காய சித்தி அடைந்த சுப்பையா சுவாமிகளின் குருபூஜை விழா!Sponsoredதற்போதைய தூத்துக்குடி மாவட்டம், கடையனோடை கிராமத்தில் வசித்து வந்த வள்ளிமுத்து-நாராயண வடிவு தம்பதியின் மகனாகப் பிறந்தவர் சுப்பையா.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. (வேதியியல்) படிக்கத் தொடங்கினார். வெளிநாட்டில் மேல்படிப்பை தொடர வேண்டும் என்ற கனவை, தந்தைக்காக விட்டுக்கொடுத்தார். பிறகு அருகிலுள்ள ஆன்மிகத் தலங்களுக்கும், சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று தரிசிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கல்கத்தாவில் தங்கி சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டார். தமிழ் மந்திரங்களையும், சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் சேர்த்துப் பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். கல்கத்தா சூழல் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சொந்த ஊருக்கே புறப்பட்டார். ஊருக்கு வந்தவர், சொத்துகளை உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். தன்னுடைய பங்காகக் கிடைத்த சொத்துகளை விற்றுவிட்டு, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் செய்தார். திருப்பதிக்குச் சென்று சிலகாலம் தங்கியவர், சொந்த ஊருக்குத் திரும்பினார். வழியில் வடலூர் வள்ளலார் மடத்துக்குச் சென்று அங்கேயே மூன்று வருடங்கள் தங்கினார். வள்ளலாரின் கருத்துகள் அவரை ஈர்த்தன.

Sponsored


வள்ளலாரின் புகழைப் பாடியபடி, நடந்தே திருக்கழுக்குன்றம் வந்தவர், அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையில் உள்ள குகையின் உள்ளே அமர்ந்தார். ஒன்பது வருடங்களுக்கு அந்த இடத்தைவிட்டு அவர் எழவே இல்லை. யாருடனும் பேச மாட்டார். அவர் முன்பு வைக்கப்பட்டிருக்கும் விபூதியை, தன்னைக் காணவரும் பக்தர்களுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார்.

Sponsored


‘எனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை போட்டு மூடிவையுங்கள். 40 நாள்கள் கழித்து, அந்த உடலைத் திறந்து பாருங்கள். எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதங்கள் கழித்து ஒரு முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால், மேலே ஒரு கல்லை எடுத்து மூடிவிடுங்கள்’ என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி வைத்தார்.

1960, ஜனவரி முதல் தேதி இரவு சித்தியடைந்தார். அவர் சொன்னதுபோலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள்கள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் ஆகியோர் முன்னிலையில் அவரை மூடிய இடம் திறந்து பார்க்கப்பட்டது. அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனையே `காயசித்தி’ என்கிறார்கள். இந்த நிகழ்வினை, 'உச்சி பார்த்தல்' என்பார்கள். ‘‘The Body Was Impact’’ என சப்கலெக்டர் தனது கெஸட்டிலேயே பதிவு செய்திருக்கிறார்.

ஜீவன் முக்தி, காய சித்தி இரண்டையும் பின்பற்றிக் காய சித்தி அடைந்திருக்கும் மகான்கள் பலர் தோன்றி இருக்கின்றனர். அப்படித் தீயும் மண்ணும் சிதைக்காத உடலைப் பெற்றவர்களில் திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள் பிரசித்திபெற்றவர். காயசித்தி அடைந்த அவருடைய திருமேனிக்கு அவருடைய பக்தர்கள் ஆலயம் எழுப்பி வழிபட்டுவருகிறார்கள். திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அந்த ஆலயத்தில், டிசம்பர் 24-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 58-வது குருபூஜை நடைபெற உள்ளது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சொற்பொழிவு, ஜோதி வழிபாடு போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள சுப்பையா சுவாமிகளின் பக்தர்களுடன் சுற்று வட்டார மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.Trending Articles

Sponsored