பாலகனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து, வழிகாட்டிய விண்மீன்! #Christmas



Sponsored



“இதோ... கன்னி கரு தாங்கி ஒரு மகனைப் பெறுவார்; அவர் இம்மானுவேல் என்னும் பெயர் பெறுவார்; மேன்மைமிக்கவராய் இருப்பார்” என்பது இறைவாக்கினர் எசாயாவின் தீர்க்கதரிசனம். அது நிறைவேறும்படி 2017 ஆண்டுகளுக்கு முன்பு பெத்லஹேமில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த சூசை என்பவருக்கு மண ஒப்பந்தமான கன்னிமரியாளுக்கு மகனாகப் பிறந்தார் இயேசு கிறிஸ்து. அப்போது வானத்தில் புதியதொரு விண்மீன் எழுந்தது. அந்த விண்மீனைப் பின்தொடர்ந்து ஞானிகளும் அவரை ஆராதிக்க வந்தனர். பாவத்தால் பழுதடைந்த மனுக்குலத்தை மீட்க ஏழையாக அவதரித்த இயேசுவின் பிறப்புச் செய்தி முதன்முதலில் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அப்போது வானதூதர்கள் இடையர்கள் முன் தோன்றி, “அஞ்சாதீர்கள்! இதோ மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் ஊரில் உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா! குழந்தையைத் துணிகளில் சுற்றி முன்னட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்” என்று சொன்னார்கள்.

Sponsored


அந்தச் சூழலில், ‘உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்' என்று பாட வானத்தில் விண்மீன்கள் ஒளிர்ந்தன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் முதல் அடையாளமாக இருந்தது வால் நட்சத்திரம். அது பெத்லஹேமின் விண்மீன் என்றும் ஆண்டவரின் விண்மீன் என்றும் சொல்லப்பட்டது. இயேசு பிறப்பதற்கு முன்பே முன் அடையாளமாக இந்த நட்சத்திரம் வானத்தில் தோன்றியதாம்.

Sponsored


கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும்விதமாகவும் கிறிஸ்து இயேசுவை வரவேற்கும்விதமாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அழைப்பு மணியாகவும் மகிழ்ச்சியின் அடையாளமாகவும் விளங்கும் இந்த வால்நட்சத்திரத்தை `மீயொளிர் விண்மீன்' என்றும் `வால்வெளி வியாழன்' என்றும் சொல்வார்கள்.

கிறிஸ்து பிறந்த செய்தி முதலில் யூதர்களுக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் கிழக்கு தேச நாடுகளைச் சேர்ந்த அறிவில் சிறந்த ஞானிகளில் ஒரு சிலருக்கு இயேசுவின் பிறப்பு பற்றி தெரிந்திருக்கிறது. ஜெருசலேம் வந்த அவர்கள் விண்மீன் வழிகாட்டிய இடத்துக்குச் செல்லாமல் நேராக அரண்மனைக்குச் சென்று `யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டிருக்கிறார்கள். இது யூதர்களின் ராஜாவான ஏரோதின் அரண்மனையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து விண்மீன் வழிகாட்டிய பெத்லஹேம் நோக்கிச் சென்றார்கள், அந்த ஞானிகள். நட்சத்திரத்தைக் கண்டு அகமகிழ்ந்த அவர்கள் தேவன் மனிதனாக அவதரித்த மாட்டுக் கொட்டகையைச் சென்றடைந்தனர். அங்கே அவர்கள் இயேசுவைக் கண்டதும் மண்டியிட்டு விழுந்து அவரை வணங்கினார்கள். அத்துடன் தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளை இயேசுவின் முன்னால் வைத்துவிட்டு தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.

இதேபோல் இயேசுவின் பிறப்பு தேவதூதர்களுக்குத் தெரியவந்ததன்பேரில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தேவன் மனிதனாக அவதரித்திருக்கிறார் என்ற செய்தியை அறிவிக்க, முதலில் வசதி படைத்தவர்களைத் தேடிச் செல்லாமல் இரவில் மந்தைகளைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சென்று சொன்னார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டதும் மேய்ப்பர்கள் ஆர்வத்துடன் இயேசுவைக் காணச் சென்றார்கள். இங்கே சொல்லப்பட்டவை அனைத்தும் முற்றிலும் உண்மை என்பதை இயேசுவைக் கண்ட பலருக்கும் ஆச்சர்யம் எழுந்தது.
 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சிந்திக்கக்கூடிய ஒன்றே. பாவிகளை மீட்கவே பாலன் இயேசு ஏழையாக பாரில் அவதரித்தார் என்ற உண்மையை உலகம் உணர வேண்டும்.



Trending Articles

Sponsored