மகரஜோதி தரிசனம்...! பக்தர்களின் சரண கோஷத்தால் அதிர்ந்தது சபரிமலை Sponsored
சபரிமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்தனர்.

சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மகர ஜோதி தரிசனம். அதற்காகவே அன்றைய தினம் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு வருவார்கள். இன்று மகரஜோதி தரிசன தினமாகும்.

இதையொட்டி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் இன்று மாலை கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. அந்த ஆபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகரஜோதியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோயில் வளாகத்தில் திரண்டிருந்தார். கோயிலில் பூஜை முடிந்த சிறிது நேரத்தில் சுமார் 6.55 மணியளவில் ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் மகரஜோதியாக காட்சியளித்தார். மூன்று முறை ஜோதி எழுந்தது. அப்போது எழுந்த 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரணகோஷத்தில் சபரிமலையே அதிர்ந்தது.

மகரஜோதி தரிசனத்திற்குப்பின் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். பம்பையிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் போலீஸார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இனி 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை நடைபெறவிருக்கிறது. அதன்பின்னர் 20-ம் தேதி, கோயில் நடை அடைக்கப்படும்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored