``அன்னக்காவடி தர்மம் தாயே!’’ - கோரக்கர் சமாதியில் மருந்தாகும் அன்னம்! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 6Sponsoredதிறவுகோல் கொண்டானும் உமையும் போற்றித்

தீர்க்கவரம் தந்திட்டார் கண்டேன்; என்போல்வார்

மறம்பூண்டு மறித்தென்னை வாதமிட்டார்

Sponsored


மதியோடு கலந்து மதியாகி நின்றேன்

Sponsored


புறம்பாகி ஏகிவிட்டார் சித்தனார்கள்

புவிஇறங்கிப் பொய்கை நல்லூர் அடங்கி நின்றேன்.

வரம்பெறவே இவ்வொன்பதும் தனித்தொகுப்பு

வழங்கு முன்னூல்களில் வழுத்தவில்லை முற்றே.

-கோரக்கர் (தனிநூல் தொகுப்பு - 9)

பாடலின் பொருள் :

சிவபெருமானும் பார்வதி தேவியும் என் தவ வலிமையைக் கண்டு பாராட்டி மரணமில்லா சஞ்சீவித்தன்மையை எனக்கருளினர். சமாதியிலிருந்து வெளியே வந்தபோது சில சித்தர்கள் என்னை வழிமறித்தனர். கிடைத்தற்கரிய சஞ்சீவி ஆற்றலால் நிலவில் ஒளியாக ஒடுங்கி நின்றேன். என் தவப்பேராற்றல் கண்டு அவர்கள் ஒதுங்கினர்.

பிராகாரத்தை விட்டு வெளியே வந்தால், ஆசிரமத்துக்கு இடதுபக்கம் நந்தவனப் பின்னணியில் பெரிய வளாகத்தில் புதிய கட்டுமானத்தில் வீற்றிருக்கிறது 'உள்ளொளி உணர்வு மையம்' என்னும் தியான மண்டபம்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து தியானம் செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த தியான மண்டபம். 'உள்ளொளி உணர்வு மையம்' எனப்பெயர் சூட்டப்பட்ட இந்த மண்டபத்தின் உள்ளே, கிழக்கு நோக்கி தியான நிலையில் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. கோரக்கர் சித்தரின் சிலாவிக்கிரகம்! எப்போதும் திறந்திருக்கும் ஆசிரமத்தில் பகல் முழுதும் பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இரவுகளில் ஆசிரமத்தில் தங்கி வழிபடுகின்றனர். பௌர்ணமி நாள்களில் கூட்டம் பன்மடங்காகிறது.

நாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் இங்கு பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி ''அன்னக்காவடி தர்மம் தாயே!" என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.

'சுத்தான்னம்' எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது. அப்போது நகரா ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்ட பின்பே ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு உணவு உண்ணுகின்றனர். பூசை செய்த சுத்தான்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது.

இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை உண்ணும் உணவாக மட்டுமின்றி பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர், கோரக்கரின் பக்தர்கள்.

ஏனைய சித்தர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு கோரக்கருக்கு உண்டு. சித்தர்கள் ஆய்வில் இது உறுதி செய்யப்படுகிறது. அதாவது, பொதுவாக எல்லா சித்தர்களின் பாடல்களுமே மேலோட்டமான ஒரு பொருளும், உள்ளார்ந்த - எளிதில் விளங்காத ஒரு மறைபொருளும் கொண்டவை. இவற்றை தவறென எதிர்த்துக் குரல் எழுப்பியவர் கோரக்கர். அவ்வாறு பொருள் விளங்காத பல சித்தர் நூல்களையும் பொருள் புரியுமாறு தெளிவுறுத்தியவர் கோரக்கர். இவ்வாறு அவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை பதினாறு.

இந்நூல்கள் வெளிஉலகுக்குப் போகுமானால் தமக்கும் தமது நூல்களுக்கும் பெருமை குறையுமென்று கருதிய இடைக்காடர், அகப்பை, நந்திதேவர், மச்சமுனி, சட்டை நாதர், பிரம்மமுனி, அழுகண்ணர் ஆகிய ஏழு சித்தர்களும் கோரக்கரிடம் வந்து, அவர் இயற்றிய பதினாறு நூல்களையும் தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு வற்புறுத்தினர். மறுக்காமல் சரி என வாக்குக் கொடுத்த கோரக்கர், தன் ஆசிரமத்தில் உணவு அருந்தி விட்டுப் போகுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார். கோரக்கர் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்ததில் அகமகிழ்ந்து ஏழு சித்தர்களும் உணவு உண்ண மகிழ்ச்சியோடு சம்மதித்தனர்.

