பெண் வேடத்தில் பக்தர்கள்... குழந்தைகளுக்கு வாழையிலைப் படுக்கை... சில விநோத வேண்டுதல்கள்!



Sponsored



`னமார வேண்டிக்கொண்டால், வேண்டியது கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொள்கின்றனர். விளக்கேற்றுதல், பூமாலை சார்த்துதல், முடி காணிக்கை கொடுப்பது, அபிஷேக ஆராதனைகள் செய்வது என்று பக்தர்கள் பல வகையான வேண்டுதல்களைச் செய்கின்றனர். ஆனால், சில விநோதமான வேண்டுதல்களும் இருக்கவே செய்கின்றன. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையையொட்டியே அவர்களின் வேண்டுதல்களும் நைவேத்தியங்களும் அமைந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், அந்த விநோத வேண்டுதல்களிலுள்ள ஆத்மார்த்தமான பக்தியை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

சில விநோத வேண்டுதல்கள்...

கேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்திருக்கிறது கொட்டாங்குளங்கரா தேவி கோயில். இந்தக் கோயிலில் பங்குனி மாதம் சமயவிளக்குத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண் வேடமிட்டுக்கொண்டு கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். இப்படிச் செய்தால் தங்களுடைய வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றுவாள் என்று நம்புகிறார்கள்.

Sponsored


Sponsored


கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வடக்கன்பரவூர் என்ற ஊரில் சரஸ்வதிதேவியின் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு அர்ச்சனை செய்வதாக வேண்டிக்கொள்பவர்கள், அர்ச்சனைப் பொருள்களை ஒரு தட்டில் வாங்கி, அர்ச்சனை செய்கிறார்கள். பிறகு அந்த அர்ச்சனைப் பிரசாதத்தை தங்களுடன் கொண்டு செல்லாமல், கோயிலிலுள்ள உண்டியலில் போட்டுவிடுகிறார்கள். அர்ச்சனைப் பிரசாதத் தட்டைக் கொண்டு சென்றால், தங்களுடைய வேண்டுதல் பலிக்காது என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகிலிருக்கும் கோடிகல்லின காடு பசப்பா கோயிலில் இருக்கும் சிவபெருமானுக்குக் காணிக்கையாகக் கற்களைக் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்து வேண்டிக்கொள்கிறார்கள். அப்படி வேண்டிக்கொள்பவர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலத்திலுள்ள கற்களைத்தான் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

சேலம் - ஏற்காடு சாலையில் அரசு ஐ. டி. ஐ.-க்கு அருகிலிருக்கும் பூட்டு அய்யனார் கோயிலில், பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களைச் சொல்லி, ஒரு பூட்டை வாங்கி கோயில் சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பிகளில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் திரும்ப வந்து பூட்டினைத் திறந்து, அதற்கென இருக்கும் பெட்டியில் போட்டுவிடுகிறார்கள்.

தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இன மக்கள், தங்கள் குலதெய்வமான காந்தேவுக்கு தை மாதத்தில் விமர்சையாக விழா கொண்டாடுவார்கள். இதில் நோய்கள் தீரவும், புத்திர பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் நல்லெண்ணெய் குடித்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். வேண்டுதலின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு லிட்டர் நல்லெண்ணெய் வரை குடிப்பார்கள்.

திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தோமையார்புரம் ஊரில் தோமையார்க்கரடில் அமைந்திருக்கும் புனித தோமையாரை வழிபட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தங்கள் நோய்களும் வறுமையும் நீங்கவேண்டும் என்பதற்காக, விளக்குமாறுகளைக் காணிக்கையாக அளித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பொள்ளாச்சி ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலில் இருக்கும் நீதிக்கல் என்ற அம்மனின் சொரூபத்துக்கு, காய்ந்த மிளகாயை அரைத்துப் பூசுகிறார்கள். இதனால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கிறது முத்துமாரி அம்மன் ஆலயம். இந்தக் கோயிலில் பூசாரி கரகம் எடுத்துக்கொண்டு வரும்போது, பக்தர்கள் தரையில் படுத்துக்கொள்கிறார்கள். பூசாரி அந்தப் பக்தர்களின் மீது நடந்து வருவார். கரகம் எடுத்தபடி பூசாரி தங்கள் மீது நடந்துசென்றால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் காணப்படுகிறது.

நாமகிரிப்பேட்டை சீராப்பள்ளி கிராமத்தில் இருக்கும் மாரியம்மனின் கோயிலில், வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள், கோயில் பூசாரியின் கையால் சாட்டையடி வாங்கிக்கொள்கிறார்கள். அப்படிச் சாட்டையடி வாங்கினால், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை.

வத்தலக்குண்டு அருகிலுள்ள சேவுகம்பட்டி கிராமத்தில் சோலைமலை அழகர்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தை மாதம் நடைபெறும் திருவிழாவின் 3-ம் நாள், வாழைப்பழங்களைச் சூறைவிட்டு வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் கூடை கூடையாகக் கொண்டு வந்து சூறைவிடும் வாழைப்பழங்களை, வெளியூர் பக்தர்கள் பிரசாதமாக நினைத்து வாங்கிக்கொள்கிறார்கள்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகேயுள்ள எம்.கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது ஓடைமந்தை காளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் திருவிழா நடக்கும்போது, பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து வாழையிலையில் படுக்க வைக்கின்றனர். வாழையிலையில் படுத்திருக்கும் குழந்தைகளை, கோயில் பூசாரி தாண்டிச் செல்வார். அதனால், தங்களுடைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா தோஷங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

இப்படி பக்தர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப வேண்டுதல்கள் அமைந்திருக்கின்றன. இவையெல்லாம் தொன்றுதொட்டு வரும் அவர்களின் வாழ்க்கைமுறையை ஒட்டியே நடைபெற்றுவருகிறது. வேண்டுதல் எப்படியிருந்தாலும் உறுதியான நம்பிக்கைதான் முக்கியம்.



Trending Articles

Sponsored