பக்தர்களுக்கு இஷ்ட தெய்வமாகக் காட்சியளித்த பாபா! #SaiBaba



தம்மை நம்பிக்கையோடு வணங்க வரும் பக்தர்களைக் காப்பாற்றுவதில் பாபாவுக்கு நிகர் அவர்தான். தம்மைக் காண வரும் பக்தர்களுக்கு, அவர்களுடைய இஷ்ட தெய்வத்தின் வடிவத்தில் காட்சி தந்து, அவர்கள் தம்மிடம் கொண்டிருக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரிப்பார். பாபாவின் திருவுருவத்தில் நாம் எந்த தெய்வத்தையும் தரிசிக்கலாம் என்பதைப் பின்வரும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

Sponsored



பாண்டுரங்கனாக தரிசனம் தந்த பாபா!

Sponsored


பகவந்த்ராவ் என்பவர் சாய்பாபாவின் தீவிர பக்தர். அவரது தந்தை, பண்டரிபுர பாண்டுரங்க விட்டலின் பக்தர் ஆவார். அவர் நாள்தோறும் பாண்டுரங்கனை வழிபட்டு, அவருக்கு நைவேத்தியம் செய்து, பின்னரே தாம் உணவு உண்ணும் வழக்கம் கொண்டிருந்தார். மேலும், வருடத்துக்கு ஒரு முறையாவது பண்டரீபுரம் சென்று விட்டலை வழிபட்டும் வந்தார். ஆனால், தன் தந்தையின் இறப்புக்குப் பின்னர், பகவந்த்ராவ் விட்டல் வழிபாட்டை முழுவதுமாக நிறுத்திவிட்டார். பாண்டுரங்கனுக்கு நைவேத்தியம் செய்வதையும், அவரைச் சென்று தரிசிப்பதையும்கூட முழுவதுமாக நிறுத்தியிருந்தார். ஒருமுறை பாபாவை தரிசிப்பதற்காக ஷீரடிக்கு வந்தார். அப்போது பாபா  பகவந்த்ராவைச் சுட்டிக் காட்டி, 'இவனுடைய தந்தை என்னுடைய நல்ல நண்பர் ஆவார். ஆனால், இவனோ என்னையும், விட்டலையும் பட்டினி போடுகிறான்' என்று கூறினார். மேலும், 'அவன் இனி அவ்வாறு செய்யக் கூடாது என்று அவனுக்கு அறிவுறுத்தவே நான் அவனை இங்கே வரவழைத்தேன்' என்றும் கூறினார். இப்படி பாபா பகவந்த்ராவிடம் தாமும், விட்டலும் வேறு வேறு அல்லர் என்பதைப் புரியவைத்தார்.

Sponsored


மேலும் சாய் பாபாவின் திருவருளைப்பெற இங்கே க்ளிக் செய்யவும்.. 

பகவந்த்ராவைப் போலவே ரகுவீர் புரந்தரே என்ற பக்தருக்கும் ஓர் அனுபவம் ஏற்பட்டது. அவரும் அவரின் தாயாரும் ஷீரடியில் வசித்து வந்தனர். புரந்தரேவின் தாயாருக்கு விட்டலைத் தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. அவர் தன்னுடைய ஆவலை  மகனிடம் கூறினார். தாயின் ஆவலை நிறைவேற்ற விரும்பிய புரந்தரே, சாயிநாதரிடம் விடைபெற்றுக் கொண்டு பண்டரிபுரம் செல்லலாம் என்று நினைத்து, சாயிநாதரை தரிசிக்க வந்தார். ஆனால், அவர் சாயிநாதரிடம் தன் விருப்பத்தை கூறுவதற்கு முன்பே, அனைத்தும் அறிந்தவரான பாபா அவரின் தாயிடம், 'எப்போது பண்டரிபுரம் செல்லப் போகிறீர்கள்?' என்று கேட்டார். பின்னர், மதிய ஆரத்தியின்போது புரந்தரேவுக்கும், அவரின் தாயாருக்கும் விட்டலின் அவதாரமாகக் காட்சி அளித்தார். இவ்வாறு பாபா அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி அவர்கள் நம்பிக்கையை அதிகரித்தார். அதன் பிறகு, புரந்தரேவின் தாயாரைப் பார்க்கும்போதெல்லாம் விளையாட்டாக அவரிடம், 'எப்போது பண்டரிபுரம் செல்லப் போகிறாய்?' என்று கேட்பார். அவரும் சாய் பாபாவிடம், 'தாம் தினமும் ஷீரடியிலேயே விட்டலைத் தரிசிப்பதாகவும், அதனால் பண்டரிபுரம் செல்லவேண்டிய அவசியம் தமக்கு இல்லை' என்றும் கூறி, பாபாவின் மேல் தமக்கு இருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தினார்.


இதேபோல் வேறு சில பக்தர்களுக்கு அவர் ஶ்ரீராமராகவும் காட்சியளித்திருக்கிறார். பாபாவின் பக்தரான கிராம முன்சீப், ஒருமுறை பாபாவைக் காண ஷீரடிக்கு வந்தார். தன்னுடன் வரும்படி தன் நண்பரும் ராமபக்தருமான டாக்டர் ஒருவரை அழைத்தார். ஆனால், அந்த நண்பரோ, தாம் ஷீரடிக்கு வரப்போவதில்லை என்றும், மசூதியில் வசிக்கும் பாபாவை வழிபடுவதில் தனக்கு விருப்பம் இல்லையென்றும் கூறிவிட்டார். பாபாவின் பக்தரான கிராம முன்சீப், தன் நண்பர் கூறியதைக் கேட்டு, ''அப்படியெல்லாம் உங்களை யாரும் வற்புறுத்த மாட்டார்கள்'' என்று கூறி, ஒருவழியாக டாக்டர் நண்பரை அழைத்துக்கொண்டு ஷீரடிக்குச் சென்றார். என்ன ஆச்சர்யம்! துவாரகாமாயிக்குச் சென்று பாபாவைக் கண்ட டாக்டர், ஓடோடிச் சென்று பாபாவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.


இதைப் பார்த்த கிராம முனிசீப்புக்கு மிகுந்த ஆச்சர்யம் ஏற்பட்டது.  பாபாவைத் தரிசித்து வெளியே வந்தவுடன், அவர் டாக்டரிடம், ''மசூதியில் இருக்கும் ஒருவரின் காலில் விழமாட்டேன் என்று கூறினீர்கள்; பிறகு எப்படி அவரை வணங்கினீர்கள்?' என்று கேட்டார். 
அதற்கு அந்த டாக்டர், "நான் தினமும் வணங்கும் என் ஶ்ரீராமரின் பாதங்களில்தானே விழுந்து வணங்கினேன்'' என்று கூறினார். மேலும், பாபா ஒரு முகம்மதியர் என்று தாம் எண்ணியது மிகவும் தவறு என்று வருந்தியதுடன், அவர் அனைத்து தெய்வங்களின் சங்கமம் ஆவார் என்பதைத் தாம் புரிந்துகொண்டதாகவும் கூறினார். இதைக் கேட்ட கிராம முனிசீப் மிகவும் மனம் மகிழ்ந்தார். இவ்வாறு சாயிநாதர் டாக்டரின் மனதில் நம்பிக்கையைத் தோற்றுவித்தார். மேலும், அந்த டாக்டர் பரமானந்த நிலையை அனுபவிக்கும்படிச் செய்தார் பாபா. அவர் தன் ஊருக்குச் சென்று கிட்டதட்ட 19 நாள்கள் வரை பரமானந்த நிலையை அனுபவித்தார்.


 



Trending Articles

Sponsored