பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை! #LentDaysSponsoredசில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 'அல்போன்சோ' என்ற அரசர்  ஸ்பெயின் நாட்டை ஆண்டுவந்தார்.  நீதி தவறாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால்,  இன்றைக்கும் அவர் மக்களால் நினைவுகூரப்படுகிறார். 

அல்போன்சோ ஆட்சி செய்தபோது ஸ்பெயினின் மீது எதிரி நாட்டுப் படையினர் படையெடுத்து வந்தனர். இதனால் அல்போன்சா படையினருக்கும் எதிரி நாட்டுப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது. 

Sponsored


அப்போது, சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்துபோனார்.

Sponsored


இந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, எதிரி நாட்டு அரசரிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், ``உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா... இல்லை, உன் தேசத்து மக்கள் வேண்டுமா? மகன் வேண்டுமென்றால், நாங்கள் நாட்டின்மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்'' என்று எழுதி அனுப்பியிருந்தனர். அந்த ஓலையைப் படித்ததும், எதற்குமே அஞ்சாத மன்னர் அதிர்ந்து போனார். மன்னரைச் சுற்றி அரச சபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். 
அப்போது மன்னர் அரச சபையிலிருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் ``என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால்,  என் நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்'' என்று எழுதுமாறு கேட்டுக்கொண்டார். 
எழுத்தரும் மன்னர் சொன்னபடியே ஓலையை எழுதி, அதனை எதிரி நாட்டு அரசனுக்கு அனுப்பிவைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவை அறிந்து, அரச சபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே திகைத்துப் போனார்கள்.

மக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் அனைவரையும் வியக்கவைப்பதாக இருக்கிறது. 
எப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று பிதா என அழைக்கப்படும் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புக்காகக்  கையளித்து `பேரன்பின் ஊற்று' என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்றைக்கு வாசிக்கப்படும் வாசகங்கள் ‘கடவுளின் பேரன்பை’ எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. யோவான் எழுதிய நற்செய்தி நூலில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்  கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்'' என்கிறார்.  

இந்த வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்குப் பேரன்பு கொண்டவராக இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந்த இடத்தில், புனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும். 

``நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' என்பார் அவர். 

ஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும்; அதுதான் கடவுளின்  திருவுளமாக இருக்கிறது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.Trending Articles

Sponsored