‘ஆசாரியன், லேவியன், சமாரியன்... யார் அயலான்?’ - பைபிள் கதைகள் #BibleStoriesSponsoredபைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய ‘பைபிள் கதைகள்’ உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. 

மனிதர்களில்தான் எத்தனை விதங்கள்? அவர்களின் குணங்களில்தான் என்னென்ன நிறங்கள். பைபிளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அதன் நோக்கத்தை வெளிப்படுத்தும் வசனம் ஒன்று உண்டு என்றால் அது வேறு எதுவுமல்ல... ‘உன்னைப் போல் பிறரையும் நேசி’ என்ற திருவசனம்தான் அது.

Sponsored


சக மனிதர்களை நேசிப்பதையே எல்லா இடங்களிலும் கூறிவரும் அவர், மனிதநேயம் பற்றிக் கூறும்போது  ‘உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால், உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள்' எனக் கூறுகிறார். மனிதர்களில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை என்பதையும், 'எல்லோரும் கடவுளின் பிள்ளைகள்' என்பதையும் பல இடங்களில் விவரித்துக் கூறுகிறார். அப்படி அவர் கூறும் ஒரு கதையை இங்கே பார்ப்போம். 

Sponsored


ஒருநாள் இயேசு ஒரு மனிதனிடம், 'நீ உன் அயலானை நேசிக்க வேண்டும்' எனக் கூறுகிறார். அந்த மனிதனோ தனது மனதில் தன்னுடைய 'அயலான்' யார் என யோசிக்கிறான். தன் இனத்தையும் தன் மதத்தையும் சேர்ந்தவர்களை மட்டுமே குறிப்பிடுகிறார் என நினைக்கிறான்.  ஆனால், இந்த இடத்தில் உலகில் உள்ள அத்தனை சக மனிதர்களையும்தான் அவர் குறிப்பிடுகிறார்.

இஸ்ரவேலில் அந்த நாள்களில்  மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள்  மிகுதியாக இருந்தன. யூதர்கள் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக்கொண்டிருந்தனர். அவர்கள், அங்கிருந்த இன்னொரு பிரிவு மக்களான சமாரியர்களை  மிகவும் தாழ்வுநிலை மக்களாக எண்ணி ஒதுக்கிவந்தனர்.

ஒருநாள்  ஒரு யூதன் மலைகள் நிறைந்த பாதை வழியாக எரிகோ என்ற ஊருக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது திடுமென கள்வர்கள் சிலர் வந்து அவனைத் தாக்கி அவனிடமிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையடித்துப் போனதோடு, அவனைக் குற்றுயிரும் குலையுயிருமாக அடித்துப்போட்டுவிட்டுச் சென்றனர்.

சாலையோரத்திலிருந்த மர நிழலை நோக்கி மெள்ள புரண்டு புரண்டு போனான். தாங்கமுடியாத வலியினால் முனகிக்கொண்டே கிடந்தான்.அந்த வழியாக யூத ஆசாரியன் ஒருவன் வந்தான். மிகுந்த வலியால் துடித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து, உதடு குவித்து `உச்’ கொட்டிக்கொண்டே கடந்துப்போனான். வேறு எதுவும் செய்யவில்லை.

அப்போது மத்திய தர வகுப்பைச் சேர்ந்த லேவியன் ஒருவன் வந்தான். இந்த லேவியன் சிறந்த பக்திமான். ஆனால், அவனும் கைகளைப் பிசைந்த நிலையில் நின்று பார்த்துவிட்டு, அவசரமாகச் செல்பவன்போல 'மாய்மாலம்' செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான். 

வலியால் துடித்துக்கொண்டிருந்தவனோ மெள்ள எழுந்து நடக்க முயன்றவன், எழ முடியாமல் கீழே விழுந்தான். தொண்டை மிகவும் வறட்சியாகிப் போய் தாகத்துடன் மயங்கிப் போனான். அப்போது அங்கு வந்த சமாரியன் ஒருவன் அவனைப் பார்த்ததும் மிகவும் பதறிப்போய், அவனைத் தன் மடியில் கிடத்தி, தனது தோள் பையிலிருந்த தண்ணீரைக் கொடுத்தான். யூதன் மயக்கம் தெளிந்தான். அவனது காயங்களை ஈரத்துணியால் துடைத்து மருந்து போட்டு, அவனை அழைத்து வந்து ஓர் ஓய்வு விடுதியில் தங்கவைத்துவிட்டு தன் வழியே போனான் சமாரியன்.

இந்தக் கதையை இயேசு சொல்லி முடித்ததும், அந்த மனிதனிடம்,  ‘இந்த மூன்று பேரில், அந்த அடிபட்ட யூதனிடம் அன்பாக நடந்துகொண்டது யாரென்று நினைக்கிறாய்? அந்த ஆசாரியனா, லேவியனா அல்லது சமாரியனா?’ எனக் கேட்டார்.
‘அந்தச் சமாரியனே. அவன்தான் அந்த அடிபட்ட யூதனிடம் அன்பாக நடந்துகொண்டான்!’ என்று அவன் பதிலளித்தான்.
‘மிகச் சரியாக பதில் சொன்னாய், நீயும் அவனைப்போலவே மற்றவர்களை நடத்து’ என்று சொன்னார் இயேசு.

அவரே மேலும் சொல்கிறார், “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ, அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம்”.Trending Articles

Sponsored