ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்... சில நினைவுகள்! #JayendraSaraswathi



காஞ்சி சங்கர  மட 69 -வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (28-ம்தேதி) காலையில் காஞ்சி சங்கர மடம் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவர் ஏற்கெனவே சர்க்கரைநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். 

Sponsored


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் கோட்டூர் என்ற ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள 'இருள் நீக்கி' கிராமத்தில் மகாதேவ ஐயருக்கும், சரஸ்வதி அம்மாளுக்கும் குமாரராக, 1935-ம் ஆண்டு ஆடி மாதம் 3- ம் தேதி ஜெயேந்திரர் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஒரு நன்னாளில் `சுப்ரமண்யம்' எனப் பெயர் சூட்டினார்கள்.

Sponsored


அவரது வாழ்க்கை விழுப்புரத்தில்தான் ஆரம்பித்தது. ஏனெனில், இவரது தந்தைக்கு தென்னக ரெயில்வே விழுப்புரத்தில்தான் பணி. மகாதேவ ஐயர் சம்ஸ்கிருத அறிவும், ஆங்கில அறிவும் அதிகமுள்ளவர். சுப்ரமண்யத்துக்கு வீட்டிலேயே கல்விப் பயிற்சி, குருமுகமாகத் தொடங்கி நடைபெற்றது. பின்னர் சுப்ரமண்யம் விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலத் தொடங்கினார்.

Sponsored


பள்ளியில் முதல் மாணவராகத் திகழ்ந்த சுப்ரமண்யத்தின் மீது அந்தப் பள்ளிஆசிரியருக்கு அளவு கடந்த பிரியம். ''ஊரும், உலகமும் புகழும் பிள்ளையாக உங்கள் மகன் வரப்போகிறான்" என்று சரஸ்வதி அம்மாளிடமும், மகாதேவ ஐயரிடமும் ஆசிரியர் சொல்வார். சுப்ரமண்யம் ஜகத்குருவாகி உலகமே போற்றும்படி வாழ அவர் வாக்கு பலித்திருக்கிறது. ஜெயேந்திரருக்கு, `மஹா பெரியவாள்’, `ஶ்ரீ பரமாசார்யாள்’ என்று உலகம் முழுவதுமுள்ள பக்தர்களால் போற்றி வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1954 - ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது ஆச்சார்யராக நியமிக்கப்பட்டார்.

ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன்னை 'இச்சாசக்தி' என்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை 'கிரியா சக்தி' என்றும் வர்ணித்திருக்கிறார். இவர் பீடாதிபதியாக இருந்த காலங்களில் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து, பல்வேறு ஆன்மிகப் பணிகளையும், அறப்பணிகளையும் செய்திருக்கிறார். பல திருக்கோயில் கும்பாபிஷேகங்களையும் நடத்தியிருக்கிறார். 

'ஜன் கல்யாண்' மற்றும் 'ஜன் ஜாக்ரன்' ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களுக்குப் பல வகைகளிலும் சேவை செய்திருக்கிறார். சேரிப் பகுதிகளுக்குச் சென்று, அவர்களிடமும் ஆன்மிக உணர்வைப் பரப்பினார். அண்மைக் காலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில் இன்று காலை ஸித்தி அடைந்தார்.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவுகள் குறித்து முனைவர் சங்கரநாராயணனிடம் பேசினோம்...

"குழந்தை போன்ற உள்ளம்கொண்டவர். எல்லோரிடமும் கனிவாகத்தான் பேசுவார். குருமீது அளவில்லாத பக்திகொண்டவர். அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து குருவின் (மகா பெரியவர்) அதிஷ்டானத்தை வந்தனம் செய்த பிறகே அன்றாடக் காரியங்களைத் தொடங்குவது அவரது வழக்கம். குருவுக்கான பூஜைகளை நியமப்படி நடத்திவந்தார். 

