பொருளாதாரக்கடன் முதல் பிறவிக்கடன் வரை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம்! #PradoshamSponsoredநாம் முற்பிறவியில் பட்ட கடன்களைத் தீர்க்கவே மறுபடியும் பிறக்கிறோம் என்பது சாஸ்திரம் சொல்லும் பிறவி ரகசியம். ஆனால், பட்ட கடனைத் தீர்க்கவேண்டி மறுபடியும் பிறக்கும் நாம், மேலும் மேலும் கடனாளியாகி, முடிவில்லாத பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறோம். கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற அளவுக்கு இன்றைய பொருளாதாரச் சூழல் உருவாகிவருகிறது. பேராசையும், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மனோபாவமும் ஒவ்வொருவரையும் கடன்காரராக மாற்றிவருகிறது. 'கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சொல்வார்கள். நாளும் கடன் பிரச்னைகளால் கலங்கித்தான் வருகிறோம். இதோ நமது பிறவிக்கடன், பொருளாதாரக்கடன் எல்லாவற்றையும் போக்க உதவும் திருநாள் நாளை வரவிருக்கிறது. 

ஆம், நாளை 27-2-18 செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷம், ` ருண விமோசன பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. `ருண’ என்றால் கடன். கடன் தொல்லைகளில் இருந்து விமோசனம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு நாளை நடைபெற உள்ளது. செவ்வாய் பகவான் ருண, ரோகத்துக்கு காரகத்துவம் வகிப்பவர்.  இவரே கடன் தொல்லை உண்டாகவும், அவரை வழிபட்டால் கடன்களைத் தீர்க்கவும் அருளுவார். செவ்வாய்க்கிழமை அன்று வரும் இந்த பிரதோஷம் செவ்வாய் பகவானை மகிழ்விக்கும் வேளை என்பதால், `ருண விமோசன பிரதோஷம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. 
 

Sponsored


Sponsored


தேவர்களையும் ஜீவராசிகளையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானை எல்லோரும் துதித்து வணங்கிய வேளையே பிரதோஷ காலம். எல்லா மாதங்களிலும் வளர்பிறை, தேய்பிறை கால திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷ நாள்கள். அந்த நாளில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான காலமே பிரதோஷ பூஜைக்கு உரிய நேரம். இந்த அற்புதமான வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வணங்குவது அன்பர்களின் வழக்கம். 

இந்த நாளில் குறிப்பிட்ட பிரதோஷ வேளையில் சிவலிங்கத்திருமேனிக்கு பால், இளநீர், தேன், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, செவ்வந்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தூப, தீப வழிபாடுகள் நடைபெறும். அதற்கு முன்பு நந்தியெம்பெருமானுக்கும்  அபிஷேகம் நடைபெறும். அருகம்புல், மலர்கள் சாத்திய பிறகு  வில்வத்தால் நந்திதேவருக்கு அர்ச்சனை செய்வார்கள். நந்தி பகவானுக்கு தீபம் காட்டி, அதன் பின்னர்,  மூலவருக்கு நடைபெறும் தீபாராதனையை நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு தரிசிப்பது இந்த நாளைய விசேஷம். இதனால் சகல பாவங்களும் நீங்கி மகிழ்ச்சி அடையலாம் என்பது நம்பிக்கை. நாளைய தினம் வரவிருக்கும் ருண விமோசன பிரதோஷ வேளையில் இப்படி ஈஸ்வரனையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை. 

சித்தர்களின் சமாதிகள், சரபேஸ்வரர் சந்நிதி, லட்சுமி நரசிம்மர் கோயில் போன்ற இடங்களிலும் வழிபட்டு கடன்களில் இருந்து விமோசனம் பெறலாம். முருகப்பெருமானின் தரிசனமும் செவ்வாயின் அருளைப் பெற்றுத் தரும். செவ்வாயன்று வரும் பிரதோஷ நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது நம் கடன்களைத் தீர்க்க உதவுவதுடன், அளவற்ற நன்மைகளையும் தரும். ருண விமோசன  பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் ரத்ததானம், அன்னதானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்றவை செய்வது மிக மிக நல்லது. சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும். சில ஆலயங்களில் பிரதோஷ வேளையில், ஈசான்ய திசையில் பூத கணங்களுக்காக ஈசன் ஆடிய 'பூத நிருத்தம்' நடைபெறும். இந்த நாட்டியத்தை தரிசிப்பது நற்பலன்களை அருளும்.
 


நெற்றி நிறைய நீறணிந்து, உள்ளத் தூய்மையோடு ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து ஈசனின் தாள் பணிந்து இறைஞ்சுவோருக்கு, கட்டாயம் அவர் அருள்செய்வார். பிறவிக்கடனையும், உங்கள் பொருளாதாரக் கடன்களையும் அவர் சீக்கிரமே தீர்த்துவைப்பார். எடுத்த பிறவியே போதும் என்ற அக்கறையான வேண்டுதலை, ஏழையர்க்கு எளியவரான பரமன் நிச்சயம் நிறைவேற்றுவார்.


 Trending Articles

Sponsored