காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதியானார் ஶ்ரீவிஜயேந்திர ஸ்வாமிகள்!



1969-ம் வருடம் மார்ச் 13-ம் தேதி திருவண்ணாமலையில் கிருஷ்ணமூர்த்தி - அம்பாலக்ஷ்மி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பூர்வீகம் திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் என்ற ஊராகும். ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர், பிறகு வேதங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக வேதபாடசாலையில் சேர்ந்தார். இவர் தமது 13-வது வயதில் ஓர் ஆன்மிகச் சொற்பொழிவில் கலந்துகொண்டார். அப்போது சொற்பொழிவு நிகழ்த்தியவர் எடுத்துச் சொன்ன வேதம் பற்றிய கருத்தில் இருந்த பிழையை எடுத்துச் சொல்லித் திருத்தியதுடன், வேதக் கருத்துகளையும் எடுத்துக் கூறினார். வேதங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சியைக் கண்ட ஶ்ரீஜெயேந்திர ஸ்வாமிகள், பெரிதும் பாராட்டிப் பேசினார். 

Sponsored



இவருடைய வித்யா ஞானத்தைக் கண்டு, இவரை காஞ்சி காமகோடி பீடத்தின் பால பெரியவராக நியமிக்க, காஞ்சி மஹா ஸ்வாமிகளும், அப்போதைய  இளைய பீடாதிபதி ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் விரும்பினர். அதன்படியே 1983-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி ஶ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தீட்சா நாமம் சூட்டி, ஶ்ரீமடத்தின் பால பெரியவராக நியமித்தனர். அப்போது முதல் 1993-ம் ஆண்டு வரை மஹா பெரியவா, புதுப் பெரியவா, பால பெரியவா என்று மூன்று ஆசார்யர்கள் ஶ்ரீமடத்தை அலங்கரித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். தாம் ஶ்ரீமடத்தின் பால பெரியவராக நியமிக்கப்பட்டபோது, மிகவும் கடினமான தசகம் என்னும் ஸ்தோத்திரத்தை மஹா ஸ்வாமிகளைப் போற்றி இயற்றியிருக்கிறார்.

Sponsored


அதில் ஒரு ஸ்லோகம்...

Sponsored


ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும்
பக்தானாம் ஹித வக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே
பகவத்பாத பாதாப்ஜ விநிவேசிதசேதஸ:
ஸ்ரீசந்த்ரசேகரகுரோ: ப்ரஸாதோ மயிஜாயதாம்...

வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்ட தர்மங்களை அனுஷ்டித்துக் காட்டுவதில் ஈடுபடுபவரும், ஜகத்குருவாக விளங்குபவரும், பக்தர்களுக்கு நன்மை புகட்டுபவருமான குருவை மனத்தூய்மை அடைவதற்காக வணங்குகிறேன். ஆதிசங்கர பகவத்பாதரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீசந்திரசேகரரின் கருணை கடாக்ஷ்ம் என்னிடம் உண்டாகட்டும்.
மஹா ஸ்வாமிகள் ஸித்தியடைந்த பிறகு, ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மடத்தின் பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஶ்ரீவிஜயேந்திரர் இளைய ஆசார்யராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 


இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தெரியும். வேதம், உபநிஷதம், மீமாம்சம் மற்றும் புராணங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார். நவீன முறைகள் பலவற்றை ஆன்மிக வகுப்புகளில் நடைமுறைப்படுத்தினார். நாடு முழுவதும் ஆன்மிகம் தழைக்க பாடுபட்டார். மாதா பிதாவைப் போற்றிப் பாதுகாப்பதே மிகப் பெரிய ஆன்மிகப் பணி என்பதை வலியுறுத்தி வருகிறார். பல ஆலயங்களில் இருந்த கல்வெட்டுகளைக் கண்டறிந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு தலவரலாறுகளை எழுத உதவினார்.  
 ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளோடு இணைந்து பல ஆலயப்பணிகளையும் ஆன்மிக ஆய்வுப்பணிகளையும் இவர் மேற்கொண்டார். மேலும், சமுதாயப் பணிகளிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.

40-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், பல கல்வி நிறுவனங்கள் போன்ற பல முன்னோடித் திட்டங்களைக் கொண்டு வந்து எளிய மக்களுக்கும் சமூகப் பணிகளை ஆற்றி வந்தார். இந்தியாவெங்கும் அறப்பணிகளைச் செய்து, உலகெங்கும் கோயில்களை எழுப்புவதில் முனைந்து செயலாற்றி வருகிறார். 

ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸித்தியடைந்ததைத் தொடர்ந்து, ஶ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சி ஶ்ரீகாமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
 



Trending Articles

Sponsored