்பினார். தோல்வியடைந்த அந்த முனிவன் சீற்றமாகி, இந்தத் தலத்துக்கு வந்து போர் புரிந்தான். பெருமாளும் அவனை அடக்கி அவனுடைய தலையின் மீது கால் பதித்து, நடனம் ஆடினார். பெருமாளின் திருவடி பட்டதால் அந்த முனிவன் விமோசனம் பெற்று கந்தர்வனாக மாறினான். அற்புத நாட்டியம் ஆடிய பெருமாள், தேவர்களால் மாயக்கூத்த பெருமாள் என்னும் திருப்பெயர் பெற்றார்.

தம்மை வேண்டும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் இந்த தீனதயாளன், இங்கு சனிபகவானின் அம்சத்தை தன்னுள் தாங்கி அருள்பாலிக்கிறார். இதனால் இங்குள்ள பெருங்குள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால், சனி தோஷங்கள் முற்றிலும் விலகும்; திருமணத்தடை நீங்கும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; பாவங்கள் யாவும் நீங்கி, பிறப்பிலாத பேரின்பத்தோடு பெருமாளின் திருவடியை அடையலாம் என்கிறது திருத்தல புராணம். எனவே வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நீங்களும் பெருங்குளப் பெருமாளை தரிசித்து சனிதோஷ நிவர்த்தியைப்பெறலாம்.Trending Articles

Sponsored