`ஒருவர் தன் செல்வத்தை எதுவும் செய்யாமல் வைத்திருந்தால் என்ன ஆகும்?’ - பைபிள் கதைகள் #BibleStories



Sponsored



பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய 'பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. 

இறைவனது ராஜ்ஜியத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவன் பத்துக் கட்டளைகளைத் தந்திருப்பதுடன் அவற்றை எப்படி கையாள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். வெறும் இறைபக்தி மட்டும் போதுமானதாக இருக்குமா? மனிதன் வேறு ஏதாகிலும் செய்ய வேண்டியதிருக்குமா? என்பதுபோன்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. 

Sponsored


அதற்குப் பதில் சொல்லும்விதமாக  இயேசு கிறிஸ்து அருமையான ஓர் உவமைக்கதையைக் கூறியிருக்கிறார். ஒரு செல்வந்தன் தூர தேசப்பயணமாக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அதனால் தன் சொத்துக்களை தன்னால் முறையாகப் பராமரிக்க முடியாத சூழல். ஆகவே அவற்றையெல்லாம் விற்று தங்கக் காசுகளாக மாற்றினார். 

Sponsored


தன்னிடமிருந்த ஊழியக்காரர்களை அழைத்து முதல் ஊழியக்காரனிடம், `ஐந்து தங்கக் காசுகளைக் கொடுத்து, அவற்றை நான் வரும் வரை பராமரித்து வை. நான் திரும்ப வந்து கேட்கும்போது, அவற்றை என்னிடம் கொடு' என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். அதைப் பெற்றுக்கொண்டு முதல் ஊழியக்காரன் கிளம்பினான்.

சற்று நேரம் கழித்து இரண்டாவது ஊழியக்காரனை அழைத்து அவனிடம் 2 தங்கக் காசுகளைக் கொடுத்து, அவனிடமும் `இதை நீ முறையாகப் பராமரித்து வை. நான் திரும்ப வந்து கேட்கும்போது இதை என்னிடம் கொடு' என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். 
மூன்றாவது ஊழியக்காரனை அழைத்து, அவனிடம் ஒரே ஒரு தங்கக்காசைக் கொடுத்து, அவனிடமும் `இதை நீ முறையாகப் பராமரித்து வை. நான் திரும்ப வந்து கேட்கும்போது இதை என்னிடம் கொடு' என்று கூறி அவனையும் அனுப்பி வைத்தார்.  

ஐந்து தங்கக்காசுகளைப்பெற்றவன் அதை வைத்து வியாபாரம் செய்து அதை பத்து பவுன்களாக மாற்றினான். அப்படியே இரண்டு தங்கக் காசுகளைப்பெற்றவன், வேறு இரண்டு  தங்கக் காசுகளை சம்பாதித்தான். ஒரு தங்கக்காசைப் பெற்றவனோ,  தனது நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

 சில காலங்களுக்குப் பிறகு, அவர்களுடைய எஜமான் ஊருக்கு வந்தார். தன்னுடைய மூன்று ஊழியக்காரர்களையும் அவரிடம் வரச்சொல்லி தான் கொடுத்த தங்கக் காசுகளுக்குக் கணக்குக் கேட்டார். 
அப்போது ஐந்து தங்கக்காசுகளைப் பெற்றவன், வேறு ஐந்து தங்கக் காசுகளை, 'நான் ஈட்டினேன்' எனக்கூறி அவரிடம் தந்தான். 
எஜமான் அவனைப்பார்த்து, ''உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் எப்போதும் நீ இருப்பாய்'' என்றார்.

இரண்டு தங்கக் காசுகளைப் பெற்றவனும், வந்து, 'ஆண்டவனே, இரண்டு தங்கக் காசுகளை என்னிடம் தந்தீர்கள். நானோ அதைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தங்கக் காசுகளை சம்பாதித்தேன்''என்றான்.
எஜமானர் அவனைப் பார்த்து, ``நல்லது... உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்; அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் எப்போதும் நீ இருப்பாய்'' என்றார்.
ஒரு தங்கக்காசு வாங்கிய ஊழியக்காரனும் வந்து சேர்ந்தான்.

'ஆண்டவரே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன்' என்பதை அறிவேன். அதனால், நான் பயந்துபோய்,  நீங்கள் கொடுத்த தங்கக் காசை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உங்களுடையதை  நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினான். 

எஜமான்  அவன் மேல் கோபம் கொண்டு, ''பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதுதானே. அப்போது, நான் வந்து என்னுடையதை வட்டியுடன் வாங்கிக்கொள்வேன்'' என்று சொன்னார்.

மேலும், ''அவனிடத்திலிருக்கிற  தங்கக்காசை எடுத்து, பத்துத் தங்கக் காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்தில் இருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பயனற்ற ஊழியனான  இவனைப் புறம்பான இருளில் தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்'' என்று எஜமான் கூறினார்.  

இந்தக் கதையிலிருந்து  நாம் ஒன்றை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

இறைவன் நமக்கு அளித்த இந்த பூமிப்பந்தின்  இயற்கை வளங்களையும் செல்வங்களையும் நாம் எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும் என்பதாகும். 

'ஒருவர் தனக்குக் கிடைத்த செல்வத்தை எதுவும் செய்யாமல், தான் மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால், அச்செயலை இறைவன் வெறுப்புடன்தான் பார்க்கிறார்' என்பதை இக்கதை சொல்கிறது.



Trending Articles

Sponsored