மலைவாழ் பெண், புனித பம்பா நதியாக மாறிய வரலாறு! #SabarimalaSponsoredகலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கற்பக விருட்சமாக விளங்கும் ஐயப்பனின் திருத்தலம் சபரிமலை. இந்தப் புண்ணியத் தலத்துக்கு பெருமை சேர்ப்பது பம்பா நதி. கங்கைக்கு நிகரான பம்பா நதி பக்தர்களின் பாவத்தை நீக்கி வரும் ஒரு பாவநாசினி. தட்சிணகங்கை என்று போற்றப்படும் பம்பா நதிக்கரையில்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி பூவுலகில் குழந்தையாகத் தோன்றினார்.

கேரளாவின் மூன்றாவது பெரிய நதி பம்பா நதி. அரிய வகை மூலிகைகள், மற்றும் வன விலங்குகளைக் கொண்ட, அடர்ந்த வனப் பகுதியின் மத்தியில் தவழ்ந்து வருகிறது பம்பா நதி. மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகும் இந்த நதி, ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. சுமார் 176 கி.மீ பாய்ந்து கேரளத்தை செழிப்பாக்கும் இந்த நதி புராண வரலாற்றில் மிகப்பெரிய இடத்தினைப் பெற்றுள்ளது. ஆம், முனிவர்கள் தவமிருந்த யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ வனமாகவும் பம்பை நதிக்கரை இருந்து வந்துள்ளது. ஐயப்பன் குழந்தையாகத் தவழ்ந்த இந்தப் புனித பம்பை உருவான புராணக்கதை ஸ்ரீராமர் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.

Sponsored


சீதாதேவியை ராவணன் கவர்ந்து சென்ற பிறகு, ராமபிரான் லட்சுமணனுடன் தென்னகம் நோக்கி வருகிறார். இருவரும் மேற்குத் தொடர்ச்சி மலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது தபோவனர்கள் கூடி வாழ்ந்த இந்தப் பகுதிக்கு வந்தார்கள். அங்கு மதங்க முனிவர் ஆசிரமம் இருப்பதைக் கண்டு அவரைக் காண சென்றார்கள். ஆனால், முனிவரோ சிவத்தலங்களை தரிசிக்க தீர்த்த யாத்திரைக்குச் சென்றுள்ளதாக அவரது பணிப்பெண் நீலி கூறினாள். வந்திருப்பவர்கள் ராம, லட்சுமணர்கள் என்று அறிந்ததும் அந்தப் பெண் மிகவும் மகிழ்ந்து அவர்கள் இருவரையும் வணங்கி, வரவேற்று உபசரித்தாள். அவளது வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த ராமலட்சுமணர்கள் அவளை வாழ்த்தினார்கள்.

Sponsored


அவர்களிடம் நீலி தான் மதங்க முனிவருக்குப் பணிவிடைகள் செய்து வருவதாகவும், தான் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்ற காரணத்துக்காகவே, ராமலட்சுமணர்களுக்கு உணவிடத் தயங்குவதாகவும் சொன்னாள். நீலியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட ராமபிரான், 'அன்பே உயர்வானது, மற்றபடி பிறப்பால் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை, நீ அளிக்கும் உணவினை நான் தாராளமாக ஏற்பேன், கொடு' என்றார். இதனால் மகிழ்ந்து போன நீலி, ராம லட்சுமணருக்கு உணவளித்து, அவர்களை உபசரித்து மகிழ்ந்தாள்.

ராமலட்சுமணர்கள் அங்கிருந்து செல்வதற்கு முன்பு, தனக்கு ஒரு நல்ல வாழ்வினை அளிக்க வேண்டும் என்றும், பெருமைக்குரிய படைப்பாகத் தான் மாறவேண்டும் என்றும் விரும்பினாள்.

ராம லட்சுமணர்கள் புறப்பட்டபோது, தான் வாழ்ந்தது போதும் என்றும், இனி பிறப்பெடுக்காத நிலையைத் தான் பெற வேண்டும் என்றும் கண்ணீர்மல்க வேண்டினாள். கள்ளம் கபடமற்ற அவளின் அன்பினை உணர்ந்து ராமபிரானும் அவளது மனக்குறையை அகற்றி, அனைவரும் அவளைப் போற்றும் வகையில் அவளைப் பெருமைப்படுத்த விரும்பினார். தனக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்று வேண்டிய நீலியிடம் 'அன்பால் உயர்ந்த உன்னை இந்த உலகமே புகழும் நிலை வரும். இந்தப் பகுதிக்கு வரும் எவரும் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன்' என்று சொல்லி, நீலியைப் பொங்கிப்பெருகிய நீரூற்றாக மாற்றினார். வேகமாக பொங்கிய நீலி நதியாக மாறினாள். தன்னை கடைத்தேற்றிய பெருமானின் திருவடிகளைத் தழுவி வணங்கினாள். அருவியாக மாறி தனது பயணத்தை அந்த மலை உச்சியிலிருந்து தொடங்கினாள். தான் உருவாக்கிய அந்தப் புனித நதியைத் தானே புனிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீராமர் அந்த நதியில் நீராடி அவரது தந்தையான தசரதச் சக்கரவர்த்திக்கு பிதுர்கடன்களையும் அங்கே நிறைவேற்றினார்.

ராமர் கொண்டாடிய நதி பின்னர் பல முனிவர்களாலும், தற்போது ஐயப்பன் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பம்பைக்கு ஒன்றரை கி.மீ. தூரத்தில் கல்லாறு, கட்டாறு என்னும் இரண்டு ஆறுகள் பம்பையில் இணைகின்றன. இதனால் இது ஒரு திரிவேணி சங்கமம் எனப் போற்றப்படுகிறது. பம்பை பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் பம்பை ஆற்றின் கரையோரம் ஒரே கல்லில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அதை பக்தர்கள், 'ஸ்ரீராம பாதம்' என்று சொல்லி வழிபடுகிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு முன்னர், பம்பை நதிக்கரையில் பம்பா உற்சவம் நடைபெறும். அப்போது இலைகளால் தோணிகள் போலச் செய்து நூற்றுக்கணக்கில் விடுவார்கள். பம்பையில் வழிபட்டு சபரிமலை ஏறிச்செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

உண்மையான பக்தியுடன் இறைவனைப் பணிந்தால், ஒரு சாதாரண பெண்கூட உயர்வும் புனிதமும் அடைய முடியும் என்பதை சொல்லாமல் சொல்வதுபோல், தவழ்ந்து செல்கிறது பம்பை நதி. மலைவாழ் பெண்ணாக இருந்து, தன் மாசற்ற பக்தியின் காரணமாக புனித நதியாகத் தவழ்ந்தோடி, நமக்கெல்லாம் புண்ணியம் அருளும் பம்பா நதியின் தூய்மை கெடாமல் பாதுகாப்பது நம் கடமை.Trending Articles

Sponsored