வேலவனின் சினம் தணிந்த திருத்தணிகையில் 100 வது ஆண்டு படிபூஜை செய்து புத்தாண்டைக் கொண்டாடலாம்!



Sponsored



2018-ம் ஆண்டு பிறக்கவிருக்கிறது. கேளிக்கை, விருந்து என்று இன்றைய புத்தாண்டுக் கொண்டாட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் புத்தாண்டு பிறக்கும்போது இறையுணர்வுடன் தொடங்க வேண்டும் என்று நினைப்பதுதான் நம் வழக்கம். நம்முடைய மரபும் அதுதான். அதற்கென்றே பல பூஜை, வழிபாட்டுமுறைகளை நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார்கள். எனவேதான், ஆங்கிலப் புத்தாண்டில் பல கோயில்களில் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்க் கடவுளான முருகனின் படைவீடான திருத்தணியில் ஆங்கிலப் புத்தாண்டு ஓர் அற்புத நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. 

ஐந்தாம் படை வீடு என்று போற்றப்படுவது திருத்தணிகை திருத்தலம். முருகப்பெருமான் சினம் தணிந்து இங்கு காட்சி தருகிறார். அருணகிரிநாதர் தனது திருப்புகழிலும், நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையிலும், ராமலிங்க அடிகளார் தனது பாடல்களிலும் திருத்தணி முருகனைப் போற்றிப் பாடியுள்ளனர். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை. அன்று  முருகனைப் பெருமைப்படுத்த புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. சூரபத்மனோடு நடைபெற்ற போரில் பட்ட வடு, மூலவரின் திருமார்பில் ஒரு பள்ளம் போல் இன்றும் காணப்படுகிறது.

Sponsored


திருத்தணி முருகனிடம் வேல் கிடையாது என்பது இன்னும் ஒரு சிறப்பு. ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. சுவாமிமலை போலவே திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது. இந்த அற்புதமான திருத்தணிகைக் கோயிலில்தான் ஆங்கிலப்புத்தாண்டில் படிபூஜை நடைபெறுகிறது. அற்புதமான அந்தக் கொண்டாட்டம் தொடங்கிய வரலாற்றைப் பற்றியும், நடைபெறும் விதம் பற்றியும் பார்ப்போம். 

Sponsored


அது ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலம், அப்போது ஒவ்வோர் ஆண்டின் தொடக்க நாளிலும் ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது ஊழியர்களின் வழக்கமாக இருந்தது. புத்தாண்டில் ஒரு வெள்ளைக்கார துரையைப் பார்த்து வணங்குவதா என்று மனம் வருந்திய சில தமிழர்கள், வள்ளிமலை ஸ்வாமிகளின் தலைமையில் கூடி தொடங்கப்பட்ட வழிபாடுதான் திருத்தணிகை திருப்படி உற்சவ விழா. ஆங்கிலப்புத்தாண்டில் துரைகளுக்கெல்லாம் துரையான முருகப்பெருமானை வேண்டி அங்கு அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழை பாராயணம் செய்து புது விழாவினை 1917-ம் ஆண்டு முதல் தொடங்கினார்கள். இதனால் திருத்தணி முருகப்பெருமானுக்கு 'தணிகை துரை' என்ற பெயரும் உருவானது. இப்படித்தான் திருத்தணி படிபூஜை 100 ஆண்டுகளாக இங்கு நடைபெற்று வருகிறது.

1870- ம் ஆண்டு அவதரித்து 1950-ம் ஆண்டு சமாதி நிலை கொண்ட வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா, அருணகிரிநாதரின் தித்திக்கும் திருப்புகழ்ப் பாடல்களை நாடெங்கும் பரவச் செய்தார். முருகப்பெருமானின் பெருமைகளைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்து கௌமார வழிபாட்டை மறுமலர்ச்சிப் பெறச் செய்தவர். இன்றும் வள்ளிமலையில் அவரது இஷ்ட தெய்வமான வள்ளியம்மையின் இருப்பிடத்தில் சமாதி கொண்டு அருள்செய்து வருபவர். இவரே இந்தப் படி பூஜையினைத் தொடங்கி பிரபலமாக்கி வழிநடத்தியவர். 

வள்ளிமலை சுவாமிகளால் 1917-ம் ஆண்டு முதல் படித்திருவிழா மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  அவர் இறுதிக் காலம் வரை சுமார் 33 ஆண்டுகள் நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின் அவரால் தோற்றுவிக்கப்பட்ட "ஸ்ரீ வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபா" உறுப்பினர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 இரவு திருத்தணிகை மலையின் கீழிருந்து ஒவ்வொரு படியாக நின்று, 365 படிகளிலும் இரவெல்லாம் பூஜித்து, அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்களை படிக்கு ஒரு பாடல் வீதம் பாராயணம் செய்து, ஜனவரி முதல் நாள் காலை படிபூஜையினை முடித்து திருத்தணிகை முருகப்பெருமானை தரிசித்து வருவதே படிபூஜை விழா. 

இந்த விழாவையொட்டி மலையின்  கீழே உள்ள நகரத்தார் சத்திரத்தில் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு அன்னதானம் நடைபெறும். இந்தப் படிபூஜை தொடங்கி, 100 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து இந்த ஆண்டு (2017) டிசம்பர் 30-ம் தேதி காலையில் திருத்தணிகேசனுக்கு அபிஷேகமும், அன்றிலிருந்து 3 நாள்கள் அகண்ட பாராயணமும் நடைபெறும், அதாவது, டிசம்பர் 30, 31 மற்றும் 2018 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அன்னதானமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்தப் படிபூஜை விழாவினைக் கடந்த 28 வருடங்களாக சாது பாலானந்தா ஸ்வாமிகள் செய்து வருகிறார். 

'திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்' என்று போற்றப்பெறும் திருப்புகழ்ப் பாடல்களை, வாய் மணக்க மணக்கப் பாடியவண்ணம் நடைபெறும் திருத்தணி படிபூஜை விழாவை தரிசிக்கவும், திருப்புகழ்ப் பாடல்களைக் கேட்பதற்கும் ஆயிரக்கணக்கான முருகபக்தர்கள் திருத்தணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சினம் தணிந்த தணிகை வேலவன், கலியின் துன்பங்களையெல்லாம் களைந்தெறிய தணிகையில் கோயில் கொண்ட அழகனை தரிசித்து அருள் பெற்று வருவோம்.



Trending Articles

Sponsored