வெள்ளொளி, உயிரொளி, உள் ஒளி... அருட்பெருஞ்சோதி - வள்ளலார் நினைவு தினப் பகிர்வு!



`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் நினைவு தினம் இன்று. உண்மையில் இதை நினைவு நாள் என்றே சொல்லக்கூடாது. ராமலிங்க அடிகளார் 'இறைவனுடன் ஐக்கியமான நாள்' என்றுதான் சொல்லவேண்டும்.  

Sponsored


கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான்  வள்ளலார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்றவர், சென்னை, கருங்குழி, வடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வசித்து வந்தார். கருங்குழியில் மட்டும் 14  ஆண்டுகள் தங்கி இருந்து 'திருவருட்பா' என்னும் அருட்பாக்களை இயற்றினார். 

Sponsored


தான் உணர்ந்த, 'இறைவன் ஒளி வடிவமானவர்' என்ற பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டி, 'சத்திய ஞான சபை'யைத் தோற்றுவித்தார்.

Sponsored


ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதே ஆகச் சிறந்த இறைப்பணி என்பதில் எள்முனையளவும் மாறாத கருத்தைக் கொண்டிருந்தார் வள்ளலார்.

சத்திய ஞான சபைக்கு அருகிலேயே 'தர்ம சாலை'யை அமைத்து அன்னதானம் வழங்க வழிவகை செய்தார். இன்றுவரை அங்கு அன்னதானம் சிறப்பாக  வழங்கப்படுகிறது. வடலூர் அருகே இருக்கும் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஸித்தி அடைந்தார். 

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில், 7 திரைகளால் மூடப்பட்டிருக்கும் சத்திய ஞான சபையில், 6 திரைகளை மட்டும் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். தைப்பூச நாளில் மட்டும் 7 - வது திரையும் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும்.

ஆண்டுதோறும் தைப்பூசத்திருநாளில், 'ராமலிங்க வள்ளலார் ஜோதி தரிசன நாள்' பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள்.  

இதையொட்டி நேற்று (செவ்வாய்க் கிழமை) வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையின் சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விடியற்காலை 5  மணிக்கு'அருட்பெருஞ்ஜோதி அகவல்' பாராயணம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு சன்மார்க்கக் கொடியேற்ற நிகழ்ச்சி தர்மசாலையில் நடைபெற்றது. இதேபோல் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரில் விளக்கெரியச் செய்த கருங்குழி, வள்ளலார் ஸித்தி அடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் சீர்வரிசையுடன் அலங்கரிப்பட்டு எடுத்து வரப்பட்டது. நேற்று காலை 10 மணி அளவில், 'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி' என்னும் பாடலை கூடியிருந்த பக்தர்கள் பாடினர்.
 

தைப்பூச ஜோதி தரிசன விழா!
இன்று (31-ம் தேதி) காலை 6 மணிக்கு 7 திரைகளையும் விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கும், பகல் 1 மணிக்கும் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இனி, இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும், நாளை அதிகாலை 5.30 மணிக்கும் திரைகளை விலக்கி, தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.

தைப்பூசத்தின்போது மட்டும்தான் 7- வது திரை விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். அன்று வள்ளலார் ஜோதி வடிவில் தரிசனம் தருவதாக ஐதீகம்.

வள்ளலார் ஜோடி வடிவில் தரிசனம் தரும் இந்த வைபவத்தில்   கலந்துகொள்ள பக்தர்கள் பலரும் வந்திருந்தனர். ஜோதி தரிசனத்தின் போது, 
'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி...
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!'

என விண்ணதிர முழக்கமிட்டனர். 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
ஒவ்வொரு உயிரும் மூன்று வகை ஒளிகளால் இயங்குகிறது. அவை வெள்ளொளி, உயிரொளி, உள் ஒளி. இவற்றில் மனித உடலானது வெள் ஒளியால் உருவானது. அந்த தேகத்தில், மூளையால் சிந்திக்கப் பயன்படும் மன ஒளியாக வெளிப்படுவது உயிரொளி. மனிதன் உள்ளத்தால் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டி நெகிழும்போது, உருக்கமும் நிறைவும் தருவதாய் வெளிப்படுவது உள்ளொளி. இம்மூன்றையும் மக்கள் உணர்ந்து பயன்பெறவே, இறைவன் திருப்பெயரை ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று வள்ளற் பெருமான் போதித்திருக்கிறார். 

'எங்கெங்கு இருந்து ஏதெது வேண்டினும்
அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி' என்று நமக்கெல்லாம் அருள்புரியும்படி பரம்பொருளை வேண்டிய வள்ளலார் சுவாமிகள், ஜோதி வடிவத்தில் தரிசனம் தரும் இந்த தைப்பூசத் திருநாளில், அவரைப் போற்றி வழிபடுவோம்; அவர் அருளால், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனநிலையைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

வள்ளலாரை வணங்குவோம் இறையருள் பெறுவோம்.



Trending Articles

Sponsored