ஆன்மிகப் பணிகளை மட்டுமே அதிகம் செய்துவந்த நிலையில், இவரது காலத்தில் காஞ்சி மடம் சமூகப்பணிகளையும் அதிகம் செய்யத்தொடங்கியது. வடகிழக்கு மாநிலங்களில்கூட கல்வி, மருத்துவப் பணிகளை செய்து வந்தது காஞ்சி மடம். 

பழங்குடி மக்களின் கல்வி, மருத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்தியவர் ஜெயேந்திர சுவாமிகள். ஏனாத்தூர் பல்கலைக்கழகத்தில் நவீனக் கல்விமுறைகள் உண்டாகக் காரணமானவரும் இவர்தான். பாலிடெக்னிக், இன்ஜினீயரிங் கல்லூரி முதலிய தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவித்துக் கொண்டுவரச் செய்தார். 

நாட்டில் எங்கே, எப்போது இயற்கைப் பேரிடர்கள் நடைபெற்றாலும் உடனே பரிதவித்துப்போவார். அங்கே என்ன செய்யலாம்? என்ன என்ன பொருள்களை உதவிக்கு அனுப்பலாம் என்று உடனே ஆலோசிப்பார். சுனாமி, புயல், உத்தரகாண்ட் பெருவெள்ளம்... என எல்லாப் பேரிடர்களின்போதும் காஞ்சி சங்கர மடம் பங்குகொண்டு நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க ஆணையிடுவார். 

பொருள்கள் போய்ச்சேர்ந்து, மக்களை அடையும்வரை தூங்கவே மாட்டார். மக்களின் மீது மாளாத பிரியம்கொண்டவர் சுவாமிகள். சத்தமில்லாமல் அவர் செய்த சமூகப்பணிகள் ஏராளம்.

வயதாகி உடம்பு ஒத்துழைக்காத வேளையில்கூட அவரது ஆன்மிகப்பணிகள் ஓயவே இல்லை. அவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்துபோக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப்படுத்துபவை. 

இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள். 

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆலயங்களைப் புனரமைத்தவர் சுவாமிகள். காஞ்சி காமாட்சி ஆலயத்தின் விமானத்துக்குத் தங்கம் வேய்ந்தது, ஏகாம்பர நாதருக்கு பெரிய தேர் செய்தது என அவரது ஆலயப்பணிகள் எண்ணிலடங்காதவை. வடநாட்டில் தமிழகக் கோயில்கள் பலவற்றை உருவாக்கினார். 

எத்தனையோ இடிந்துபோன கோயில்களைப் புனருத்தாரணம் செய்து நித்ய பூஜைகள் நடைபெறக் காரணமாக இருந்தவர். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு அவர் செய்த திருப்பணிகள் ஏராளம். அழிய இருந்த எத்தனையோ ஆன்மிகப் புத்தகங்களைப் படியெடுக்க உதவிசெய்து, பாதுகாத்தவர். 

ஆன்மிகம் குறித்து அவர் செய்த ஆய்வுகள், பல புதிய புதிய தகவல்களை நமக்குக் கொடுத்திருக்கிறது. வௌவால்கள் பறந்துகொண்டிருந்த அநேக ஆலயங்களில் கடந்த 30 ஆண்டுகளில் மறுமலர்ச்சி உண்டாக்கி, மக்களை வரச்செய்த புண்ணிய காரியங்களைச் செய்தவர். 

நாட்டில் எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து, அம்பாள் நாமங்களைப் பாராயணம் செய்துகொண்டேயிருப்பார். அங்குள்ள மக்கள் குணமாகவும், நிலைமை சீரடையவும் வேண்டிக்கொண்டேயிருப்பார். எளிமையாக, எளிய மக்களுக்கு ஆதரவாக வாழ்ந்தவர் சுவாமிகள். அவர் மறைந்தது மிகப்பெரிய சோகம். அவரது பணிகளைத் தொடர்ந்து செய்வதும், எளிய மக்களைத் தொடர்ந்து பாதுகாப்பதும் அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாக அமையும்..." என்கிறார் சங்கரநாராயணன். 



Trending Articles

Sponsored