ஒரே கல்லில் வள்ளி, தெய்வானையுடன் வில்லேந்திய சடாமுடி முருகன்... வேலுடையான்பட்டு அதிசயம்!



'மிழ்க் கடவுள்' என்று போற்றப்பெறும் முருகப் பெருமான் வழிபாடு தொன்றுதொட்டு வரும் வழிபாடு. வட இந்தியாவில் உள்ளவர்கள் முருகப் பெருமானை, சுப்ரமண்யர்' என்ற பெயரில் வழிபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல், எண்ணற்ற பல தலங்களிலும் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் பிரார்த்தனைக் கடவுளாகவும் அருள்கிறார். 

Sponsored


முருகப் பெருமான் பெரும்பாலும் வேலுடன் வேலாயுதபாணியாகவும், தண்டத்துடன் தண்டாயுதபாணியாகவும் திருக்காட்சி தருவார். ஆனால், ஒரு தலத்தில் முருகப் பெருமான், வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியவராகத் திருக்காட்சி தருகிறார்.

Sponsored


கடலூர் மாவட்டம், வடலூர் ரயில் நிலையத்துக்கு வடக்கில் சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் வேலுடையான்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்டருளும் முருகக் கடவுள், வில்லேந்திய கோலத்தில், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுயம்புவாக எழுந்தருளிய சுப்ரமண்யர்

Sponsored


வேலுடையான்பட்டு மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர் என்ற ஞானஸ்கந்தன் குருக்கள், தொடர்ந்து கோயில் தோன்றிய வரலாறு பற்றியும் கூறினார்.

புராணக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, முனிவர்களும் தேவர்களும் இந்தப் பகுதியில் நீண்ட தவம் மேற்கொண்டனர். அவர்களுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் திருக்காட்சி அளித்தார். தரிசனம் தந்த முருகப் பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைத்து வழிபட்டனர். காலப் போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்துவிட்டது. 

கலியுகத்தில் நம்முடைய இன்னல்கள் அனைத்தையும் இல்லாமல் செய்து, நமக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டார் முருகப் பெருமான். கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்ரகாடவன் என்ற பல்லவ வம்சத்து மன்னரின் பசுக்கள், இந்தப் பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்கு மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களைத் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்துகொண்டிருந்தது. மன்னன் வியப்புற்ற வனாக, அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பெருகி வரவே திடுக்கிட்ட மன்னர், அந்த இடத்திலிருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் காட்சி தந்தார் முருகப் பெருமான். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உருவானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோயில். 

இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம்தான் கோயிலை நிர்வகித்து வருகிறது. மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலில் கிடைத்தவர். ஆம். இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப் பட்டது.


இந்தத் திருத்தலத்தில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத் திருவிழா விசேஷமானது. 12 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது, பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து வழிபடுவர். சுற்றிலுமுள்ள 18 கிராமங்களுக்கும் வேலுடையான்பட்டு வேலவன் குலதெய்வமாக இருந்து அருள்புரிந்து வருகிறார்.

கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக பக்தர்கள் போற்றுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி, பெளர்னமியன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறுகால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உகந்த நாள். 

குடும்பத்தோடு கோயிலுக்கு வந்திருந்த திலகா, "எங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டணும், என் தங்கச்சிக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை அமையணும்னு வேண்டிக்கிட்டோம். இரண்டுமே நாங்க நெனைச்சபடி நடந்துடுச்சி. அதனால், நேர்த்தி கடனா பங்குனி உத்திரத்தில் காவடி எடுப்போம். அதுக்கு முன்னாடி குடும்பத்தோடு முருகனை தரிசித்துவிட்டுப் போக வந்துள்ளோம்" என்றார் மகிழ்ச்சியோடு.

"முப்பது வருடமாக இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து வந்துகிட்டு இருக்கிறேன். என் பொண்ணு படிச்சி நல்ல கம்பெனியில் வேலைக்குப் போகணும்னு வேண்டிக்கிட்டேன். அதுபோலவே அவள் படிச்சி சென்னையில் நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து கை நிறைய சம்பாரிக்கிறாள். நல்ல வரனும் கிடைச்சிடுச்சு. சீக்கிரமே அவள் திருமணத்தை முடிச்சுடுவோம். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். நிலம் விற்பனையாகணும்னு வேண்டிக்கிட்டு போனால் அடுத்தவாரமே அது முடிந்துவிடும்" என்றார் பாபு.

இங்கு தினந்தோறும் காலை 6 மணியிலிருந்து 12 மணி வரையிலும், மாலை 4.30-ல் இருந்து இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
 



Trending Articles

Sponsored