பூம்புகார் காவிரி சங்கமத்தில் கலைகட்டிய தை அமாவாசை தர்ப்பண பூஜைகள்!காவிரி, கடலுடன் சங்கமம் ஆகும் பூம்புகாரில், தை அமாவாசையையொட்டி மூதாதையர்களுக்கு சிறப்பு தர்ப்பண பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதல் இங்கு மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Sponsored


ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை தினங்களில் மக்கள், மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், இந்த ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானது என்பது ஐதீகம். இன்று தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜைகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் பூம்புகாரில், காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்தில், இன்று அதிகாலை 6 மணி தொடங்கி பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய பூம்புகாரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Sponsored


Sponsored


 இதுபற்றி அங்கு தர்ப்பண பூஜைகள் செய்யும் புரோகிதர் முருகன் சுவாமிகளிடம் பேசினோம். "நம்மை உருவாக்குகிறவர்கள் தாய், தந்தையர். தாய் 10 மாதங்கள் சுமந்தாலும், ஆன்மசக்தி தருவது தந்தைதான். அப்படிப்பட்ட தந்தைக்கு திதி கொடுக்க இந்த தை அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இறந்தவர்கள், இந்த அமாவாசை தினங்களில் தங்களுக்கு யாராவது தர்ப்பணம் கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது நாம் திதி கொடுத்தால், அவர்களின் ஆன்மா மகிழ்ச்சியடையும். இதன் மூலம் பித்ரு பூஜை செய்பவரின் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்; வம்சவிருத்தி ஏற்படும்; சகல வசதிகளும் பெருகும்" என்று கூறினார்.

மேலும், அவரிடம் தர்ப்பண பூஜை முறைப் பற்றி கேட்டோம். "பித்ரு பூஜை செய்வதற்கு முதன்மையானது எள். அடுத்து, தர்ப்பை. தர்ப்பணம் செய்பவர்கள், இந்த தர்ப்பையை கையில் மாட்டினால்தான், சூரிய சக்தி நாம் மந்திரம் சொல்லச்சொல்ல இந்த தர்ப்பையில் ஏறும். இது ஒரு மின்னோட்டம் போன்றது. தர்ப்பை தீய சக்திகளை அண்டவிடாது. அடுத்தது பிண்டம். பிண்டம் அரிசி மாவினால் செய்யப்பட வேண்டும். அது செய்ய வசதி அல்லது நேரம் இல்லாதவர்களுக்கு சிறந்த மாற்று, கதலி பிண்டம். வாழைப்பழத்துக்கு சமஸ்கிருதத்தில் கதலி என்று பெயர். ஒரு தட்டில் தர்ப்பை, மூன்று வாழைப்பழம், எள், குங்குமம் வைத்து பூஜை செய்தால், அது கதலி பிண்டம். இதுவும் முன்னோர்களுக்கு விஷேசமானது" என்று கூறினார்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அதில், அவர்களது குழந்தைகளும் அடங்குவர். அவர்களிடம் பேசினோம். " முன்னோர் இறந்தவுடன் அவர்களை மறந்துவிடாமல் இருக்கவே இந்த தர்ப்பண பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தப் பாரம்பர்யத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். இதன் காரணமாகவே, எங்கள் குழந்தைகளை அழைத்துவந்துள்ளோம். இன்று காலையிலேயே வந்த நாங்கள், கடலில் நீராடிவிட்டு தர்ப்பண பூஜைகள் செய்தோம். இப்போது மனம் நிறைவாக உள்ளது" என்று கூறினா்.

இன்று 60 நாழிகை முழுவதும் தை அமாவாசை திதி இருப்பதால், மாலை 6 மணி வரை திதி கொடுக்க முடியும். இதனால், நேரம் ஆக ஆக பூம்புகார் காவிரி சங்கமத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.Trending Articles

Sponsored