கோரக்க சித்தரின் பெருமைகளைக் கூறும் விடியோவைக்கான  இங்கே கிளிக் செய்யவும் .. 

கோரக்கர் கஞ்சா இலைகளை அரிசிப் பருப்புடன் கலந்து அரைத்து அடைசுட்டு சித்தர்களுக்கு அன்புடன் பரிமாறினார். கஞ்சா இலை அடையை உண்ட அவர்கள் உடனேயே மயங்கிச் சாய்ந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட கோரக்கர், தான் இயற்றிய 16 நூல்களையும் சுருக்கித் தொகுத்து, 'சந்திரரேகை' என்று ஒரு நூலை உருவாக்கினார். சித்தர்கள் உறங்கி எழுந்து கோரக்கரிடம் அந்த பதினாறு நூல்களையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றனர். அந்நூல்களை தீயிட்டு அழித்தனர்! இந்த சுவாரஸ்யமான செய்தி, சந்திரரேகை நூலில் இடம் பெற்றுள்ளது!

கோரக்கரின் ஜீவசமாதிகள் இந்தியாவில் எட்டு இடங்களில் அமைந்துள்ளன. அவை: 1. பொதியமலை 2. ஆனைமலை 3. கோரக்கநாத் திடல் (மானாமதுரை அருகே) 4. வடக்குப்பொய்கை நல்லூர் 5. பரூர்ப்பட்டி (தென் ஆற்காடு மாவட்டம்) 6. கொல்லிமலை 7. பத்மாசுரன் மலை (கர்நாடகா) 8. கோரக்பூர் (வட இந்தியா)

வடக்குப் பொய்கை நல்லூர், பரூர்ப்பட்டி ஜீவ சமாதிகளைப்பற்றிய குறிப்புகள் கோரக்கரின் பாடல்களிலேயே காணப்படுகின்றன. போகரின் பாடல்களில் வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்கர் சமாதியான முழு வரலாறும் உள்ளது. இந்த எட்டு இடங்களில் சில சமாதி என்றும், சில நிட்டை கூடிய இடங்கள் என்றும் சித்தர் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நிட்டை கூடுதல் என்பது வனாந்தரமான இடங்களில், குகைகளில் நிலவறை அமைத்து அதனுள் புகுந்து, வாயிலை மூடச் செய்து யோகம் செய்வது. யோக நிட்டை கலைந்ததும் தம் உருவத்தை அட்டாங்க யோகத்தால் மாற்றிக்கொண்டு யாருமறியாது அங்கிருந்து வெளியேறி வேறு இடம் சென்று மீண்டும் நிட்டையில் அமர்வது. ஒரே சித்தருக்கு பல இடங்களில் சமாதி உருவானது இந்த யோகநிட்டை செய்த இடங்களே. அங்குள்ள மக்கள் சித்தர்கள் தவமியற்றிய இடங்களை சமாதியாக அமைத்து வழிபடத் தொடங்கி விடுவார்கள். வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்கர் இறுதியாக சமாதி அடைந்த இடம் என்பதற்கு சித்தர் பாடல்களிலேயே சான்றுகள் உள்ளன. ஏனைய இடங்கள் அவர் யோக நிட்டை கூடிய இடங்களே ஆகும்.

கோரக்கரின் ஜீவசமாதியில் வழிபட்டு, தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து கண்களைத் திறக்கும் போது எதிரில் நமக்கு ஆசிவழங்குவது போல் அமர்ந்திருக்கிறார் கோரக்கர்.

ஒரு சிறகைப் போல் லேசான மனத்துடன் நாம் அங்கிருந்து வெளியேறுகிறோம். வேறு புதிய பக்தர்கள் மண்டபத்துக்குள் வந்தமர்ந்து கண்களை மூடி தியானிக்கத் தொடங்குகின்றனர்.

-பயணம் தொடரும்.

இந்தக் கட்டுரையைப்  படித்துவிட்டீர்களா?  இந்த க்விஸை கிளிக் செய்து பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...

loading...

கோரக்கர் ஆசிரம முகவரி

அருள்மிகு கோரக்கச் சித்தர் ஆஸ்ரமம்

வடக்குப் பொய்கை நல்லூர்

நாகப்பட்டினம் மாவட்டம் 611 106

தொலைபேசி: 04365 -225229

இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் நான்காம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் ஐந்தாம் அத்தியாயத்தைப் படிக்க ......Trending Articles

Sponsored