அன்னை நீராக சுரந்து ஈசனிடம் மையலுறும் திருவானைக்கா நீர்த்தலம்!Sponsoredபெண்ணே சக்தி வடிவம் தான். ஓடும் நதிகளும், பேசும் மொழிகளும் ஏன் இந்த பூமியும் அதில் பூக்கும் மலர்களும் கூட பெண்ணின் வடிவம் தான். 'பெண்ணின் பெருந்தக்க யாவுள' என வள்ளுவப்பெருந்தகை பெண்களைக் கொண்டாடுகிறார். தியாக உணர்வும், திடமான அறிவும் கொண்ட பெண்கள் எல்லோருமே சக்தியின் அம்சம் என்ற நிலையில், சக்தியான அம்பாளே தினமும் சிவனை வழிபடுகிறாள் என்பது ஆச்சரியம் தானே? அதுவும் ஆணான ஒரு அர்ச்சகர் வடிவில் அந்த பூஜை நடப்பது வியப்பானது. ஆணும் பெண்ணாக மாறி இந்த அரிய பூஜையினால் பெண்ணின் பெருமையை இன்னும் அறிந்துகொள்ளலாம். 

பெரும்பாலும் சிவன் கோயில்களில் ஆண்களே அர்ச்சகர்களாக இருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரு கோயிலில்  அர்ச்சகர் பெண் வேடம் தரித்து இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் அதிசயம் நடக்கிறது.  திருச்சி அருகேயுள்ள திருவானைக்கா அகிலேண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர் கோயிலில் தான் இந்த ஆச்சரியம்.  

Sponsored


இந்த நடைமுறைக்குப்  பின்னால் சுவாரஸ்யமான ஒரு புராணக்கதை இருக்கிறது.  

Sponsored


கயிலாயம் ஆழ்ந்த மோனநிலையில் இருந்தது. கருணாமூர்த்தியான ஈசனும் அந்த அமைதியில் ஆழ்ந்து யோக நிலைக்குச் சென்றார். சிவனார் 'சிவமே' என்று ஓய்ந்து இருக்க முடியும். சக்தியோ இயங்குபவர்... அவர் அமைதியாக இருப்பாரா? ஈசனின் தவத்தைக் கண்டு 'தன்னை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரே' என்ற தவிப்பில் ஊடல் கொண்டு பூமிக்குச் சென்று விட்டார். காவிரி கரை புரண்டோடும் சோழ தேசத்தின் திரிசிரபுரம் என்ற தலத்துக்கு அன்னை சக்தி வந்தார். ஜம்பு மகரிஷி தவமியற்றும் வெண்நாவல் மரத்தடிக்கு வந்த அன்னை,  அங்கு ஈசனின் எல்லையில்லா கருணையினை மகரிஷி வழியே உணர்ந்து கொண்டாள். 

அவசரத்தால் ஊடல் கொண்டு ஐயனைப் பிரிந்தது தவறு என்று உணர்ந்தாள். உடனே ஈசனை அடைய அன்னையும் சிவபூஜையைத் தொடங்கினாள். எப்படித் தெரியுமா? துள்ளி ஓடும்  நதி நீரை அள்ளி எடுத்து சிவலிங்கமாக்கி அன்னை வணங்கினாள். அவள் வணங்கிய இடமே நீர்த்தலமானது. ஆம், திருச்சியில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயமே அன்னையின் வழிபாட்டால் உருவானதுதான். 

ஜம்பு எனும் வெண்நாவல் மரத்தடியில் ஈசன் இருந்ததால் ஜம்புகேஸ்வரர் என்றானார். அன்னை, அகிலாண்டேஸ்வரி, என்றானாள். அனுதினமும் பூஜை செய்தும் ஈசன் மனமிரங்கி திருமணம் செய்துகொள்ள வரவேயில்லை.  இன்னும் அம்பிகை ஈசனை அடையவில்லை என்ற காரணத்தால்தான் தினமும் அம்பிகை உச்சிகால வேளையில் ஈசனை துதித்து தன்னை ரட்சித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறாள். 

அதுவும் எப்படி? 

அந்த கோயிலின் அர்ச்சகர் அம்பாளாக உருமாறி சிவப்புப் பட்டுப்புடவை உடுத்தி, தலையில் கிரீடம் வைத்து, கழுத்தில் ருத்ராட்சமும் மலர் மாலைகளும் தாங்கி காட்சி தருவார். அம்பாளின் அம்சமாக உருமாறும் அர்ச்சகர்,  ஈசனின் கருவறைக்குச் சென்று பூஜை செய்வார். அதன்பின்னர் கருவறைக்கு எதிரே உள்ள மண்டபத்தில் இருக்கும் பசுவுக்கு கோ பூஜை செய்வார். மஞ்சளிட்டு, மலர் தூவி அம்பிகை செய்யும் கோ பூஜை அவள் தனது கணவரான ஈசனை அடைய வேண்டும் என்பதற்காகவே. 

இன்றும் கணவரை அடைய பூஜை செய்யும் அன்னை  அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் கல்யாண உற்சவ விழாவே நடைபெறுவதில்லை. தினமும் நடைபெறும் அம்பாளின் சிவபூஜை மற்றும் கோ பூஜையைக் காணும் இளம் பெண்களுக்கு நல்ல திருமண வரன் அமைவதாகச் சொல்கிறார்கள். இன்றும் ஈசனின் லிங்கத்திருமேனியைச் சுற்றி நீர் வடிவாக சுரந்து அன்னை  காட்சியளிக்கிறாள். ஈசனைக்காணாத பெரும் கோபத்தினை ஆதிசங்கரர் அணிவித்த தாடங்கமே தணித்தது. யுகயுகமாய் தவமிருந்து ஈசனை அடையத் தவிக்கும் அகிலாண்டேஸ்வரி அன்னை அன்பின் வடிவமானவள். அதனாலேயே அர்ச்சகரின் வடிவில் தினமும் வழிபட்டு வருகிறாள். பெண்மையின் இலக்கணமாக பூமியில் வந்துதித்த அன்னை அகிலாண்டேஸ்வரி இன்னும் காத்திருக்கிறாள் ஈசனுக்காக.Trending Articles

Sponsored