‘அசிரத்தையால் அனுஷ்டானங்களை விடக் கூடாது!’ – பக்தர்களுக்கு ஓர் அருளுரைSponsored‘நடமாடும் தெய்வம்’ என்று பக்தர்களால் போற்றி வழிபடப்பெற்ற காஞ்சி பெரியவர் ஜகத்குருவாகத் திகழ்ந்தவர். ஜகத்துக்கே ஆன்மிக குருவாக இருந்தாலும், சில தருணங்களில் சீடர்களுடனும் பக்தர்களுடனும் நகைச்சுவை உணர்வுடன் பேசி அவர்களை மகிழ்விப்பார்.

அப்படித்தான் ஒருநாள் தம் சீடர் ஒருவரைப் பார்த்து, ''சுக்லாம்பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார். 

Sponsored


''ஆச்சு'' என்றார் சீடர்.

Sponsored


''சுக்லாம்பரதரம் சொன்னியான்னு நான் கேட்கலை... ஆச்சான்னுதான் கேட்டேன்'' 

சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் மகானையே பார்த்தார்.

பெரியவா அந்தச் சீடரிடம், ''எங்கே சுக்லாம்பரதரம் சொல்லு பார்ப்போம்'' என்றார்.

''சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே'' என்று சீடர் கூறினார்.

''இதற்கு அர்த்தம் என்னன்னு தெரியுமோ?'' என்று சீடரிடம் கேட்டார்.

''வெள்ளை உள்ளம், யானையின் கறுப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லோரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால், எல்லா தடைகளும் நீங்கும்'' என்று சீடர் அர்த்தம் சொன்னார்.

 ''இதற்கு வேறோர் அர்த்தமும் உண்டு... அது உனக்குத் தெரியுமோ?'' என்று சிரித்தபடியே கேட்டார் பெரியவா.

அவரே தொடர்ந்து,

“ ‘சுக்லம்'ன்னா வெள்ளை, அதாவது பால்... 'விஷ்ணும்'ன்னா கறுப்பு அதாவது டிக்காக்‌ஷன்.. 'சசிவர்ணம்'ன்னா கறுப்பும் வெள்ளையும் கலந்தது... அதாவது காபி. 'சதுர்புஜம்'ன்னா நான்கு கைகள். அதாவது மாமியோட இரண்டு கைகளால் காபியைக் கொடுக்க, மாமாவின் இரண்டு கைகள் அதை வாங்கிக்கும். 'த்யாயேத்'ன்னா நினைக்கறது. அதாவது இப்படி காபி கொடுக்கறதை மனசுல நெனைக்கறது. 'பிரசன்னவதனம்'ன்னா மலர்ந்த முகம். அதாவது காபியை மனசுல நெனைச்சதுமே மாமாவோட முகம் மலர்ந்துடும். 'சர்வ விக்னோப சாந்தயே'ன்னா எல்லா கவலையும் போயி, மனசு சாந்தமாயிடும்ன்னு அர்த்தம். சுக்லாம்பரதரம் ஆச்சான்னு கேட்கறதுல காபி குடிச்சாச்சான்னு கேட்கறதும் அடங்கியிருக்கு'' என்று பெரியவா சொல்ல, சீடர்களும், பக்தர்களும் தங்களை மறந்து சிரித்தனர்.

இனி எல்லாம் நன்மைக்கே...

மகா பெரியவா பரமசிவன் அவதாரமாகவே போற்றப் பெறுபவர். ஒருமுறை அவரை தரிசிக்க வெங்கடாசலம் என்ற வைணவ பக்தர் வந்திருந்தார். அவருக்கு மகா பெரியவா, 'சங்கு சக்கரதாரியாகக் காட்சி தந்த அற்புதம் இது.

வெங்கடாசலம் என்ற அந்த பக்தர் ஒருநாள் திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீபம் தரிசித்துவிட்டு, மகானை தரிசிப்பதற்கு வந்தார். அப்போது பெரியவா சற்று ஓய்வாக இருந்தார். 

இவரைப் பார்த்த பெரியவா, ''இப்ப நீ எங்கேர்ந்து வர்றே?'' என்று கேட்டார்.

''திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீப தரிசனம். அங்கிருந்து வர்றேன்'' என்ற பக்தரை ஊடுருவுவது போல் பார்த்தார் பெரியவா.

மகானின் பார்வை வெங்கடாசலத்தின் மனதை உறுத்தியது. அப்படியே சிலைபோல் நின்றுவிட்டார். 

சற்றுப் பொறுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அந்த பக்தர், ''எங்க குடும்பத்துல ரொம்ப நாளா சிரவணதீபம், பூஜை, சந்தர்ப்பணை எல்லாம் நடந்தது. இப்ப குடும்பத்துல எல்லோரும் பிரிஞ்சிப் போயிட்டதால பூஜையே நடக்கறதில்லே. மனசுக்குக் கஷ்டமா இருக்கு. வீடே வெளிச்சம் இல்லாத மாதிரி இருக்கு'' என்று வருத்தத்துடன் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்ட பெரியவா, அருகில் இருந்த சீடரிடம் ஏதோ கூறினார். பெரியவா கூறியதைக் கேட்டு உள்ளே சென்ற சீடர், சற்றைக்கெல்லாம் பெரிய அகல்விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு ஏற்றிக்கொண்டு வந்து பெரியவாளின் முன்பாக வைத்தார்.
பெரியவா எழுந்து தம் திருக்கரத்தில் தண்டத்தை ஏந்தியபடி விளக்கை வலம் வந்து வணங்கினார்கள். வெங்கடாசலம் திகைத்து நிற்க, பெரியவா அவரைப் பார்த்து, ''நன்னா சேவிச்சிக்கோ. சிரவணதீபம் போட்டாச்சு. இனிமே எல்லாம் வெளிச்சம்தான்... நன்மைதான்'' என்று தம் திருவாய் மலர்ந்து அருளமுதமாகப் பொழிந்தார். 

வெங்கடாசலத்துக்குத் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க சிரவணதீபத்தை வணங்கினார். அப்போது அந்த பக்தருக்கு மகா பெரியவா சங்கு சக்கரதாரியாக திருக்காட்சி அருளினார். 

நெகிழ்ச்சியும் பூரிப்புமாய் நின்றிருந்த வெங்கடாசலத்திடம். ''அசிரத்தை காரணமா நம்மோட அனுஷ்டானங்களை விட்டுடக்கூடாது. முடிஞ்ச அளவுக்குக் கடைப்பிடிக்கணும்'' என்று அறிவுரை கூறினார்.

சங்கரரிடத்தில் சங்கு சக்கரதாரியாக பெருமாளை தரிசித்த பரவசத்துடன் வெங்கடாசலம் பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.Trending Articles

Sponsored