திருச்சாய்க்காட்டில் இயற்பகை நாயனாரின் குருபூஜை!



நாகை மாவட்டம் பூம்புகாரில் அமைந்துள்ள திருச்சாய்க்காடு என்னும் சாயாவனேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (7.1.18) மாலை, 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனாரின் குருபூஜை  நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Sponsored


இயற்பகை நாயனார், திருச்சாய்க்காட்டில் வாழ்ந்தவர். இவர், ஒரு சிவத்தொண்டர். இயற்கைக்கு மாறாக வாழ்ந்ததால், இவரை அனைவரும் இயற்பகை (இயற்கைக்கு பகையானவர்) என்று அழைத்தனர். இவர், தன்னிடம் யார் வந்து எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்துவந்தார். இவரின் குணத்தை சோதிக்க நினைத்த இறைவன், ஒரு சிவனடியார் வேடத்தில் இயற்பகை நாயனார் வீட்டுக்கு வந்தார். இயற்பகை நாயனார் அவரை வணங்கி வரவேற்றார். அடியார் அவரிடம், " நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் தருவாயாமே? நான் ஒன்று கேட்பேன் தருவாயா?" என்று கேட்டார். அதற்கு இயற்பகை, 'கண்டிப்பாக தருகிறேன் கேளுங்கள் சுவாமி' என்றாராம்.

Sponsored


Sponsored


அப்போது சிவனடியார், 'எனக்கு பணிவிடை செய்ய உன் மனைவியை என்னுடன் அனுப்பு' என்று கேட்டாராம். இதற்கு மறுப்பு சொல்லாமல் இயற்பகை நாயனார் தனது மனைவியை அவருடன் அனுப்ப இசைந்தார். ஆனால், அவரின் உறவினர்களும் ஊர்க்காரர்களும்  எதிர்த்தனர். ஆனால் இயற்பகை நாயனார், தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தனது மனைவியை அடியாருடன் அனுப்பிவைத்தார். ஊர்க்காரர்கள், ஆயுதங்களைக்கொண்டு அடியாரைத் தாக்க முயன்றனர். அப்போது இயற்பகை நாயனார், தனது கூர்வாளால் ஊர்க்காரர்களை வெட்டிச்சாய்த்தார். அவரின் கொள்கைப் பிடிப்பைக்கண்டு வியந்த இறைவன், தனது அடியார் வேடத்திலிருந்து இயற்பகை நாயனாருக்கும் அவரது மனைவிக்கும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிக்  காட்சியளித்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். கொலையுண்ட ஊர்க்காரர்களுக்கும் சொர்க்கத்தில் இடம்கொடுத்தார் என்பது புராண வரலாறு.

இவ்வாறு இயற்பகை நாயனார் இறைவனுடன் ஐக்கியமான நாள்தான், 'மார்கழி உத்திரம்'. அதனால்,  இயற்பகை நாயனாருக்கு உரிய தலமான சாயாவனேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள்  நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை 6 மணிக்கு, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள், தேவாரப் பாடல்களை இசைத்தனர். நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக்காட்டினர். அவர்களுக்கு, உழவார அமைப்பின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.



Trending Articles

Sponsored