எங்கும் சிவமயமாக ஜொலிக்கும் திருமயிலையில் பங்குனித் திருவிழா திருத்தேர் பவனி! #VikatanPhotoStorySponsoredராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டப் பழைமையைக் கொண்ட திருமயிலையில் இன்று பங்குனித் திருவிழாவையொட்டி திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் கபாலீஸ்வரர் எழுந்தருளியிருந்த பிரமாண்ட திருத்தேர் உலாவரும் காட்சி இது.

தந்தையின் தோளின் மீதமர்ந்தபடி, தாய் தந்தை ஒன்றுமில்லாத பிறப்பிலா பெருமானை, சிவனை தரிசிக்கும் குழந்தை. ஞானசம்பந்தனுக்கு ஞானப்பாலை ஊட்டச் செய்த ஈசன் இந்தக் குழந்தைக்கும் அருளட்டும்.

Sponsored


Sponsored


அழகே வடிவான அலங்காரத் தேர் மயிலையின் நான்கு மாடவீதிகளிலும் ஊர்ந்து வரும் அழகுக் கோலம் இது. பிரமாண்டமான இந்தத் தேரினை வியந்து நோக்கும் பக்தர்கள் கூட்டம்.

இனியொரு பிறவியில்லாதபடி, பேரருள் மோட்சத்தை அளிக்கும் கபாலீஸ்வரனை வீதியுலா வரச்செய்ய வடம் பிடித்திழுக்கும் பக்தர்கள் கூட்டம் அலைகடலைப்போல ஆர்ப்பரித்து நிற்கிறது.

மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் ஓடமாகக் காட்சிதருகிறது கபாலீஸ்வரரின் திருத்தேர். எல்லோருக்கும் அருள்பாலிக்க வீதி வீதியாக வந்து பேரருள் செய்கிறார் ஈசன்.

மறைகளும் புகழ்ந்திடும் மயிலையில் உறைந்திடும் மாமணியான கபாலீஸ்வரரின் விபூதிப் பிரசாதத்தை பயபக்தியோடு வாங்கிக்கொள்ளும் பக்தர்கள்.

`ஆட வல்லான்; எம்மை ஆள வல்லான்; ஓர் ஈடு இல்லான் ...’ என மாணவியர் கூட்டம் அகமகிழ்ந்து ஈசனை நோக்கி ஆடும் திருக்காட்சி.

பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களும் வரிசையாக பவனி வரும் அருட்காட்சி. `வானவர் போற்றிடும் கயிலையே மயிலைதான்’ என்பதைச் சொல்லாமல் சொல்லும் உன்னதக் காட்சி.

முந்திச் செல்லும் தொந்தி கணபதியின் திருத்தேர். விக்கினங்களை எல்லாம் தீர்த்து வாழ்வில் வழியை உண்டாக்கவோ கணநாதர் முந்திச் செல்கிறார்?!

பக்தர்களின் கூட்டத்தில் ஆடிவரும் திருத்தேர்கள். மாலும் அயனும் தொழுதிடும் மயிலையில் காலனை உதைத்த ஈசன் பக்தர்களுக்காக விரைந்து வருகிறார்.

எல்லா ஆட்டங்களும் கடைசியில் சரணாகதியில்தான் முடிவடைகின்றன என்பதை உணர்த்துமாறு, ஆடிக்கொண்டிருந்த மாணவியர்கள் கரம் உயர்த்தி ஈசனை வணங்கும் கோலம்.

அடியார்கள் கூட்டம், உரத்தக் குரலில் தமிழ் வேதமான தேவார, திருவாசகத்தை ஓதிவரும் திருக்காட்சி. இணையிலா ஈசன் இவர்களுக்கு அருள் புரியட்டும்.

கரம் குவித்து வணங்கும் மாணவியின் அழகு முத்திரை. பொன்னார் மேனியனை, பிறைமௌலிப் பெம்மானை வணங்கும் இந்த அழகு மயில் சக்தியின் வடிவம்தானே?!

வான் முட்டும் வடிவத் திருத்தேர் மெள்ள மெள்ள அசைந்து வருகிறது. விண்ணவர் ஏத்திடும் விமலன்; வெள்விடை ஏறிடும் வேதநாயகன் இதோ உங்களை நாடிவருகிறார் என்ற பூரிப்பில் திருத்தேர் அசைந்து வருகிறது.


கூட்டத்துக்கு நடுவே ஆட்டம், இது புகைப்படம் சொல்லும் செய்தி மட்டுமல்ல. நம்முடைய நிலையும் அதுதான். கூட்டத்துக்கு நடுவே விதவிதமாக ஆடும் நம் நிலையை ஆண்டவனே அறிவார்!

வேதத்தின் பொருளான விண்ணமுதனை, சங்கநாதம் கொண்டு துதிக்கிறார் இந்த பக்தை. மின்னொளிர் மேனியன்; மேதினி காத்திடும் தூயவன் எல்லோரையும் காக்கட்டும்.

வழியெங்கும் கற்பூர ஆராதனைகள்! எளியோர்க்கு எளியனான ஈசன் எல்லோரின் வேண்டுதல்களையும் கேட்டு அருள் புரிவார். மனமே நிம்மதியாக இரு.

பிள்ளைகளைச் சுமந்த தந்தை. தந்தையின் கரங்களில் பிள்ளைகள் எப்படி நிம்மதியாக, பாதுகாப்பாக உணர்கிறார்களோ, அப்படியே கபாலீஸ்வரரின் திருக்கரத்தில் நாமும் இருக்கிறோம் என்பதை உணர்வோம்.

எங்கும் சிவமயமாக ஜொலிக்கும் திருமயிலை. 'இடபமதில் வரும் இசை வடிவானவர்; இன்று திருத்தேரில் பவனி வருகிறார்' என்று ஆச்சர்யத்தில் கூடியுள்ள கூட்டமிதோ?

]Trending Articles

Sponsored